"இவ்வளவு பெரிய டப்பா எதுக்குடா?" என்றார் அப்பா. அதைக் கையில் வாங்கும்போதே ஒரு சின்ன சந்தோஷமும் பூத்திருப்பது உதட்டில் தெரிந்தது. படிக்காத மேதை ரங்கன், ரங்காராவுக்கு ஒரு டப்பா ட்ரிபிள் ஃபைவ் சிகரெட் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி….மனதில் ஓடியது எனக்கு.."இருக்கட்டும்ப்பா….இதுலேர்ந்து எடுத்து எடுத்து மட்டைல போட்டு வச்சிக்கலாம்தானே? – என்று சொல்லும்போதே, ஒரு சின்ன ஸ்பூன் வாங்கு உங்கம்மாட்ட…" என்றார். குஷி வந்தாச்சு அப்பாவுக்கு.."அவனே கொடுத்திருக்காம்ப்பா…என்றவாறே அந்த ப்ளாஸ்டிக் ஸ்பூனை எடுத்து அப்பாவிடம் நீட்டினேன். அது வேறயா…? என்றவாறே வாங்கி மூக்குப்பொடியை டப்பாவிலிருந்து ஸ்பூனில் எடுத்து மட்டையில் போட்டுக் கொண்டார். கொஞ்சமாத்தான் போட்டுக்கணும்…இல்லன்னா மட்டையை ஒவ்வொரு தடவையும் விரிக்கும்போது சிதறி வீணாயிடும்…என்று அவரே சொல்லிக் கொண்டார். எதையும் வீணாக்கக் கூடாது" என்ற குணம்..அப்பாவின் முகத்திலிருந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் பார்த்து ரசித்தேன்.."அந்த மில் கார்னர் கடைலதானே வாங்கினே…?" என்றார்.."ஆமாம்ப்பா…அங்கதானே இந்த மாதிரி டப்பால போட்டு பேக் பண்ணி வச்சிருக்கான்…"."அவர்தான் இதுக்கு ஏஜென்ட்…என்ன…இன்னும் கொஞ்சம் சின்ன டப்பாவா வாங்கியிருக்கலாம்…இவ்வளவு பெரிசு வேண்டியதில்லை. நாளாக நாளாக நெடி குறைஞ்சிடுமில்லையா?"."இதுதாம்ப்பா மினிமம்…இதுக்கு மேலே எல்லாம் பெரிசுதான்…இன்னிக்குத் தயார் பண்ணின பொடியை புது டப்பா எடுத்து என் கண் முன்னால அடைச்சுத் தந்தான். நின்னுண்டிருக்கிறபோது நானே நாலு தும்மல் போட்டேன். அவ்வளவு நெடி. புத்தம் புதுசாக்கும்….என்று நான் சொன்ன கணத்தில் ஒரு சிட்டிகை எடுத்து உறிஞ்சிவிட்டு…யப்ப்ப்ப்ப்ப்பா…..நல்ல காரம்…என்று சொல்லிக் கொண்டார் அப்பா. முழு திருப்தி வந்துவிட்டதாய்த் தோன்றியது. ஒரு டப்பா பொடியை அப்பா அப்போதுதான் முதன் முறையாய்த் தனக்கே தனக்கு என்று கண்கொண்டு பார்க்கிறார்."."அங்க படம் போட்டிருப்பானே…உரல்ல குத்துறமாதிரி….அதே போல உள் ரூம்ல இடிக்கிறதை நீ பார்த்திருக்கியோ….? அந்த நேரம் அதை வாங்கி உறிஞ்சணும்…அத்தனை சுகமாக்கும்…".அப்பா ரசனையோடு சொல்வதைப் பார்த்தால் நமக்கே ஒரு சிட்டிகை வாங்கி இழுத்து விடுவோமா என்று தோன்றும்..அவரின் ஒரே பழக்கம் அதுதான். வேறு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. 