குட்டீஸ்களே! விநாயகர் சதுர்த்தியை எப்படி சுவாரஸ்யமாக கொண்டாடுவது? தெரிந்து கொள்ளுங்கள்..!

பிள்ளையார் சுழி தோன்றிய வரலாறு, தோப்புக்கரணம் போடுவதன் அறிவியல் மற்றும் விதை விநாயகர் சிலைகளின் சிறப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
விநாயகர் சதுர்த்தி | Vinayagar Chaturthi
விநாயகர் சதுர்த்தி | Vinayagar ChaturthiImage credit: Chatgpt
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on

எங்கு பார்த்தாலும் விநாயகர் சிலைகள் வித விதமான வடிவத்தில் எழுந்தருளி உங்களை குஷிபடுத்தப்போகிறார். அம்மா பல வகையான கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்து உங்களுக்கு சாப்பிட தருவார்கள் இல்லையா..? நீங்களும் விநாயகரை பார்க்க ரெடி தானே!

குட்டீஸ்களா.. நீங்கள் எதை எழுத ஆரம்பிக்கும் பொழுதும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தான் எழுத ஆரம்பிப்பீர்கள். பிள்ளையார் சுழி போடாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டீர்கள் அந்தப் பிள்ளையார் சுழி வந்தது எப்படி தெரியுமா ?நாம் எதை எழுத துவங்கினாலும் நாம் மேற்கொண்டும் செயல் செம்மையாக முடிய வேண்டும் என்பதற்கு பிள்ளையாரின் துணை வேண்டி இந்த பிள்ளையார் சுழி போடுகிறோம். பிள்ளையாரின் வடிவம் ஓங்கார வடிவம் அந்த ஓங்கார எழுத்து மருவி பிள்ளையார் சுழி ஆயிற்று.     

ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்து எழுத்தாயிற்று. ஒலி வடிவை குறிப்பது வட்டம் '0' வரிவடிவை குறிப்பது கோடு இந்த இரண்டும் சேர்ந்துதான் பிள்ளையார் சுழியாயிற்று. இது ஒலி வடிவம் நாதம் என்றும், வரி வடிவம் விந்தும் என்றும் சொல்லுவார்கள் உயிரும் உலகமும் உண்டாக இவ்விரண்டும் வேண்டும்.

இந்த எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து உள்ளத்தை அசைக்க உள்ளம் நம்முடைய கையை அசைக்க உருவாவதுதான் பிள்ளையார் சுழி. எழுத்துப்பணி முட்டின்றி முடிய கடவுளை வேண்டி அதாவது  விநாயகரை வேண்டி இடப்படும் குறியே பிள்ளையார் சுழி ஆகும்.

விநாயகரை பார்த்தவுடன் என்ன செய்வோம் கோவிலில் அவர் முன்னால் நின்று தோப்புக்கரணம் போடவும் செய்வீர்கள். விநாயகருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுவோம் என்பது உங்களுக்கு தெரியுமா ?

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் விகட கதை: புதுமையான ஓவியம்! 
விநாயகர் சதுர்த்தி | Vinayagar Chaturthi

அகஸ்திய முனிவர் ஆழ்ந்த தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது விநாயகர் காக்கை உருவில் வந்து அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரை கவிழ்த்துவிட்டார். அது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது காகம் கவிழ்த்துதான் தோன்றிய ஆறு என்பதால் காவிரி என்று பெயர் பெற்றது. அகஸ்திய முனிவர் தவம் கலைந்து விழித்துப் பார்த்தார் தம் கமண்டலம் கவிழ்க்கப்பட்டிருப்பதை அறிந்தார். அப்போது அகஸ்தியர் முன் விநாயகர் சிறுவன் உருவில் தோன்றி சிரித்த வண்ணம் நின்றிருந்தார் அதனால் கோபம் கொண்ட அகஸ்தியர் ஏன் என் கமண்டலத்தை கவிழ்த்தாய் என்று கோபத்தோடு கேட்டுவிட்டு அவனைக் குட்ட  முற்பட்டார்.

உடனே விநாயகர் சுயரூபம் கொண்டு அகஸ்தியருக்கு காட்சி அளித்தார். அகஸ்திய முனிவர் விநாயகரை குட்ட முற்பட்டோமே என்று வருந்தி தமக்குத்தாமே குட்டிக்கொண்டு தப்பு தப்பு என்றார். அன்று முதல் விநாயகர் முன் நின்று பக்தர்கள் குட்டிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. 

விநாயகர் சதுர்த்தி | Vinayagar Chaturthi
விநாயகர் சதுர்த்தி | Vinayagar ChaturthiImage credit: Gemini AI

கஜமுகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் பாதக செயல் செய்து வந்தான். அவன் தேவர்களை எல்லாம் கொடுமைப்படுத்தி அவர்களை தம் முன்னால் தோப்புக்கரணம் போட வேண்டும் என ஆணையிட்டான். தேவர்களும் பயந்து தினமும் அவன் முன் தோப்புக்கரணம் போட்டு வந்தார்கள் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவன் பிள்ளையாரை படைத்தார். பிள்ளையார் மனிதனும் அல்ல; மிருகமும் அல்ல; அவர் ஆணும் அல்ல; பெண்ணும் அல்ல; எனவே கஜமுகாசுரனை அழித்து வரும்படி பிள்ளையாரை சிவன் ஏவினார். பிள்ளையார் வீட்டில் இருப்பவர் அல்ல; முச்சந்தியில் அமர்ந்திருப்பவர். அவரைக் கண்ட கஜமுகன், "டேய் சிறுவா..! எனக்கு தோப்புக்கரணம் போடு என்றான். அதனால் வெகுண்டு வந்த பிள்ளையார் தம் ஒரு கொம்பை உடைத்து அவனை குத்திக் கொன்றார்.

