

1. முகஸ்துதி
அவசர கூட்டம் என்று அழைத்தார்கள். பெரிய மனிதர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர், ”எதுக்குப்பா? எதுக்குப்பா?" கேட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது, ஒலிப்பெருக்கியில்… "ஏழைப் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டணும், அதுக்கு நன்கொடை வேணும். அதற்குத்தான் இந்த கூட்டம்," என்று சொல்லி தலைவர் அமர்ந்தார்.
“நாம கட்டப்போற பள்ளிக்கு நன்கொடை கொடுக்க கூடாதா? நீங்கதான் தர்மவான் ஆச்சே"ன்னு அழகேசன் என்பவரிடம் ஆரம்பித்தார் டிரஸ்ட் செயலாளர். “நீ தர்மவான்னு சொன்னா நான் குடுத்துடுவேனாக்கும், என்கிட்ட பாச்சா பலிக்காது, எனக்கு அவசரமா வேலை இருக்கு” ன்னு வெளியே போய் விட்டார் அழகேசன்.
பெரிய மனிதர்கள் எல்லாம் அதிர்ச்சியானார்கள். “என்ன இப்படி போய்ட்டாரே!” என பேசிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் “ஸார் அவருக்குதான் முகஸ்துதி பிடிக்காதே. அவர தர்மவான்னு புகழ்ந்தா... அதான் முடுக்கினு போய்ட்டார்."
"அவருக்கு முகஸ்துதி பிடிக்காதா? அந்த முகஸ்துதி பாடியே நான் வசூல் பண்ணிக் கொடுத்தா எனக்கு என்ன தருவீங்க?” சவாலோடு கேட்டார் சந்தானம்.
"உங்களுக்கு தலைவர் பதவி கொடுக்கிறோம்” என்றதும் அனைவரும் ஆமோதித்தனர். "இந்தக் கூட்டத்தில ஒண்ணும் தேறல, அடுத்த கூட்டத்தில பார்க்கலாம்" என கலைந்தனர்.
அடுத்த கூட்டம். அழகேசனும் வந்திருந்தார். சவால் விட்ட சந்தானம், ஒலிபெருக்கியில் பேச ஆரம்பித்தார்.
"நாம கட்டப்போற பள்ளிக்கு.. அண்ணன் செங்கல்வராயன், பள்ளிக்கூடம் கட்ட தேவையான செங்கல் மொத்தமும் பார்த்துக்கிறாராம். அதனால அவரை செங்கல் ராயன் என்றே புகழலாம். தம்பி தங்கவேலு, கட்டடத்திற்கு தேவையான கம்பி மொத்தத்தையும் வாங்கி தர்ராறாம். அதனால, அவரை கம்பி வேலு என்றே பாராட்டலாம்..." இப்படி ஒவ்வொருவராய் சொல்லி...
“இந்தக் காலத்துல இப்படி ஒருத்தரா! ஆச்சர்யமா இருக்கு... 'அண்ணன் அழகேசனை முகஸ்துதி செய்யாம எவ்வளவு கேட்டாலும் கொடுத்திடுவாரு' ன்னு இப்பத்தான் தம்பி தாமரைச்செல்வன் சொன்னாரு.. அவருக்குத்தான் முகஸ்துதி பிடிக்காதே!" நீட்டிமுழக்கி சொல்லிக் கொண்டிருக்கும்போதே… “இந்தாப்பா தம்பி, என்னோட பங்கா இருபத்தி ஐந்து லட்சம் தாரேன்” சொல்லி காசோலை எழுதிக் கொடுத்து விட்டு… “அவசர வேலை இருக்குன்னு” வெளியே கிளம்பி விட்டார் அழகேசன்.
அவர் போனதும், "ஆச்சர்யமா இருக்கே, தர்மவான்னு சொல்லி கேட்டால் குடுக்கல, இன்னிக்கு புகழாமலேயே காசை கைமேல கொடுத்திட்டாரே எப்படிப்பா இது?"-ன்னு சந்தானத்திடம் ஒருத்தர் கேட்டார்.
"அழகேசனுக்கு முகஸ்துதி பிடிக்காது என்பதை முகஸ்துதியாகவே இவ்வளவு நேரமா பேசினேனே, யாருக்கும் புரியலையா?” என்றார் சந்தானம்.