'பாழாய்ப்போன இதை விட முடியல்லையே?' என்று அவரே சொல்லிக் கொள்வார். அவரைப் போல் கட்டுப்பாடாய் ஒரு மனிதன் இருக்கவே முடியாது. துளியும் சாத்தியமில்லை. ஓட்டலில் வேலை பார்ப்பவர்தான். ஆனாலும் காலம்பற அருந்தும் அந்த ஒரு காபியோடு சரி. ஓசியில் கிடைக்கிறதே என்று கண்டதையும் உள்ளே தள்ளும் ரகமல்ல அப்பா. எதிலும் ஒரு ஒழுங்கு உண்டு அவரிடம். வீட்டிற்கு யாராவது புதிய ஆள் வந்திருந்தால் அப்பா பொடி போடுவாரா என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் முன் அப்பா உறிஞ்ச மாட்டார். அது அநாகரிகம் என்பார்..மிகுந்த எளிய வாழ்க்கை அவருடையது. அதற்கு மேல் ஏது வக்கு? ஒரு வேட்டி கொடியில்…ஒன்று இடுப்பில்….மேல் துண்டு ஒன்று. அதுவும் அம்மா ராட்டையில் நூல் நூற்றுச் சேர்த்து சிட்டம் போட்டு, கதர்க் கடையில் கொடுத்து வாங்கியது. இது போக அப்பாவுக்கென்று ஒரு வெள்ளைச் சட்டை உண்டு. அது காமராசர் சட்டை. அது அவரது தகரப் பெட்டியிலேயே தூங்கும். எப்போதேனும் அபூர்வமாய் கல்யாணம் காட்சி என்று வெளியே செல்ல நேர்ந்தால் தலை காட்டும். பிறகு பழையபடி முடங்கிவிடும். அந்த ஒரே சட்டைதான். அப்பா சட்டை அணிந்து நிற்கும் அந்தக் காட்சியில் ஸ்வாமி சந்நிதியில் நுழைந்ததுபோல் சிலிர்ப்போம் நாங்கள். ஒன்றே தெய்வம்…சத்தியே பராபரமே…!.ஓட்டலில் நாள் பூராவும் நெருப்பு முன் நிற்பவர்கள் யாரும் கட்டுப்பாடாய் இருப்பது கடினம். தெரிந்தோ தெரியாமலோ தவறித்தான் விடுவார்கள். பலரையும் பார்த்தாயிற்று. ஆனால், அப்பா அப்படியில்லை. நியமங்களோடு வாழ்ந்தவர். அதனால்தான் ஒரே ஓட்டலில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நிலைக்க முடிந்தது. அத்தனை பொறுப்புள்ள மனிதனைப் பார்ப்பது அரிது. அந்தக் கடைக்கு அவர் ஒரு பொக்கிஷம். பணியாளர்கள் மதிக்க வலம் வரும் சாமி..எந்தப் பொருட்களையும் வீணாக்கினார் என்று சரித்திரமேயில்லை. முதலாளிக்கு அத்தனை உண்மையானவர். ஸ்டாலுக்கு என்று தயாராகும் இனிப்புகள், கார வகைகள் தரம் மாறின, குன்றின…என்று ஒருவரும் ஒரு வார்த்தை பிசக முடியாது. அய்யர் ஓட்டல் என்று தேடி வந்து வாங்கிப் போவார்கள். கொடைக்கானல் வழி ஊர் என்பதால் அங்கு இறங்கி இனிப்பு வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். சுற்றுலாக்காரர்களை நிறைவு செய்யும் உணவகம் அது. அங்க இறங்கி ஸ்வீட் வாங்கிப் போங்க என்று சொல்லி அனுப்புவார்கள்..பதினோரு மணி வாக்கில் அடுத்தடுத்து என்று ஸ்டாலில் கொண்டு வந்து அன்றைய இனிப்புகளை அடுக்குவார் அப்பா. நேரம் தவறவே தவறாது. அதுவே அவரது நியமம். அதற்குப்பின் கார வகைகள் வரிசை கட்டும். எல்லாம், தானே நடக்கும் என்று கல்லாவில் அமர்ந்து அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருப்பார் முதலாளி கணபதி அய்யர். "இப்படி ஒரு கடமை தவறா கண்ணியவான் தனக்குக் கிடைத்தது, தான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம்…" என்றுதான் எண்ணியிருந்தார் அவர்..