

நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் என்று பல ஐரோப்பிய நாடுகளில் இந்திய உணவு வகைகளுக்கு நீண்ட காலமாகவே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம், தி ஹேக், உட்ரெக்ட், ராட்டர்டாம், ஐந்தோவன் போன்ற நகரங்களில் இந்திய உணவகங்கள், தந்தூரி உணவகங்கள், தென்னிந்திய உணவகங்கள், கறி ஹவுஸ்கள் என பல்வேறு வடிவங்களில் இந்திய உணவகங்கள் பிரபலமாகி, ஐரோப்பா வாழ் இந்தியர்கள், இந்திய டூரிஸ்டுகள் மட்டுமில்லாமல், ஐரோப்பியர்களையும் தங்கள் ருசியான உனவு வகைகளால் ஈர்க்கின்றன.
எனவே, இங்கே இந்திய உணவகங்களைத் தொடங்குவதிலும், இந்தியாவில் உள்ள பிரபல உணவகங்களின் உரிமை பெற்ற கிளைகளைத் தொடங்குவதிலும் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் நெதர்லாந்து இந்தியா மாதிரி கிடையாது. இங்கே தொழிலாளர் சட்ட திட்டங்கள் கடுமையானவை. அவற்றைக் கடைபிடிக்காத நிறுவனங்கள்மீது அரசாங்கம் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கும்.
நெதர்லாந்தில் செயல்பட்டுவந்த இந்திய உணவகங்கள் மீதான நெதர்லாந்து அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள் நெதர்லாந்தில் இயங்கும் சில இந்திய உணவகங்களின் பின்புலத்தில் இருந்ததாகக் கூறப்படும் தொழிலாளர் சுரண்டல் மற்றும் குடியேற்றச் சட்ட மீறல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
மேலும், சில நாட்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட ரெய்டில் நெதர்லாந்து தொழிலாளர் ஆய்வுத் துறையின் விசாரணைப் பிரிவு உட்ரெக்ட், ஆம்ஸ்டர்டாம், தி ஹேக், ஹூஃப்ட்டார்ப் மற்றும் ஹில்வர்சம் உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வந்த மூன்று சர்வதேச இந்திய உணவகச் சங்கிலிகளுக்குச் சொந்தமான எட்டு உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு, இரண்டு உணவக உரிமையாளர்களைக் கைது செய்தது.
தாங்கள் மேற்கொண்டது சாதாரணமான உணவுத்தரம் குறித்த சோதனை அல்ல. மனிதக் கடத்தல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2019ல், நெதர்லாந்தில் ஆசிய உணவகத் துறைக்கான சிறப்பு பணியாளர் அனுமதி திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, உணவக உரிமையாளர்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியிலிருந்து சிறப்பு திறன் கொண்ட ஆசிய சமையல் கலைஞர்களை நெதர்லாந்துக்கு அழைத்து வருவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டது.
இந்திய, சீன, இந்தோனேசிய மற்றும் பிற ஆசிய சமையல் கலைஞர்களுக்கு இது பொருந்தும். ஆனால், இந்த சலுகையை சில இந்திய உணவகங்கள் தவறாகப் பயன்படுத்தியதால், இப்போது பிரச்னையில் சிக்கியுள்ளன. சிறப்பு சமையல் கலைஞர்கள் என்று கூறி, அனுமதி பெற்று அழைத்து வந்தவர்களை உணவக மேலாளராகவும், உணவு பரிமாறவும், துப்புரவு மற்றும் பாத்திரம் கழுவும் வேலைகளுக்கும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
நெதர்லாந்து தொழிலாளர் நல சட்டப்படி ஊழியர்களது அதிகபட்சம வேலை நேரம் வாரத்துக்கு 38 மணி நேரம்தான். ஆனால், சமீபத்திய ரெய்டில், ஊழியர்கள் வாரத்துக்கு 60 முதல் 80 மணி நேரம் வாராந்திர விடுமுறைகளும் இல்லாமல் வேலை வாங்கப்பட்டதும், அவர்கள் வேலை செய்த கூடுதல் பணி நேரத்துக்கான ஊழ்தியம் ஏதும் தரப்படவில்லை என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நெதர்லாந்தில் இது தொழிலாளர் சுரண்டல் என்ற கடுமையான குற்றமாகும். சோதனை அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி கூடுதல் பணி நேரத்துக்கான சம்பளம் கொடுக்காத வகையில் உணவக உரிமையாளர்கள் சட்ட விரோதமாக 40 லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 44 கோடி) நிதிப்பலன் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது.
நெதர்லாந்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சர்வதேச நடவடிக்கையில் பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் காவல் மற்றும் தொழிலாளர் ஆய்வு அமைப்புகளும் பங்கேற்றன. ஐரோப்பிய காவல் ஒத்துழைப்பு அமைப்பான யூரோபோல் என்ர ஐரோப்பிய காவல்துறை அமைப்பு இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. ஆகவேதான் நெதர்லாந்தில் எட்டு இடங்களிலும், பிற ஐரோப்பிய நாடுகளில் பதினோரு இடங்களிலும் சோதனை நடத்துவது சாத்தியமானது.
சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உணவக உரிமையாளர்கள் மீது மனிதக் கடத்தல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் மனிதர்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் அழைத்து வருதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. மேலும், அவர்களது ரியல் எஸ்டேட் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள், கணினி மற்றும் பிற மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
2025 அக்டோபரில், இதுபோன்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் எடுத்த கடும் நடவடிக்கையின்பேரில் இரண்டு இந்திய உணவகங்களுக்கு அபராதம் விதித்ததோடு, ஒரு மாதத்துக்கு மூடும்படியும் உத்தரவானது. (அந்த உணவகங்கள், உணவகத்தைப் புதுப்பிப்பதற்காக, தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது வேறு கதை).
நம் ஊரில் ஏதாவது ஒரு குற்றம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டால், உடனே அவரது புகைப்படம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் இடம் பெற்றுவிடும். ஆனால் நெதர்லாந்தில் அப்படி செய்ய முடியாது. அதிகாரிகள், ரெய்டு நடத்திய உணவகங்கள், கைது செய்த உரிமையாளர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக இன்னமும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் உணவகம் தொடங்க விரும்புவோரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடுவோரும் அங்குள்ள கடுமையான தொழிலாளர் சட்டங்கள், விசா விதிமுறைகள் மற்றும் சட்டவிரோத சுரண்டல்களால் ஏற்படும் சட்ட ரீதியான விளைவுகளைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள இந்தத் தொகுப்பு உதவும்.