

1. வழக்கு
அன்வருக்காக வக்கீல் பாலுதான் ஆஜரானார். திறமையானவர் என்று பெயர் பெற்றவர்! ஆட்டோ டிரைவர் அன்வர் மீது எதிர் வீட்டுக் காரருக்கு வன்மம் அதிகம் (Tamil short story).
வாசலில் ஆட்டோவை நிறுத்துகிறார்; நேரங்கெட்ட நேரத்தில் ஒலி எழுப்புகிறார்; வயதில் மூத்த தன்னை மதிப்பதில்லை என்றெல்லாம் தானாகவே நினைத்து எதிர்ப்பைப் பெருக்கிக் கொண்டே இருந்தார்! அன்வரைப் பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
திடீரென்று அவர்கள் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமாகச் செத்துப்போக, அன்வரைச் சிக்க வைக்க இதுதான் தக்க சமயமென்று பக்கத்துத் தெருவிலுள்ள தன் நண்பர் பாஸ்கரை விட்னஸ் ஆக்கிக் கேசை அன்வர் பக்கம் திருப்பினார்.
நீதிபதி வந்து அமர்ந்ததுமே முதல் வழக்கு அவர்களுடையதுதான்!வக்கீல் பாலு, கூண்டில் நின்ற பாஸ்கரிடம் குறுக்கு விசாரணை செய்தார்!
“ சொல்லுங்கள் பாஸ்கர்! அன்வர்தான் குற்றவாளி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
“சார்! ரவி டீக்கடையில நானும் டீ குடிச்சுக்கிட்டிருந்தேன்! அன்வர் ஆட்டோ அந்த வழியாக வேகமாகப் போனதை நான் பார்த்தேன்.பின் சீட்ல அந்த இளைஞரின் பாடி! பாயம்மா கடை வரை செல்லும் வரை ஒரே சத்தமும், புகையுமாக அவன் ஆட்டோ புயல் வேகத்தில் சென்று திரும்பியது! அதிக ஓசையும், புகையுமே அவன் ஏதோ தப்பு செய்து விட்டுத்தான் செல்கிறான் என்பதை எனக்கு உணர்த்துவதாக இருந்தது.”
சொல்லி விட்டு , பார்வையாளர் சீட்டில் அமர்ந்திருந்த தன் நண்பரை அர்த்தமுடன் பார்த்தார் பாஸ்கர். அன்வரின் எதிர்த்த வீட்டுக்காரரான அவர் நண்பரும் திருப்தியாகத் தலையை அசைத்து, ரகசியமாகத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வக்கீல் பாலு தொடர்ந்தார். ”பாஸ்கர்! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்! ஆட்டோவின் சப்தமும், புகையும் நீங்கள் சொன்ன மாதிரி அவ்வளவு அதிகமாகவா இருந்தது?”
“ஆமாம் சார்! இன்னமும் அந்தச் சப்தம் என் காதுகளிலும், அந்தப் புகை என் கண்களிலும் நிழலாடிக் கொண்டே இருக்கிறது! அன்வர் கொலைகாரன் என்று அவை சொல்வதாக எனக்கு ஒரு பயம் வந்து கொண்டே இருக்கிறது.”
“அப்படியா? இதில் எந்த மாற்றமும் இல்லையே!”
“நிச்சயமாக இல்லை சார்! அன்வருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்.”
“ஓகே! பாஸ்கர்! நீங்கள் போகலாம்!”
பாலு நீதிபதியிடம் திரும்பி,
“மிலாட்! அன்வர் வைத்திருப்பது எலக்ட்ரிக் ஆட்டோ! சாட்சி சொன்னது போல் அதிக ஓசைக்கும், அதிகப் புகைக்கும் அதில் சான்சே இல்லை! ஆட்டோவுக்கான விபரங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறேன்! உங்களுக்கே உண்மை புரிந்திருக்குமென்று கருதுகிறேன்!”
அன்வர் விடுதலை செய்யப்பட, பாஸ்கர் தன் நண்பரிடம் “என்னப்பா நீ! எலக்ட்ரிக் ஆட்டோன்னு சொல்லாம விட்டுட்டியே!” என்று வருந்திக் கொண்டிருந்தார்.