அண்ணா…ஸ்டால் ரெடி…என்று ஒரு குரல் கொடுத்துவிட்டு…உள்ளே இருக்கும் லைட்டையும் போட்டு விடுவார் அப்பா. மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் இனிப்புகளும், காரவகைகளும் மினு மினுக்கும். ஜிலேபியில் ஜீரா பளபளக்கும். வெறுமே பகட்டுக் காண்பிச்சு விக்கிறதில்லடா… வாங்கிச் சாப்பிட்டுப் பாரு…என்று அவைகளே ஓட்டலுக்கு வருவோரை "தில்" லாக அழைப்பது போலிருக்கும். நுழையும் போதே பார்வையில் பட்டு இழுக்கும். ஸ்டாலுக்கு நேர் அருகில் வந்து நிற்பார்கள். எல்லா இனிப்பிலும் கொஞ்சம் வாங்கியாக வேண்டும் என்கிற உறுதி தொனிக்கும்..ரெண்டாம் அடுப்படி ராஜூ சமையல் வகையறாக்களைப் பார்த்துக் கொள்வார். அப்பா சொல்லிச் சொல்லி அவரது கைப்பக்குவமும் கூடியிருந்தது. அய்யராத்து சமையல் தோத்தது போங்க…! என்று சொல்பவர் பலர். எல்லாம் சாமி கைங்கர்யம்தான் என்று அடக்கமாக உரைப்பார் ராஜூ. அப்பாவுக்கு மரியாதை..பகல் வேலையை முடித்து கை கால் முகம் அலம்பி, மார்பில் துண்டைப் போர்த்திக் கொண்டு கம்பீரமாய்க் கிளம்பி விடுவார். வரேண்ணா….என்று ஒரு வார்த்தைதான். அது கல்லாவில் உட்கார்ந்திருக்கும் அய்யருக்குக் கேட்டதா தெரியாது. அவர் கவனமெல்லாம் ஸ்டாலிலிருந்து பொருட்கள் வெளியேறுவதிலேயே இருக்கும். அன்றைய ஸ்டால் இருப்புக்கு இவ்வளவு துட்டு வந்து சேரணும் என்கிற மனக்கணக்கு உண்டு அவருக்கு. சாப்பாடு, டிபன் என்பதெல்லாம் அன்றாட வழக்கங்கள். ஆனால் ஸ்டால் கொஞ்சம் கொஞ்சமாய்க் காலியாகிறதே அந்த சந்தோஷத்திற்கு ஈடுதான் ஏது? மத்தியான ரெஸ்டுக்குப் போயிருக்கும் அப்பாவுக்கு திடீரென்று அழைப்பு வந்த நாட்கள் பல. காரணம் ஸ்டால் காலி. மாலை நாலு ஐந்துக்குள் இன்னொரு ரௌன்ட். அதனாலென்னண்ணா….செய்துட்டாப் போச்சு…..! நிரப்பிடறேன்…கவலையை விடுங்கோ- முகம் சுருங்கவே சுருங்காது. அதுதான் கணபதி அய்யருக்குக் கிடைத்த கிஃப்ட்…!.கிருஷ்ணய்யரோட கைபாகமே தனிதான்..! இந்த ஊர்ல எவனும் அவரை அடிச்சிக்க முடியாது…! .என்று சொல்லி ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே…அதற்குக் கோடி கொடுக்கலாம்தான்..அந்த நேரம் அப்பா மடியில் அடங்கிக் கிடக்கும் அந்தப் பொடி மட்டை. அது அநேகமாய்க் காலியாய்த்தான் கிடக்கும். பல சமயங்களில் வெறும் மட்டையை விரித்து விரலால் தேய்த்து வெறுமே ஒரு உறிஞ்சு உறிஞ்சுவதைப் பார்த்திருக்கிறேன். இருக்கும் சமயங்களில் மாஸ்டர்… என்று அழைத்து கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து சைகை காண்பித்து ஓசி கேட்பவரிடம் தயக்கமின்றி எடுத்து நீட்டி விடுவார் அப்பா. சற்று உரிமையுள்ளவர்கள் ஓடி வந்து மடியில் கை வைப்பார்கள். டேய்…விருதாப்பயலே…! பொறு…எடுத்துத் தரேன்…என்று செல்லமாகத் திட்டுவார். பிச்சைப் பாத்திரத்தில் தர்மமும் உண்டு. ஆனால், அது தீர்ந்ததே என்கிற ஏக்கத்திற்கு இடமில்லை அப்பாவிடம்…! அத வேறே அடிக்கடி கொஞ்சணுமா? என்பார். அதிலிருந்தே அந்தப் பழக்கத்தில் அவருக்கு முழு ஒப்புதலில்லை என்பது தெரியும்..