

மனித மூளையின் இரகசியங்கள், பிரபஞ்சத்தின் ஆழமான நியூட்ரினோ துகள்கள் மற்றும் நூறு ஆண்டு வேதியியல் மர்மங்களுக்குப் பின்னால் உள்ள வியக்கத்தக்க உண்மைகள் என்ன தெரியுமா? மனிதகுலத்தின் போக்கையே மாற்றியமைத்த இந்த ஆண்டின் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளின் அபூர்வ சாதனைகள் மற்றும் அவர்களின் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் குறித்த முழுமையான தகவல்களை இந்தத் தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்!
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளின் கீழ் மனிதகுலத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கும் கண்டுபிடிப்புகளுக்காக 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆல்பர்ட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி வழங்கப்படும், இந்தப் பரிசில், தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ. 11.55 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகள் மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைக்கு அக்டோபர் 5,6,7 தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 8,9,12 ம் தேதிகளில் முறையே இலக்கியம், உலக அமைதி, பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளுக்கு அறிவிக்கப்படும்.
மருத்துவம்:
மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் உணர்வுகள், நடத்தை, உடல் செயல்பாடுகளை எவ்வாறு இயக்குகிறது என்பது நீண்ட காலமாக ஒரு மர்மமாகவே இருந்து வந்தது.
20 ஆம் நூற்றாண்டில்தான், ஆராய்ச்சியாளர்கள் மூளையின் பகுதிகளைத் தொடர்புடைய செயல்பாடுகளுடன் வரைபடமாக்கத் தொடங்கினர். ஆனால் அதன் காரண-காரிய உறவுகளை நிரூபிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் மூளையைப் பற்றி உருவாக்கிய சித்திரம், கேள்விக்குறிகளும் அறியப்படாத விஷயங்களும் நிறைந்த ஒரு வரைபடத்தைப் போலவே இருந்தது.
கடந்த 2005-ம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டீசெரோத் (Karl Deisseroth), (54) முதல்முறையாக ஆப்டோஜெனடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். ஒற்றை செல் பாசியில் காணப்படும் ஒளியை உணரும் திறன் கொண்ட சேனல்ரோடாப்சின் என்ற புரதத்தை அவர் பிரித்தெடுத்தார். மரபணு பொறியியல் மூலம் அந்த புரதத்தை எலியின் மூளையில் செலுத்தி மூளை நரம்புகளை கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். இதேமுறையில் மனிதர்களின் நரம்பு செல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார்.
ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஹெகேமன்(Peter Hegemann) (71), ஜார்ஜ் நாகல் (Georg Nagel) (73) ஆகியோரும் ஆப்டோஜெனடிக்ஸ் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.
மூன்று விஞ்ஞானிகளும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சூழலில் ஆப்டோஜெனடிக்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாற்றினர்.
ஒளி-தூண்டல் அயனி சேனல்கள் பற்றிய இவர்களது கண்டுபிடிப்பு, நரம்பியல் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மூளையின் மர்மமான நரம்பு மண்டல அமைப்பை பற்றி விரிவாக ஆராயவும், நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு புதிய சிகிச்சை முறைகளை கண்டறியவும் இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆப்டோஜெனடிக்ஸ் என்றால் என்ன?
இது ஒளியியல் மற்றும் மரபியல் ஆகிய இரண்டையும் இணைக்கும் ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இதன் மூலம், மூளையிலுள்ள குறிப்பிட்ட நரம்பு செல்களை ஒளியின் உதவியுடன் மிகத் துல்லியமாக ஆன் செய்ய ஆஃப் செய்ய முடியும். இதென்ன லைட் சுவிட்டா? ஆன், ஆஃப் செய்ய? இப்படி செய்வதால் என்ன பலன் என்று பலரும் கேட்கலாம். மருத்துவ உலகை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. உதாரணமாக பார்கின்சன், வலிப்பு போன்ற நரம்பியல் நோய்களை குணப்படுத்த நாம் மாத்திரைகளைதான் இப்போது வரை நம்பிக்கொண்டிருகிறோம்.