ஓசை மட்டுமல்ல; சமயங்களில் நிசப்தமும் வெல்லும்!
********************
2. அவன்தான் மாணவன்
அருகில் நெடுஞ்சாலை! ஓரத்திலேயே அந்த இருபாலர் கல்லூரி! சர்ரு புர்ரென்று சாலையில் பாயும் வாகனங்கள்! அப்பப்பா! ரயிலில், பேருந்தில் வந்து இறங்குபவர்கள் ரோட்டைக் கடந்துதான் கல்லூரி செல்ல வேண்டும். உயர் மட்ட நடைபாதை அமைக்கப் பலமுறை மனுச் செய்தும் பலனில்லை. கல்லூரி நிர்வாகம் அரசிடம் பலமுறை பேசியும், ’ஆகட்டும் பார்க்கலாம்!’ கதைதான்.
முந்தா நாள் கூட, ஓடி வந்த ஒரு மாணவி காரில் அடிபட, நல்ல வேளையாகச் சிராய்ப்புகளுடன் தப்பித்தாள்!
ரகு முதலாண்டு மாணவன். அதிகம் பேச மாட்டான். செயல்களில் துரிதம் காட்டுவான். வகுப்பின் ரெப்ரசன்டேடிவ்வாகச் செலக்ட் ஆனான். உயர் மட்ட நடைபாதை அமைக்க அதீத முயற்சியில் இறங்கினான். பிரின்சிபாலிடம் வற்புறுத்தினான். கலெக்டரிடம் மனு கொடுத்தான். ஒன்றிரண்டு முறை அல்ல; பலமுறை!
அவன் ஆர்வத்தைக் கண்ட கலெக்டர், பள்ளி நிர்வாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் மாணவப் பிரதிநிதிகளைக் கூப்பிட்டு ஒரு கூட்டத்தைப் போட்டார்.
உயர் மட்ட நடைபாதை அமைப்பது குறித்து ஆலோசிக்க மனுச் செய்தவன் என்ற முறையிலும், வகுப்பு ரெப்ரசன்டேடிவ் என்பதாலும் ரகுவும் அந்த மீட்டிங்கில் பங்கேற்றான்! அந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, ஓரிடத்தில் நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டுமென்றால், அரசின் கண்டிஷன் என்ன என்பதை விளக்கமாகக் கூறினார்.
”கடந்த மூன்று ஆண்டுகளில், 10 வாகன விபத்துக்களோ அல்லது 5 விபத்து காரணமான இறப்புகளோ நிகழ்ந்தால்தான் அந்த இடத்தில் உயர் மட்ட நடைபாதை அமைக்க முடியும்,” என்றார்.
ரகுவோ, இது வரை பலமுறை அந்த இடத்தில் விபத்துக்கள் நேர்ந்துள்ளதாகவும், முந்தா நாள் கூட ஒரு மாணவி சிராய்ப்புகளுடன் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் கூறி, உடனே அந்த மேம்பால நடைபாதை அமைக்க வேண்டுமென்று பணிவுடன் அனைவரிடமும் வேண்டினான்.
காவல் துறை பிரதிநிதியோ, கையில் கொண்டு வந்திருந்த பதிவேட்டைப் புரட்டிய படி கூறினார். ”பல விபத்துக்கள் நடந்ததா நீங்க சொல்றீங்க. ஆனா இது வரை எங்க ரெகார்ட்ல ஒன்பதுதான் பதிவாகியிருக்கு! எனவே உடனடியா நாம அரசாங்கத்தை வற்புறுத்த முடியாது! கண்டிஷன்படி இன்னும் ஒரு விபத்தாவது பதிவாகணும்!" என்றார்.
அடுத்த நாள்! கலெக்டர் அலுவலகமே அல்லோல கல்லோலப்பட்டது. கல்லூரி வாசலில் நடைபெற்ற விபத்தில் ரகுவின் பைக் எதிர் வந்த காருடன் மோதியதாக! கலெக்டரே ஓடினார் மருத்துவ மனைக்கு.. ரகுவைப் பார்க்க!
அவருடைய உள்ளுணர்வு ஒன்றை அழுத்திச் சொல்லியது. இது விபத்து எண்ணைப் பத்தாக்க ரகுவால் செய்யப்பட்ட தியாகமென்று!