இரவு வேலை முடித்துக் கிளம்பும்போதுதான் அந்த நாலணா பேட்டா கிடைக்கும் அப்பாவுக்கு. அதை மதியமே கேட்டு வாங்குவோம் என்று நினைக்க மாட்டார். பொடிக்காகுமே? ஆனால், வாய் வராது. அத்தனை கௌரவம். கேட்டால் கிடைக்கலாம். சங்கடத்தோடே எடுத்துத் தரலாம். என்றாவது ஒரு நாள்தானே என்று திருப்தியோடும் தரலாம். அதையே வழக்கமாய்க் கொண்டு விடுவாரோ என்று பயந்துகொண்டும் எடுத்து நீட்டலாம். எதற்கு? அது தேவையில்லை அப்பாவுக்கு. தன் நிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்.? …மானஸ்தன்….!.ஆனாலும் அந்த நாலணா பேட்டாவை வாங்கும் அந்த இரவு நேரக் காட்சி மறக்குமா? ஏதோ இவர் பெருந்தொகையைக் கடன் கேட்டு நிற்பது போலவும், அது முடியாது என்று இஷ்டமின்றி அவர் பதில் சொல்லாது மௌனம் காப்பதும்.! அடேங்கப்பா…! ..நாலணா கொடுப்பதென்ன அவ்வளவு சாதாரண விஷயமா?.'காலம் பூராவும் உன் ஓட்டலுக்கு உழைத்துக் கொட்டுகிறாரே அதற்கு நீர் எவ்வளவு கொடுத்தாலும் தகுமய்யா…உழைப்புக்கு ஏற்ற கூலியா கொடுக்கிறீர்? இப்படி ஒரு உண்மைத் தொழிலாளி உமக்குக் கிடைப்பதற்கு நீரல்லவா புண்ணியம் செய்திருக்க வேண்டும்? அந்த உண்மையை உணர்ந்து அடக்க ஒடுக்கமாய் கடவுளுக்குப் பயந்து இரும்…! என்று சொல்லத் தோன்றுகிறதே நமக்கு…! கொடி பிடித்தால் அய்யர் குன்றிப்போவாராக்கும்…!'.'நம் வயதுக்குச் சமமான ஒருவன் மிகக் குறைந்த சம்பளத்திற்கு ஆண்டாண்டு காலமாய் நம்மிடம் இப்படி அடிமையாய்க் கிடக்கிறானே…அவனைக் கொஞ்சம் மதிப்போம்…அதன் மூலம் அவனது உண்மையான உழைப்பைப் பெருமைப்படுத்துவோம் என்கிற எண்ணம் துளியுமா மனதில் தோன்றாது? ஒருவனை நிற்க வைத்துப் பார்ப்பதில் அப்படி ஒரு அல்ப சந்தோஷமா? எதிரே தொழிலாளி நிற்க, தான் கல்லாவில் முதலாளி அந்தஸ்தில் அமர்ந்திருக்க, அதை நாலு பேர் பார்க்க…பிறகு சற்று நேரம் கழித்து போனால் போகிறது என்று அந்த நாலணாவை எடுத்து கை எட்ட முடியவில்லை என்பது போல் வைக்க அதை அப்பா நீட்டி எடுத்துக் கொண்டு வெளியேறுவதில் ஒரு அற்ப சந்தோஷம். என்ன மனிதர்கள்? தன்னிடம் பணியாற்றும் வேலையாட்களை மதிக்கத் தெரிய வேண்டாமா ஒரு முதலாளிக்கு? என்ன பெரிய முதலாளி…பத்துக் கிளைகளா வைத்து நடத்துகிறார்? ஒன்றே ஒன்று…! காலப் போக்கில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ? யார் கண்டது? என்னவோ ஒரு யோகத்தில் தூள் தட்டுகிறது அய்யருக்கு…!'.