ஆனால், மாத்திரைகள் நன்றாக இருக்கும் நரம்பு செல்களையும் பாதித்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனையை சரி செய்யத்தான், மேலே சொன்னதை போல மிகத் துல்லியமாக குறிப்பிட்ட நரம்பு செல்களில் ஒளியின் உதவியுடன் ஆன் செல்லது ஆஃப் செய்யும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஆப்டோஜெனடிக்ஸ் தொழில்நுட்பம் மூலம், ஒளியை உணரும் திறனை இழந்த நரம்புகளைத் தூண்டி, பார்வையின்மை குறைபாட்டிற்குப் புதிய சிகிச்சை அளிக்க இவர்களது ஆய்வுகள் உதவுகிறது.
மனநலம் மற்றும் நரம்பியல் நோய்கள்: மூளையின் குறிப்பிட்ட நரம்புப் பாதைகளை ஒளியின் மூலம் துல்லியமாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனச்சோர்வு (Depression), போதைப்பழக்க அடிமைத்தனம் (Addiction), மறதி நோய் (Dementia) மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண வழிவகை செய்கிறது
இயற்பியல்:
2026ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு, 'நியூட்ரினோ' துகள்களைக் கண்டறியும் 'ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தின்' உருவாக்கத்தின் பங்களிப்புக்காக பேராசியர் பிரான்சிஸ் ஹேல்சனுக்கு Francis Halzen(82) வழங்கப்படுகிறது. .இவர் அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மேடிசன் பல்கலைகழகத்தில் பணியாற்றும் பெல்ஜிய நாட்டு ஆராய்ச்சியாளர்
'நியூட்ரினோ' என்பது அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். பிரபஞ்சம் முழுவதிலும் காணப்படுகிறது. நியூட்ரினோ பற்றிய ஆய்வானது இந்த பிரபஞ்சத்தின் தொடக்கத்தை குறித்து ஆராய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஃபிரான்சிஸ் ஹேல்சனின் பணி, கோஸ்ட் பார்டிக்கிள் எனப்படும் நியூட்ரினோக்கள் பொருள்களை ஊடுருவி செல்லும் திறன் பெற்றவை. கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம்மை அன்றாடம் ஊடுருவிச் செல்கின்றன. ஆனால் மின்னேற்றம் இல்லாத நியூட்ரினோக்ளை பிடிப்பது சிரமம். அதனால் அண்டார்டிகா பகுதியில் 2 கி.
தொலைவிற்கு துளையிட்டு நியூட்ரினோக்கள் செல்லும்போது இந்த ஆய்வகம் மீன்வலை போல செயல்படும். பிரத்யேக தொடர்பு மூலம் நியூட்ரினோக்கள்க்கும் மின்னேற்றம் வழங்கி அவை எங்கிருந்து வருகின்றன என்பதற்கான தொடர்பை ஏற்படுத்தும். இதன் மூலம் 4 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நடந்தவற்றை கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வகத்தை 2011ம் ஆண்டு ஹேல்சன் அமைத்ததால், 2017ம் ஆண்டு பிளேசர் எனப்படும் பெரும் கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது.
நமது பூமி இடம்பெறுள்ள பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை இவை படம் பிடித்து காட்டியுள்ளது.
எதிர்க்காலத்தில் இந்த ஆய்வகம் துணைகொண்டு விண்வெளி மேப் ஒன்றை உருவாக்க முடியும் என்பதால் ஹேல்சன் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஹேல்சனின் தொலைநோக்குப் பார்வையும் தலைமைத்துவமும் நியூட்ரினோ வானியலை ஒரு புதிய அறிவியல் துறையாக நிலைநிறுத்த உதவியுள்ளது.
இது ஒரு அடிப்படை அறிவியல் ஆய்வு என்றாலும், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் விண்வெளி கதிர்வீச்சுகளைப் பற்றி அறிய உதவுகிறது. மேலும், மிக நுட்பமான துகள்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் புவிஅமைப்பு ஆய்வுகள் மற்றும் அதிநவீன சென்சார் தொழில்நுட்பங்களை உருவாக்கப் பயன்படும்.
வேதியியல்:
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வேதியியல் மர்மத்திற்கு ஹென்றி ககன் (Henri B. Kagan) (96), கென்சோ சோய் (Kenso Soai) (76) ஒரு தீர்வை வழங்கியுள்ளனர். இவர்களுக்கு வேதியியலுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
திரு. ககன் பிரான்ஸின் புலோன்-பிலன்கூர்ட் (Boulogne-Billancourt) நகரில் பிறந்தவர்; இவர் பிரான்ஸின் ஓர்சேவில் (Orsay) உள்ள பாரிஸ்-சூத் பல்கலைக்கழகத்துடன் (Université Paris-Sud) தொடர்புடையவர். திரு. சோவாய் ஜப்பானின் ஹிரோஷிமாவைச் சேர்ந்தவர்; இவர் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் (Tokyo University of Science) இணைந்து செயல்படுபவர்.
“இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அடிப்படை வேதியியலுக்கானது. அமினோ அமிலங்கள் போன்ற சில மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பங்களாக இருக்கும் இரண்டு வகைகளாக உள்ளன. இருப்பினும் உயிரி மூலக்கூறுகள் இந்த பிம்பங்களில் ஒன்றை மட்டும் கொண்டுள்ளன.
புரதங்களின் கட்டுமானக் கூறுகள் ஒரு உதாரணம். இது போன்ற சமச்சீரின்மை எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும். இதற்கான தீர்வை வழங்கியதற்காக இவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு குறித்து ஹெய்னர் லிங்கே கூறியதாவது: நமது இடது மற்றும் வலது கைகளைப் போலவே, சில மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பங்களாக இருக்கும் இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றன. அவற்றில் ஒரே மாதிரியான அணுக்கள் ஒரே விதமாக இணைந்திருந்தாலும், அவற்றின் தன்மை வேறுபட்டவை. இந்த வேறுபாடு உயிரியலில் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
அவை ஒன்றுக்கொன்று எதிரெதிரான இரண்டு வடிவங்களில் இருக்க முடியும். ஆனால் உயிரினங்கள் புரதங்களை உருவாக்க அவற்றுள் ஒன்றை மட்டுமே பெருமளவில் பயன்படுத்துகின்றன. இது, உயிர் எப்படி ஒரு மூலக்கூறு வடிவத்தை மற்றொன்றை விடத் தேர்ந்தெடுத்தது? என்கிற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.
பல ஆண்டுகளாக, வேதியியலாளர்கள் இதற்கு விடையளிக்கப் போராடினர். இரண்டு கண்ணாடி பிம்ப வடிவங்களில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளை அவர்கள் உருவாக்க முயன்றபோது, வேதி வினைகள் பொதுவாக இரண்டு வடிவங்களையும் ஏறக்குறைய சம அளவில் உருவாக்கின.
ஹென்றி பி. காகன், 1986-ல் செய்துக் காட்டிய வேதிவினைகள் எப்போதும் ஒரு முழுமையான சமநிலையில் நிகழ வேண்டியதில்லை என்பதை அவருடைய ஆய்வு காட்டியது.
அதன்பிறகு கென்சோ சோய் 1995-ல், ஒரு மூலக்கூறின் ஒருபக்கச் சாய்வை பெருக்கும் ஆற்றல் கொண்ட ஒரு வேதிவினையை அறிவித்தார். அந்த வினையானது தன்வினையூக்கத்தை உள்ளடக்கியிருந்தது.
2003-ல், சாத்தியமான இரண்டு கண்ணாடி பிம்ப வடிவங்களில் அடிப்படையில் ஒன்றை மட்டுமே உருவாக்கும் ஒரு வினையை கென்சோ சோய் செய்து காட்டினார். இது ஒரு மைல்கல் சாதனையாகும். ஏனெனில் உயிரியல் அமைப்புகளைத் தவிர, வேறு எந்த விஞ்ஞானிகளாலும் இதற்கு முன்பு இத்தகைய உயர் அளவிலான வேதியியல் திசைச்சார்பை தன்னிச்சையாக அடைய முடிந்ததில்லை.“ இவ்வாறு அவர் கூறினார்.
நாம் பயன்படுத்தும் பல மருந்து மூலக்கூறுகள் இரட்டை வடிவம் (வலது, இடது கை போன்ற கண்ணாடி பிம்பங்கள்) கொண்டவை. இதில் ஒரு வடிவம் நோயைக் குணப்படுத்தினால், மற்றொரு வடிவம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இவர்களின் கண்டுபிடிப்பு, பக்கவிளைவுகள் இல்லாத துல்லியமான மருந்துகளை எளிதாகத் தயாரிக்க உதவுகிறது.
நறுமணம் மற்றும் அன்றாடப் பொருட்கள்: இந்தத் தொழில்நுட்பம் உணவு மற்றும் அழகுசாதனத் துறையில் நறுமணப் பொருட்கள் (Scents), சுவையூட்டிகள் (Flavours) மற்றும் புதிய மேம்பட்ட பொருட்களைத் தயாரிப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.