

கடல் வாழ் உயிரினமான திமிங்கிலம் பற்றிய தகவல்கள் எப்போதும் வியப்பை தருவதாகவே இருக்கும். உருவத்தில் பெரியது; பாலூட்டி; கூட்டமாகவே இருக்கும் போன்ற செய்திகள் நாம் அறிந்திருப்போம்.
மற்றொரு தகவலாக அம்பர் கிரீஸ் பற்றி தெரிந்து கொள்வோம். திமிங்கலத்தின் உடலில் இருந்து வெளியேறும் ஜீரணிக்க முடியாத பொருட்கள் திமிங்கலத்தின் குடலில் இருந்து உருவாகிறது. இது திமிங்கலத்தின் வாந்தி ஆகும்.
திமிங்கலம் கடலில் பலவற்றை உண்ணும். அவை அனைத்தையும் அவற்றால் ஜீரணிக்க முடியாது. சிலவற்றை அது வாந்தியாக வெளியேற்றுகிறது. அப்படி வெளியேற்றப்படும் வாந்திக் கழிவுகளே அம்பர் கிரீஸாக கடலில் மிதக்கின்றன.
அவற்றின் மீது சூரிய ஒளி படுவதினாலும் மற்றும் கடலின் உப்பு நீரில் ஊறிக் கொண்டிருப்பதாலும் அவை கறுப்பு மற்றும் சாம்பல் நிற அம்பர் கிரீஸ்-ஆக உருவாகின்றன. இவற்றை சாதாரணமாக நினைக்க முடியாது. ஏனெனில், இது கிடைத்தால் புதையல் கிடைத்தது போல் மகிழ்ச்சியடைகின்றனர்.
திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ், உலக அளவில் உயர் ரக வாசனைத் திரவியங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இது உயர்தரமான வாசனை திரவியங்களை, மருந்து பொருட்களை தயாரிக்க உதவுகிறது.
அதைவிட முக்கியமாக பாலியல் தொடர்பான உடல் பிரச்சனைகளுக்கான மருந்தாக பயன்படுகிறது. சீனாவில் பாலியல் உணர்வைத் தூண்டும் டானிக்காக அம்பர்கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது.
அம்பர்கிரீஸ் அரிதாகவே கிடைக்கிறது. எனவே அதன் விலையும் மிக அதிகம். தங்கத்தின் விலையை விட விலை அதிகமாக இருப்பதால், இது 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என அழைக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு ஒரு கோடிக்கும் மேல் போகிறது. விலை கூட கொடுத்தாவது இதை வாங்க ஆர்வமாக பலர் உள்ளனர். இதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.