நாலணாவில் ஒரணாதான் பொடிக்கு. பாதி மட்டைதான் வரும். அதற்கேற்றாற்போல் நேர இடைவெளியை அதிகரித்து சமாளிப்பார் அப்பா. மீதிக் காசு வீட்டுக்கு. 'பெரியவன்…ஏதோ பாட நோட்டு வாங்கணும்னான். வச்சிருந்து நாளைக்கும் பேட்டா வந்ததும் சேர்த்து, அதை வாங்கிக்கச் சொல்லு…' அப்பா அப்படிச் சொல்வார். அவரின் கவனம் பிள்ளைகளின் படிப்பில். அம்மா செய்வதறியாது முழிப்பாள். அப்புறம் வீட்டுக்கு?.பலசரக்குக் கடையில் கடன். 'பழைய பாக்கியைக் கொஞ்சமேனும் கொடுத்திட்டு வாங்கிக்கச் சொல்லு அம்பி….!' – நாராயணனின் வழக்கமான பல்லவி.."என்ன இப்படிப் பையனை வெறுங் கையா அனுப்பிச்சிட்டேள்? நா தர மாட்டேனா? இந்த ஒரு முறை கொடுத்தனுப்புங்கோ…கொஞ்சம் கொஞ்சமாத் தீர்த்துடறேன்…" அப்பாவின் வார்த்தைகளுக்கு மதிப்பிருந்தது. வறுமையிற் செம்மை. ஏற்றத் தாழ்வு மிகுந்த சமுதாயத்தில் மனிதர்களின் நேர்மையும் நாணயமும் மதிக்கப்பட்ட காலம் அது. கிருஷ்ணய்யர் பிள்ளைகளா? தங்கக் கம்பிகளாச்சே…!!.என்ன கிருஷ்ணய்யர்…இன்னும் வாடகை வரலையே…? – கேட்கும் தேதி பதினேழாய் இருக்கும். வந்துரும்ண்ணா…சி்த்தப் பொறுத்துக்குங்கோ… ! – இந்த பதிலில்தான் ஆறுதலடைந்தார்கள் பலரும். வறுமையிற் செம்மையாய்க் கிருஷ்ணய்யர் குடும்பம் நடத்துவதை எண்ணி எண்ணி மதித்தார்கள். மகிழ்ந்தார்கள். சமுதாயத்தில் ஒழுக்கமும், மேன்மையும் மிகுந்த மக்கள் நிறைந்திருந்த காலம் அது..சேர்த்து வைக்க வழியில்லாமல் அந்த மூன்றணாவில் எத்தனைக்குத்தான் முழம் போடுவாள் அம்மா. டீ பொட்டணம் வாங்குவாளா? காபிப்பொடி வாங்குவாளா? பால் வாங்குவாளா? நாட்டுச் சர்க்கரை வாங்குவாளா? அப்படியே வாங்கினாலும் பாட்டியையும் சேர்த்து எட்டு ஜீவன்களுக்கு எப்படிப் பங்கிடுவாள்? எங்களுக்கு உண்டோ இல்லையோ…பாட்டியைத் திருப்திப்படுத்தி விடுவாள் அம்மா. அந்த மனசு தனி..ருக்கு…நீ நன்னாயிருக்கணும்… உன் பிள்ளேளெல்லாம் வேலைக்குப் போயி…தரித்திரக் கஷ்டமில்லாம நீ சந்தோஷமா இருப்பே…நா சொல்றேன் பாரேன்…என் மனசாரச் சொல்றேன்….நீ பணக் கஷ்டமில்லாமே….சோத்துக் கஷ்டமில்லாமே…நன்னா இருந்து எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சிட்டுத்தான் போவே…இது என்னோட ஆதங்கம்…ஆசீர்வாதம்…. – புளு புளுவென்று நீராய் அம்மா கலந்து கொடுத்த காப்பித் தண்ணியை சூடாய்த் தொண்டையில் இறக்கும்போது மரகதம் பாட்டியிடமிருந்து ஆத்மார்த்தமாய்ப் பிறக்கும் ஆசீர்வாதங்கள் இவை. கண்கள் பனிக்க பாட்டியின் அந்தச் சொற்கள் வேத மந்திரங்கள்..அந்த ஒரணா பொடிச் செலவைக் கூடக் குறைத்துக் கொண்டார் அப்பா. இல்லாமையிலும் இறுக்கத்தைக் கடைப்பிடிப்பவர். பொடியின் தேவையைக் கூடிய அளவு குறைத்துக் கொள்வதில் அவருக்கு ஒன்றும் சிரமமே இருந்ததில்லை. பழக்கத்தைப் படிப்படியாக விட்டுக் கொண்டிருக்கிறாரோ? இது இல்லாட்டா வாழ முடியாதுன்னு என்னைக்குமே ஒன்றைப் பழக்கப்படுத்திக்கக் கூடாது….