2026 தேர்தல்: நம் கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம்!

 2026 election and voting
2026 election

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

இன்னும் சிறிது காலமே இருக்கிறது; 2026 சட்டமன்றத் தேர்தல் (2026 election) வந்துவிடும். வரவிருக்கும் நாட்களில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.

ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி, மறுபுறம் இந்தியா கூட்டணி எனப் பெரும் அணிகள் மோதிக் கொள்கின்றன. இவற்றுடன் பா.ம.க, புதிய தமிழகம் என உதிரிக் கட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை; அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

தேர்தல் விதிமுறைப்படி, பெரும் தொகையை யாரும் எடுத்துச் செல்லக்கூடாது. ஆனால், வாக்குகளைப் பெறப் பணம் கொடுத்து வெற்றியைப் பெறலாம் என்று அரசியல்வாதிகள் கணக்குப் போடுகிறார்கள். மிக லாவகமாகப் பெருமளவு பணத்தைக் கொண்டு சேர்க்கிறார்கள். இதில் யாராவது மாட்டிக்கொண்டால், பினாமிகள்தான் கைது செய்யப்படுகிறார்கள்; உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள்.

அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன? "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது இலவசம், அது இலவசம்" என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. "பெண்களுக்கு இது, மாணவர்களுக்கு அது" என்று தாராளமாக வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளின் நிலை 'அதோ கதி' தான்.

இது சட்டமன்றத் தேர்தல்தான் என்றாலும், ஒவ்வொரு மாநிலக் கட்சியும் தனக்கென ஒரு பலத்துடன் களத்தில் இருக்கின்றன. அரசியல் கட்சிகள் பெருமுதலாளிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு, கோடிக்கணக்கில் கட்சிக்கு நன்கொடை பெறுகிறார்கள். இவ்வாறு வெல்லும் கட்சிகளுக்குப் பணம்தான் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறது. இவர்கள் ஏழைகளுக்கும் மக்களுக்கும் எப்படி நன்மை செய்ய முடியும்?

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பணக்காரர்களிடம் பணம் வாங்கிச் செலவு செய்பவர்கள், ஏழைகளுக்கு நல்லது செய்வார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையில் நாட்டை ஆள்வது அதிகார வர்க்கம்தான். பெரும்பாலும் பணக்காரக் குடும்பப் பின்னணியிலிருந்து வருபவர்கள் இவர்கள். ஏழைகளுக்கு யாராவது உதவ முற்பட்டாலும், இந்த அதிகார வர்க்கம் அதைத் தடுத்துவிடும்.

இது எப்படி ஜனநாயக நாடாகும்? இது ஒரு 'பண நாயக' நாடாகவே மாறிவிட்டது. பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் ஏழைகளுக்கு எதிரானவர்களாகவே இருக்கின்றனர் (சில நல்ல அரசியல்வாதிகளைத் தவிர). அரசியல் கட்சிகளும் அதிகார மையங்களும் பணக்காரர்களை நம்பியே இருக்கும்போது, அவர்கள் ஏழைகளுக்கு உதவுவார்கள் என்பது மிகையாகவே தோன்றுகிறது.

"மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு" என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னார். ஆனால் லெனின் என்ன சொன்னார் தெரியுமா? "நாடாளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்" என்று நெத்தியடியாகக் கூறினார். மேலும், "உண்மையான மக்கள் கட்சி நாடாளுமன்றத்திற்குச் சென்று, அது எப்படி பன்றித் தொழுவமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். எவ்வளவு பெரிய சிந்தனை!

இதையும் படியுங்கள்:
Tamil Nadu Election 2026: முடிவை தீர்மானிப்பது நீங்களா? இவர்களா?
 2026 election and voting

எந்தத் தேர்தலும் மக்களுக்குப் பேருதவியாக இருக்கப் போவதில்லை எனும் சூழலில், மக்கள் என்ன செய்ய வேண்டும்? வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வரும்போது, "என்னால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வேன்" என்று அவர்களிடம் எழுத்துப்பூர்வமாகச் சத்தியப் பிரகடனம் வாங்க வேண்டும். வேட்பாளரைத் திரும்பப் பெறும் உரிமை (Right to Recall) மக்களிடம்தான் இருக்க வேண்டும்.

எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துவிட்டோம்; எவ்விதப் பயனும் இல்லை. எனவே, மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை!

logo
Kalki Online
kalkionline.com