பலத்த கைத்தட்டல்களுக்கிடையே, ஒலிபெருக்கியில், "நமது டிரஸ்டின் தலைவராக வசூல் மன்னன் சந்தானம் இருப்பா"ரென அறிவித்தனர்.
2. பாம்பட கிழவி
மழையின் சாரலும், வெயிலின் கீற்றும் விசா இல்லாமல் அந்த கூரை வீட்டிற்குள் நுழைந்து ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் பெரிசாய் ஒன்றும் பொருட்கள் இல்லை.
ஒரு டிரங்க் பெட்டி, மூன்று பாய், மூன்று தலையணை, ஒரு அடுப்பு, அலுமினிய பாத்திரங்கள்... இவ்வளவுதான். ஒரு ஒடிசலான கிழவி ஓரமாய் ஒடுங்கி இருந்தாள். ஒடுங்கி இருந்த அந்த கிழவியின் காதில் கிடந்த பாம்படங்கள்தான், பேரன் வீராச்சாமியின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தன.
கிழவியின் அருகே அமர்ந்து நைச்சியமாய் “பாட்டி, குடும்பம் நடத்துறதுக்கே கஷ்டமா இருக்கு, நீ காதுல போட்டு இருக்கிற பாம்படத்தைக் கழட்டி குடுத்தா...” வீராச்சாமி முடிப்பதற்குள் “போடா நாயே! ஓழைக்கிறதுக்கு துப்பில்ல, காதுல இருக்கிறத கழட்ட வந்துட்டான்.”
ஊரைக் கூட்டி விட்டாள். அக்கம்பக்கத்தார் ஆதரவுக்குரலால் பாம்படங்கள் கிழவியின் காதுகளில் தொங்கிக் கொண்டு இருந்தன.
ஒரு நாள் வீராச்சாமியின் மனைவி இராசாத்தி, பாட்டியின் காலை அமுக்கி விடுவதுபோல உட்கார்ந்து ஒரு காதில் இருந்து பாம்படத்தை கழற்ற முயன்றபோது, "அடியே, காதுல கைய வைச்சா குரவளைய கடிச்சுப்புடுவேன்”ன்னு கிழவி கத்த, மிரண்டு போனாள்.
வீராச்சாமியும், இராசாத்தியும்…. அவ்வப்போது பாம்படத்தைப் பற்றி பேச...பேச… பாட்டி, ஒரு நாள் அவர்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு பக்கத்துல உட்கார வைச்சு ... ”ஒழுங்கா வேலைக்கு போய் பொண்டாட்டியை வெச்சு காப்பாதுடா...”. சொல்லிட்டு “இந்தாடா பாம்படம். எடுத்துக்கோ, நாளைக்கு ஒதவுண்டா ஒனக்கு” என அவளாகவே கழட்டி கொடுத்தாள்.
அன்று இரவு, பாம்படங்கள் இரண்டும் எவ்வளவு தேறும் என கணக்கு போட்டனர். அதை விற்று என்னவெல்லாம் வாங்கலாம் என்றும் ஒருவருக்கொருவர் பட்டியல் போட்டார்கள்.
இராசாத்தி அவள் பங்குக்கு, ஒரு பாம்படத்தை அழித்து சரடு ஒன்றை செய்யலாம் என ஆலோசனை சொன்னாள். வீராச்சாமியும் "ஒனக்கு இல்லாததா?" எனக் கொஞ்சி இரவை இன்பமாக்கினான்.
மறுநாள் வெயிலின் கீற்று கூரைக்குள் நுழைய, இராசாத்தி அவசர.. அவசரமாய் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, ”பாட்டி...பாட்டி” குரல் கொடுத்தாள். பாட்டியிடமிருந்து குரல் வராததால் அசைத்து பார்த்தாள். பாட்டியின் உடல் சில்லிட்டு இருந்தது.
வீராச்சாமியைக் கூப்பிட்டு குரல் கொடுத்ததும், அவனும் வந்து பார்த்தான். பாட்டியின் உயிர் பிரிந்திருந்ததை அறிந்தான். “நாளைக்கு ஒதவும்டா... ஒனக்கு” பாட்டியின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.
பாம்படங்களை விற்க எடுத்துக் கொண்டு ஓடினான் பாட்டியின் இறுதிச்சடங்கிற்காக.