என்பார்..ஆனால், அது அவரின் கிரியா ஊக்கி. மதியம் இடைவேளைக்கு வீட்டுக்கு வரும்போது படுத்து உறங்குவதற்கு முன் ஒரு மணி நேரமாவது படிப்பது அப்பாவின் வழக்கமான வழக்கம். வாராந்திரிகள் பக்கத்து வீடுகளிலிருந்து இரவல் வாங்கி வந்து வைத்திருப்பாள் அம்மா. அது அவரைச் சந்தோஷப்படுத்தும். அந்த நேரம் ஒரு சிட்டிகை கண்டிப்பாய் வேண்டும் அப்பாவுக்கு..கையில் எடுத்து அப்படி அட்டையைத் திறந்தாரென்றால் மெல்ல மெல்ல வேகமெடுக்கும். அட்டை டூ அட்டை படிப்பதுதான் அப்பா வாசிப்பின் தீவிரம். அந்த மாதிரியெல்லாம் கருத்தாய், கவனமாய் எவரும் படிக்க முடியாது. ஜெயகாந்தன் கதைகளை அப்பா படிக்கும் ரசனையே தனி. வீட்டிலுள்ளவர்களுக்கு சத்தமிட்டு உணர்ச்சி பாவங்களோடு வாசித்துக் காண்பிப்பார். அருமையான எழுத்தின் அபார ரசிகர் அவர். அந்தமாதிரி நேரங்களில் நாக்கு உள்ளே மடிந்து "கிர்…கிர்…" என்று சத்தமெழுப்புவார்..எல்லாரும் மேல் தட்டு வர்க்கத்தையே எழுதிண்டிருந்தபோது அடித்தட்டு மக்களோட வாழ்க்கையை, அவலத்தை எழுதினவனாச்சே அவன்…அந்த எழுத்தின் தீவிரம்தான் மனசை என்ன பாடு படுத்தறது….என்று புகழ்வார். எழுத்து சத்தியவாக்கா இருக்கணும். அது இவன்ட்டையும்… நா.பா.ட்டையும்தான் என்பார். நா.பா.வின் 'குறிஞ்சி மலரையும்', 'பொன்விலங்கையும்' அவ்வளவு கஷ்ட காலத்திலும் சொந்தமாய் வாங்கி வைத்திருந்தார் அப்பா. அவ்வப்போது எடுத்துப் படிப்பார். மனுஷன மேன்மைப்படுத்துற எழுத்துடா அவரோடது……! அந்த கம்பீரமும், அழகும் யாருக்கு வரும்? என்று புகழ்வார்..ஆழ்ந்த ரசனையும், புத்திசாலித்தனமும் மிக்கவர் அப்பா. ஒழுங்காய்ப் படிக்க வைத்திருந்தால் ஒரு நல்ல அரசாங்க வேலைக்குப் போயிருப்பார். அஞ்சாங்கிளாசோடு நிறுத்தி, அநியாயமாய் ஓட்டல் வேலைக்கு அனுப்பிப் பாழ்பண்ணி விட்டார்கள். அன்றைய அஞ்சாங்கிளாஸ் அந்நாளின் எஸ்.எஸ்.எல்.சிக்குச் சமம் என்பார்கள். இந்து ஆங்கில நாளிதழில் வரும் க்ராஸ்வேர்டு பஸில்ஸ் எழுதிப் பரிசு வாங்கியவராயிற்றே அப்பா. எங்கிருந்து வந்தது அந்த ஆங்கில அறிவு? அந்தக் கால நாரதர் பத்திரிகையில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியில் எத்தனை முறை வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. 'வீட்டுக்கு உதவுமே' என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு எழுதி அனுப்புவார் போட்டிக்கு. ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் அந்தத் தீனிக்குப் பழகிப் போயிருப்பார்கள். மஷனையாகியிருப்பார்கள். ஆனால், அப்பா என்றும் அப்படி இருந்தவரில்லை. தன் அறிவை இம்மாதிரிச் செயல்பாடுகள் மூலம் கூர்மைப் படுத்திக் கொண்டேயிருப்பார்...பொடியை ஒரு பிடி எடுத்து ஒரு இழுப்பு இழுத்தாரென்றால் நூறு பக்கம் ஓடும் அப்பாவுக்கு. அத்தனை பவர் அந்த மூக்குப் பொடிக்கு. முகம் பளீரென்று விளங்க…படிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் சரசரவென்று நகரும்..அன்றுதான் அந்த அத்யந்தத் துணை அப்பாவிடம் இல்லாமல் போனது. எங்க வச்சேன்….? தவற விட்டுட்டனா? ஞாபகமேயில்லையே? கிளம்புறபோது வேட்டியை உதறிக் கட்டினேன்…அப்போ விழுந்திருக்குமோ? அதையே மறந்துட்டனே? திரும்ப இடுப்புல சுருட்டி முடிஞ்சேனான்னு ஞாபகமேயில்லையே? என்னைக்குமே இப்படி ஆனதில்லையே….?? ஈஸ்வரா…! எனக்கும் ஞாபக மறதி வர ஆரம்பிச்சிடுத்தா? அட ஆண்டவனே….! நானும் கிழவனாகிண்டிருக்கேனா? கடவுளே…! இன்னும் என்னோட மூணு பெண்களைக் கரையேத்தணுமே…! என் பிள்ளேள் படிச்சி எதுவும் இன்னும் வேலைக்குப் போகலியே…! மூத்தவன் ஒருத்தனாவது வேலைக்குப் போயிட்டான்னா கொஞ்சம் மூச்சு வாங்கிப்பனே…! அதுக்குள்ளே என்னை சோதிக்காதே ஸ்வாமி…! இந்த ஜீவன் தாங்காது…..– அப்பா தன்னை மறந்து புலம்ப ஆரம்பித்தார். அவர் கண்கள் கலங்கியதை அன்று நாங்கள் பார்த்தோம். என்ன சொல்வதென்றறியாமல் நின்றோம். ஒன்றிலிருந்து எதை எதையோ தொடர்புப்படுத்தி. எண்ணி…எண்ணி…..இடையில் திடீரென்று வந்த இந்தத் துன்பம்…அப்பாவைக் கலங்கடித்திருந்ததை எங்களால் உணர முடிந்தது….வழி பிறக்கும்…வழி பிறக்கும்…அவ்வப்போது அப்பா தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தார்..'கணபதி அய்யர் கடையை விற்க இருக்கிறார்' என்கிற திடீர்ச் செய்திதான் அது. இடியாய் இறங்கியது தகவல். 'குடும்பத்தோடு சென்னைக்கு இடப் பெயர்வு' என்று அறிந்த அந்தக் கணத்தில் நாங்களும் செய்வதறியாது கலங்கித்தான் போனோம். ஏதோ வளாகம் அங்கு வரப்போவதாகச் சொன்னார்கள். அந்தப் பகுதிக்கே அய்யர் கடை ஃபேமஸ் ஆயிற்றே? அதுவும் பஸ்-ஸ்டான்ட் அருகில் உள்ள ஓட்டல். அதையா மூடுவார்கள்? எந்தப் படை பலம், பண பலம் இப்படி வேலை செய்கிறது? அடுத்து என்ன செய்வது, எங்கு போவது என்கிற தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தார் அப்பா. வீடே மயான அமைதியாகிக் கிடந்தது. திசை தெரியாத கப்பல்…! எந்தக் கரையை நோக்கி நகரும்?.அப்பாவை மகிழ்விப்பதற்கென்று சிறிது சிறிதாய், சில்லரை சில்லரையாய்ச் சேர்த்து வைத்திருந்த காசில் இரகசியமாய் வாங்கி வைத்திருந்த எவர்சில்வர் பொடி டப்பியை எந்த நேரம் பார்த்து அவருக்கு வழங்குவது என்று புரியாமல் காத்துக் கொண்டிருந்தேன் நான். அது என் கையில் கனத்துக் கொண்டிருந்தது.