
கடல் பாம்புகள் நிலத்தில் இருக்கும் பாம்புகளை விட அதிக விஷத்தன்மை கொண்டவை. அதற்கு முதல் காரணம் கடல் பாம்புகள் தங்கள் இரையை தண்ணீரில் கொத்தும் போது, அந்த விஷம் நிறைய தண்ணீரில் கலக்கிறது. எனவே அதனுடைய விஷம் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். மேலும் கடலில் வாழும் உயிரினங்கள் தண்ணீரில் மிக எளிதாக தப்பி போக முடியும். தப்பிக்கும் முன் பாம்பு தனது இரையை விரைவாகவும் திறமையாகவும் பிடிக்க வேண்டும். எனவே அதனுடைய விஷம் அதிக வீரியம் உள்ளதாக இருக்கிறது.
கடல் பாம்புகள் முக்கியமாக ஈல்கள் மற்றும் மீன்களை உண்கின்றன. அவை மிக வேகமாக நீந்தும். பாம்புகளின் விஷம் மீன்களை விரைவாக முடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால் பாம்பு அவற்றை வேகமாக பிடித்து சாப்பிடுகிறது.
நிலத்தில் வாழும் பாம்புகள் வேகமாக நகராத விலங்குகளை உண்ணுகின்றன.
கடல் பாம்புகளின் விஷத்தில் நியூரோடாக்ஸின்கள் எனப்படும் சிறப்பு ரசாயனங்கள் உள்ளன. அவை இரையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இந்த நச்சுக்கள் அவற்றை நீந்த முடியாமல் செயல் இழக்க செய்து விடும். இதனால் அவற்றை வேட்டையாட பாம்புக்கு மிகவும் எளிதாக இருக்கிறது.
நிலத்தில் வாழும் நாகப்பாம்பை விட கடல் பாம்புகள் பத்து மடங்கு வீரியம் கொண்ட விஷத்தை உற்பத்தி செய்கின்றன. கடல் பாம்பின் விஷம் என்சைம்கள், புரதங்கள் மற்றும் பிற சேர்மங்களை கொண்டுள்ளன. இது இரையை அசையாமல் பிடித்து வைக்கின்றன. மேலும் பாம்பின் செரிமானத்திற்கும் உதவுகிறது.
கொக்குக் கடல் பாம்பின் உடலில் நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதத்தை உண்டாக்கும் விஷம் உள்ளது. சில கடல் பாம்புகள் ஒரே தடவையில் அதிக விஷத்தை வெளியிடும். கடல் பாம்புகள் குறுகிய கோரை பற்களை கொண்டுள்ளன. வழுக்கும் மீன்களை பிடித்து கடிக்கும் போது விஷத்தை விரைவாக செலுத்த உதவுகின்றன.
நிலத்தில் இருக்கும் பாம்புகள் மனிதர்களை அதிகமாக கடிக்கக்கூடும். ஏனென்றால் அவற்றை மனிதர்கள் அதிகமாக எதிர்கொள்ள நேரிடும். கடல் பாம்புகள் வலிமையான விஷத்தை கொண்டு இருந்தாலும் மக்களை அச்சுறுத்துவது இல்லை. அவை மனிதர்களை தவிர்க்கவே விரும்புகின்றன. கடலில் நீந்தும் போது பாம்புகளை கண்டு விட்டால் அமைதியாக அவற்றை விட்டு விலகிப் போவது நல்லது.
நிலப் பாம்புகளைப் போல் இல்லாமல் கடல் பாம்புகள் சிறிய மென்மையான செதில்களை கொண்டுள்ளன. இது நீந்தும் போது உராய்வை குறைக்க உதவுகிறது. கடல் பாம்புகள் பக்கவாட்டில் தட்டையான உடல்களை கொண்டுள்ளன. அவை தண்ணீரில் நீந்த உதவுகின்றன. அவற்றின் வால் துடுப்பு போன்று வடிவத்தில் உள்ளது.
கடல் பாம்புகள் நீளமான நுரையீரலைக் கொண்டுள்ளன. அவை டைவிங் செய்யும் போது நீண்ட நேரம் சுவாசத்தை இழுத்து பிடிக்க உதவுகிறது. சில வகையான பாம்பு இனங்கள் இரண்டு மணி நேரம் வரை கூட நீரில் மூழ்கி இருக்கும். மேலும் அவை தோல் மூலம் ஆக்ஸிஜனை உறிஞ்ச முடியும். கடல் பாம்புகளின் வாயில் சுரப்பிகள் உள்ளன. கடல் நீரில் இருந்து அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவுகின்றன.
கடல் பாம்புகள் நீண்ட காலமாக கடலில் வாழ்கின்றன. அதனால் தங்கள் இரையை சிறப்பாக பிடிக்க தேவையான வலுவான விஷத்தை உருவாக்கிக் கொண்டுள்ளன. மேலும் கடலில் பல விலங்குகள் உணவுக்காக போட்டியிடுகின்றன. கடல் பாம்புகள் போதுமான அளவு சாப்பிடுவதற்கு மிகவும் திறமையாக வேட்டையாட வேண்டும்! அதற்கு உதவதான் விஷம் வலுவாக இருக்கிறது!