அவன் எந்த ஆயுதத்தாலும் தான் அபகரிக்கக் கூடாது என்று வரம் பெற்றவன் ஆயிற்றே. அதனால் தம் தந்தத்தால் விநாயகர் குத்திக் கொன்றார்.

கஜமுகாசுரன் முன்பு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த தேவர்கள் அவன் மாண்ட பின் விநாயகர் முன் தோப்புக்கரணம்  போடத் தொடங்கினர்.

குட்டீஸ்களா நீங்களும் விநாயகரை பார்த்தவுடன் இரு காதுகளையும் அதாவது வலது கையால் இடது காதையும் இடது கையால் வலது காதையும் பிடித்துக் கண்டு உட்கார்ந்து எழுந்து செய்ததே தோப்புக்கரணம். விநாயகர் முன் மூன்று முறை அல்லது உங்களுக்கு எத்தனைமுறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தோன்றுகிறதோ போடலாம்.

தினமும் தோப்புக்கரணம் போடுவதால் அது இந்த காலத்தில் சூப்பர் பிரைன் யோகா என்று கூறுகிறார்கள். ஏனென்றால் தோப்புக்கரணம் போடுவதால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஞாபக சக்தியும் உடல் புத்துணர்ச்சியும் கிடைக்கிறதாம். இதோடு சேர்ந்து  குட்டீஸ்களா உங்களுக்கு மூளைக்குச்சீரான ரத்தம் கிடைத்து நினைவாற்றல் மற்றும் கவனம் பெறுகிறதாம். கவலை மற்றும் சோர்வு எல்லாம் விநாயகர் பார்த்தவுடன் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் தான் நீங்கள் தோப்புக்கரணம் போடுகிறீர்கள் அல்லவா..!

அது கூட ஒரு வித யோகா தான் என்று இப்பொழுது கண்டுபிடித்து இருக்கிறார்கள். உடலுக்கு தோப்புக்கரணம் போடுவதால் சிறுவர்களாக உங்களது உடலுக்கும் நன்மை விநாயகரின் பரிபூரண அருளும் கிடைத்து நீங்கள் எல்லா பாடங்களிலும் முதல் மார்க் எடுத்து பள்ளியில் சிறந்த மாணவ மாணவிகளாக பெயரும் பெறலாம். தோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது பார்த்தீர்களா..

விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார் கோவிலுக்கு சென்று பிள்ளையார் முன்பு எத்தனை முறை தோன்றுகிறதோ அத்தனை முறை தோப்புக்கரணம் போடுங்கள். பிள்ளையாரின் பரிபூரண அருள் கிடைக்கும். அதோடு பிள்ளையாருக்கு ஹாப்பி பர்த்டே சொல்லிவிட்டு வாருங்கள்!

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா..! விநாயகர் பிறந்த  கதை தெரியுமா? 
விநாயகர் சதுர்த்தி | Vinayagar Chaturthi

குட்டீஸ்களா விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வாங்கி விட்டீர்களா?

விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வாங்க போகப் போகிறீர்களா? உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி யாராவது அப்படி.. ஆனால் உங்கள் ஊரில் களிமண் விதை விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறதா? அப்படி களிமண் விதை விநாயகர் சிலைகள் விற்றால் வாங்கி வரச் சொல்லுங்கள் நீங்களும் விநாயகர் சிலை வாங்க கூடப் போனால் இப்படி வாங்க சொல்லுங்கள். 

இந்த களிமண் விதை விநாயகர் சிலைகள் நாவல் விதை நெல்லி விதைகளை வைத்து செய்யப்படுகிறது. இந்த களிமண் விதை விநாயகர் சிலைகள் வாங்கி அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அருகம்புல் மாலை சாற்றி பூஜை செய்த பிறகு அதை தண்ணீரில் கரைத்து உங்கள் வீட்டு தோட்டத்தில் அல்லது கோவிலில் அல்லது பள்ளியில் அந்த தண்ணீரை ஊற்றினால் அந்த களிமண் விநாயகர் சிலைக்குள் இருக்கும் நாவல் மர விதை மற்றும் நெல்லி மரம் விதைகள் பிறகு செடியாக வளர்ந்து மரமாகி உங்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் நாவல் பழம், நெல்லிக்காய் போன்றவை சாப்பிட கிடைக்கும்.

மரங்கள் வளர்வதால் புவி வெப்பமயமாதல் தடுப்பு ஏற்படும். சுற்றுச் சூழல் மாசு படாமல் இருக்கும். கலர்கலரான விநாயகர் சிலைகள் வாங்கி பூஜை செய்து தண்ணீரில் கரைத்து ஆற்றில் வீட்டு கிணற்றில் விடுவதால் தண்ணீர் மாசுபடும் சுற்றுச் சூழலும் கெடும். என்ன குட்டீஸ்களா..! இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு களிமண் விதை விநாயகர் சிலைகள் வாங்க தயாராகி விட்டீர்களா !

logo
Kalki Online
kalkionline.com