

மத்திய பிரதேசத்தில் உள்ள கான்ஹா வனத்தில் வாழ்ந்து வந்தது ஒரு பத்தடி வேங்கை புலி டர் டர் டெர்ரர். அந்த வனப்பகுதியில் வாழ்ந்த கடைசி சிங்கம் 'கிர் கிர் கிங்கர்' வாரிசில்லாமல் இறந்த போது, டர் டர் டெர்ரர் தன்னையே காட்டு ராஜாவாக தனக்கு தானே முடிசூட்டிக் கொண்டு அராஜக ஆட்சி செய்ய தொடங்கியது.
இதற்கு முன் ஆட்சி செய்த சிங்க ராஜா ஏற்படுத்தியிருந்த முன்னுதாரண படி மிருகங்களை தன் குகைக்கே வர வழைத்து அடித்து தின்ன ஆரம்பித்தது.
தன் தனிப்பட்ட செயலராளரான நரி நம்முவை அழைத்து ஒவ்வொரு வாரமும் ஒரு மெனு தயாரிக்க செய்தது. ஞாயிறு புள்ளிமான், திங்கள் முயல் மூன்று, செவ்வாய் குரங்கு நாலு, புதன் காட்டுப்பன்றி, வியாழன் காட்டெருமை, வெள்ளி மலை ஆடு, சனிக்கிழமை வயிறுக்கு ஓய்வு. அதாவது, விரதம். ஆபத்து நிறைந்த காடு தான் இருந்தாலும் அமைதியாக வாழ பழகிக் கொண்ட சாக உயிரினங்களுக்கு புலியின் வெறிச்செயல் வேதனை அளித்தது.
ஒருநாள் மதியம் காட்டின் மைய பகுதியில் இருந்த ஒரு ஆலமரத்தடியில் கூட்டம் போட்டு ஆலோசனை செய்தன. கூடியிருந்த மிருகங்கள் ஏதேதோ உபாயங்கள் சொல்லின. ஆனால், அவை எதுவும் நடைமுறை படுத்தமுடியாதவையாக இருந்தன. அப்போது ஒரு குரங்கு எழுந்து சொன்னது. "இந்த டர் டர் டெர்ரரை ஒழிக்க நான் ஒரு புஸ் புஸ் ராஜ நாகனை கொண்டு வருகிறேன். இவன் என் நண்பன். ஒருமுறை முள் வேலியில் சிக்கி தவித்த இவனை நான்தான் நாசூக்காக விடுவித்தேன்.
அன்று நாகன் தரையில் அடித்து சத்தியம் செய்து சொன்னான், 'நன்றி குரங்கு..! திரும்ப உதவி செய்ய எப்போதும் காத்திருப்பேன்' என்று. இப்போது அவனை நாட நேரம் வந்துவிட்டது.
அவனை கூட்டி வருகிறேன். அவன் நீளம் பதினெட்டு அடி. போடுவான் ஒரு போடு புலியின் கதை முடிந்துவிடும்."
மறுநாள் காலையே நாகராஜனுக்கும் குரங்கு குணாவுக்கும் சந்திப்பு நிகழ்ந்தது புலி டர் டர் டெர்ரரின் அட்டகாசங்களை கேட்ட நாகராஜன் பட படத்தது; படமெடுத்தது. "வா..! இப்போதே போகலாம். எண்ணி விடுகிறேன் அவன் கோடுகளை" என்று சொல்லி புலி குகையை நோக்கி குரங்குடன் விரைந்தது. அப்போது அதன் விஷப் பையில் அரை லிட்டர் விஷம் சேர்ந்திருந்தது. கடிபட்டால் டர் டர் டெர்ரர் வாயில் நுரை கக்கி அரைமணியில் அம்பேலாகிவிடுவது உறுதி.
புலி மானை தின்று விட்டு புல் மெத்தையில் படுத்திருந்தான் டர் டர் டெர்ரர். கிராண்ட் ட்ரங்க் ரயில் விந்திய மலை டனலில் நுழைவது போல, ராஜநாகன் புலியின் குகையில் நுழைந்தான்.
பதினெட்டடி ராஜ நாகத்தை பார்த்த பத்தே அடி புலியின் உடலிலிருந்து கோடுகள் பயத்தில் நெளிந்தன. மின்னல் வேகத்தில் நாகன் புலியின் இடுப்பில் போட்டான். அதன் உடலில் விஷம் எரிமலை குழம்பு போல பாய்ந்தது. தரையில் புரண்டு துடித்தது புலி.
புலியின் ஆவி புவியை விட்டு போகும் வரையில் இருந்து விட்டு வெளியே வந்தது ராஜ நாகம். குரங்கு குணா காத்திருந்தது இலையில் ஒரு டஜன் முட்டைகளுடன். அவற்றை ஏற்க ராஜநாகம் மறுத்து விட்டது. "என் உணவை நானே தேடி கொள்கிறேன். என்னை நாடி அது வரவேண்டாம்" என சொல்லி இடத்தை விட்டு நகர்ந்த நாகத்தை இடை மறித்து, "எங்களது அடுத்த அரசனை நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தது குரங்கு குணா.
அதற்கு நாகம், "ஒரு யானையிடம் மலர் கொடியை கொடுங்கள். அது யார் கழுத்தில் அதை போடுகிறதோ அதையே ராஜாவாக ஆக்குங்கள்" என்று சொல்லி போயிற்று. அது சொன்னபடி யானையின் துதிக்கையில் மலர் தாங்கிய கொடி கொடுக்கப்பட்டது.
யார் கழுத்தில் அதை அந்த யானை போட்டிருக்கும்? ஊகியுங்கள்?
தன் கழுத்திலேயே தான்!