டிசம்பர் மாதம் தொடங்கினாலே கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டம் ஆரம்பம் ஆகிவிடும். எங்கு பார்த்தாலும் ஜொலிக்கும் ஸ்டார் மற்றும் தோரணங்கள் என்று களைக்கட்டும்.... அது மட்டுமா? கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தானே. சான்டா என்றும் சான்டா கிளாஸ் என்றும் அழைக்கப்படும் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா என்ன செய்வார்? அனைவருக்கும் அழகிய பரிசுகளை வழங்குவார் அல்லவா? அவர் ஏன் பரிசுகளை வழங்குகிறார் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் அதை தெரிந்துக் கொள்வோம்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் தொடங்கினாலே பெரிய தொப்பை, சிவப்பு நிற உடை, வெள்ளை தாடி, கையில் பரிசுவுடன் அனைவரையும் மகிழ்விக்க சான்டா கிளாஸ் வலம் வருவார். யார் இந்த சான்டா கிளாஸ்? இயேசு பிறந்த தினத்தில் ஏன் இவர் பரிசுகளை வழங்குகிறார்?
3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயிண்ட் நிக்கோலஸ் என்பவர் தான் சான்டா என்றும் சான்டா கிளாஸ் என்றும் அழைக்கப்படும் ஒரிஜினல் கிறிஸ்துமஸ் தாத்தா. ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் பிறந்து துருக்கி நாட்டில் பிஷப்பாக பணிபுரிந்தவர். தான் வாழ்ந்த காலத்தில், ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை மனதார செய்து வந்தவர்தான் இந்த நிக்கோலஸ். அதுமட்டுமல்லாமல் நிக்கோலஸ் இரக்கம், நல்லுணர்வு மற்றும் குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டும் குணம் நிறைந்தவர்.
எப்போதும் நிக்கோலஸ் தன் மனதிற்கு விருப்பமான விஷயங்களைத்தான் செய்வாராம். அதில் ஒன்றுதான் குழந்தைகளுக்கு பரிசு வழங்குவது. சிவப்பு நிற அங்கியுடன் வெள்ளைக் குதிரையில் அமர்ந்து குழந்தைகளுக்கு பரிசுகளைக் கொடுத்து மகிழ்ந்து வந்துள்ளார்.
இவர் இப்படி உதவி செய்வதற்கு யாரிடமும் எந்த பணமும் வாங்கியது இல்லை என்றும் இவருடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று மக்களுக்கு தேவைப்படக்கூடிய உதவிகளை செய்து வந்தார் என்றும் வரலாறுகள் கூறுகிறது.
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்துள்ள இவர், டிசம்பர் 6 ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார். அதன் பின், இவரை பற்றி பல கதைகள் வெளிவந்தன. அதில் ஒன்றுதான் 'நிக்கோலஸ் கிறிஸ்துமஸ் அன்று இரவில் குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசுகளை வழங்குவார் என்பது'. இது மேற்கத்திய நாடுகளில் முதலில் பரவ தொடங்கியது. அதன்பின்பு, இவரை பற்றி பல கவிதைகள், கதைகள் வெளிவந்த பின்பு இவரின் பெருமைகள் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.
உண்மையில், இயேசுவுக்கும் சாண்டா கிளாஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. சிவப்பு நிற அங்கி அணிந்து எப்படி, செயிண்ட் நிக்கோலஸ் ஏழை எளிய மக்களுக்கு உதவுகளைச் செய்தாரோ, அது போன்று டிசம்பர் மாதம் தொடங்கினாலே பலரும் அவரைபோல் வேடமணிந்து உதவிகளைச் செய்ய தொடங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு ரகசிய பரிசுகளை வழங்குவது நிக்கோலஸ்க்கு பிடித்தமான விஷயம் என்பதால், சான்டா கிளாஸ் வேடமணிபவர்களும் பரிசுகளை வழங்குகின்றனர்.