
பொய்ன் செட்டியா (Poinsettia) என்பது ஸ்புர்க் குடும்பத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாவர இனமாகும். மெக்சிகோவில் கண்டறியப்பட்ட இந்தத் தாவர இனம், இதன் சிவப்பு நிறம் மற்றும் பச்சை நிற மலர்களுக்காக அறியப்படுகிறது. மெக்சிகோவுக்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் தூதரான ஜோயல் ராபர்ட் பொய்ன்செட் என்பவர், மெக்சிகோவில் காட்டு மலராக இருந்த இந்த மலரை முதன் முதலில் தொட்டிகளில் வளர்த்து அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார்.
1900 ஆண்டுக்குப் பின்பு, ஐக்கிய அமெரிக்காவில் வணிக ரீதியாக இத்தாவரத்தைப் பெருமளவில் வளர்க்கத் தொடங்கினர். இந்த மலருக்கான ஆங்கிலப் பெயர் தூதரின் பெயரைக் கொண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தாவரத்தின் மலர்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் இருந்தாலும், இதில் சிவப்பு நிற மலரையே கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த மலரை ‘கிருஸ்துமஸ் மலர்’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.
பொய்ன் செட்டியா மலரும் கிறிஸ்துமஸ் விழாவும் எப்படி ஒன்றிணைகின்றன என்பது பற்றி ஒரு பழைய மெக்சிகன் புராணக்கதை ஒன்று உள்ளது.
ஒரு காலத்தில், மெக்சிகோவில் பெபிடா எனும் ஏழைப் பெண் இருந்தாள். அவளுக்கு கிறிஸ்துமஸ் விழாச் சேவைகளில் குழந்தை இயேசுவுக்குக் கொடுக்கப் பரிசு எதுவுமில்லையே என்ற வருத்தத்துடன் தேவாலயத்திற்குச் சென்றார்.
அவள் சோகத்துடன் இருப்பதைக் கண்ட அவளுடைய உறவினர் பெட்ரோ அவளை உற்சாகப்படுத்த பல வழிகளில் முயன்றார்.
அவர் அவளிடம், “பெபிடா, தன்னை நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் சிறிய பரிசு கூட இயேசுவை மகிழ்ச்சியாக மாற்றும் என்று நான் நம்புகிறேன்." என்றார்.
அதனைக் கேட்ட பெபிடா, சாலையோரத்தில் இருந்து சிறிய கையளவு களைகளை எடுத்து ஒரு சிறிய பூங்கொத்து செய்தாள்.
“இந்தச் சிறிய பரிசை இயேசுவுக்குக் கொடுக்க முடியுமா? இதனை இயேசு ஏற்றுக் கொள்வாரா?” என்று நினைத்தாள்.
தன்னிடமிருக்கும் இந்தப் பூங்கொத்து மதிப்பற்றதாக இருக்கிறதே... என்று நினைத்து வருத்தப்பட்டாள்.
அவள் தேவாலயத்தின் வழியாக பலிபீடத்திற்குச் செல்லும் போது, அவளது உறவினர் பெட்ரோ சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் தேவாலயத்தில் மண்டியிட்டு, அங்கே தான் கொண்டு வந்திருந்த பூங்கொத்தை வைத்து இயேசுவிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று, அவள் வைத்திருந்த பூங்கோத்து ஒளியுடன் சிவப்பு பூக்களாக மலர்ந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் அந்தப் பூங்கொத்தைப் பார்த்தனர்.
அந்த நாளில் இருந்து, பிரகாசமான சிவப்பு மலர்கள், 'புனித இரவின் மலர்கள்' என்று அழைக்கப்பட்டன. அதன் பிறகு, பொய்ன் செட்டியா மலர் கிறிஸ்துமஸ் பயன்பாட்டுக்கான மலராக மாற்றம் பெற்று விட்டது.
பொயின் செட்டியா மலர் மற்றும் இலைகளின் வடிவம் சில நேரங்களில் பெத்லகேம் நட்சத்திரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது ஞானிகளை இயேசுவிடம் அழைத்துச் செல்லும் என்கிற நம்பிக்கையையும் தருகிறது.
இதே போன்று, சிவப்பு நிற இலைகள் கிறிஸ்துவின் இரத்தத்தை அடையாளப்படுத்துகின்றன. வெள்ளை இலைகள் அவரது தூய்மையைக் குறிக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.
பொய்ன் செட்டியா மடகாஸ்கர் நாட்டின் தேசிய சின்னமாகவும் உள்ளது.