கிரேட் நிக்கோபர் சுனாமி - II உயிருடன் விழுங்கப் பார்த்த முதலைகள்...16 நாட்கள் போராடிய அகுவின் கதறல்!

அந்தமான் கடலில் 16 நாட்கள் மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு அகு நடத்திய உயிர்போராட்டத்தின் திகைப்பூட்டும் கதை.
சுனாமி மீட்பு - Tsunami Survival Story
சுனாமி மீட்பு - Tsunami Survival Story
Updated on
Kalki Strip
Kalki Strip

-Article written in English by Zai Whitaker

-Tamil Translation by Priyanka R

கிரேட் நிக்கோபரின் சுனாமிப் பேரழிவு - பகுதி II (டாக்டர் மணீஷ் சாண்டியின் பங்களிப்புடன்)

அகு, தன் வலியையும் பொருட்படுத்தாமல், உடலில் எஞ்சியிருந்த சக்தியையெல்லாம் திரட்டி, தன் குழுவினரை மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தார். ஆனால், அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, சுனாமியில் அவரது குழுவினர் அனைவரும் உயிரிழந்திருந்தனர்.

அரசமரத்திலிருந்து சுனாமி நீருக்குள் விழுந்த அவர், அலையினால் அலைக்கழிக்கப்பட்டு, முறிந்து விழுந்திருந்த மரக்கிளைகளுக்கும் புதர்களுக்கும் இடையே வேகமாக நீந்திக் கொண்டிருந்தார். உடலெங்கிலும் கீறல்கள் மற்றும் வெட்டுக்காயங்கள். வலதுகையில் ஏற்பட்டிருந்த எலும்புமுறிவு, அவருக்கு தீராதவலியை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அவருக்கு ஏற்பட்ட காயங்கள் இவ்வளவுதான் என்பது உண்மையில் அதிசயமே. ஆனால், இதற்குப்பிறகு நடந்த சில அதிசய சம்பவங்கள், அகுவின் சுனாமி மீட்பு கதையை, துணிச்சல் மிக்க கதைகளில் ஒன்றாக மாற்றின.

அகு, சுனாமிநீருக்குள் இருந்தவாறே, தான் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முயன்றார். அவரைச் சுற்றிலும் முறிந்து விழுந்த மரங்கள், நீரில் மிதந்துகொண்டிருந்தன. எதிர்பாராத நேரத்தில் வந்த ஓர் பேரலை, அவரது உடைகளைக் கிழித்தெறிந்து நிர்வாணமாக்கியது.

அருகிலிருந்த மரக்கிளைகளின்மீது மோதச் செய்ததுடன், பலமுறை அவரை நீருக்குள் மூழ்கடித்தது. அருகிலிருந்த மரமொன்றைப் பிடித்து எழமுயன்றபோது, அம்மரமும் அவர்மீது விழுந்து, மென்மேலும் காயங்களை ஏற்படுத்தின.

அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒரே எண்ணம், தண்ணீருக்கு அடியில் மூழ்காமல் இருக்கவேண்டும் என்பதுதான். ஒருவழியாக மிதந்துகொண்டிருந்த மரக்கட்டையொன்றையின்மீது ஏறி அமர்ந்தவாறே, சுற்றிமுற்றி பார்த்தார். கடற்கரை இருந்த இடம் தடயமே இல்லாமல் காணாமல் போயிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை, பறவைகள், பூச்சிகள் என எந்த உயிரினங்களும் தென்படவில்லை. தண்ணீர் சுழன்று சுழன்று பாய்ந்து செல்லும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா! பல கோடிகளுக்கு விற்பனையான உலகின் 5 சிறந்த ஓவியங்கள்!
சுனாமி மீட்பு - Tsunami Survival Story

வலியினாலும் களைப்பினாலும் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவர் அமர்ந்திருக்கும் மரக்கட்டை, கலேத்தியா ஆற்றை ஒட்டியிருந்த வனப்பகுதியைச் சேர்ந்தது என்பதை அவரால் நினைவுகூர முடிந்தது. இந்த தகவலைப் பயன்படுத்தி, தான் இருக்கும் இடத்தை தோராயமாக கணிக்க முயன்றார்.

அதன் மூலம், கடற்கரை இருக்கும் திசையை ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது. அத்திசையை நோக்கிச் செல்லவேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். ஆனால், அவரால் அந்த இடத்தைவிட்டு சிறிதளவும் நகர முடியவில்லை. இரவு முழுவதும் அவரால் தூங்கவும் முடியவில்லை.

மறுநாள் காலை, ஒரு ஆமையின் சடலம் நீரில் மிதந்து செல்வதைக் கண்டார்; சற்றுநேரத்தில், உயிருடன் இருந்த மற்றொரு ஆமையும் மிதந்துசென்றது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும், தாகமும் அவரை வாட்டி எடுக்கத்தொடங்கியது. அவரைச் சுற்றியிருந்த சேறும் சகதியுமான நீரை குடித்துக்கொண்டார். சிறிதுநேர தூக்கம்; பின்னர் விழித்தெழுந்ததும், மீண்டும் தூக்கம் என அவர் நாட்கள் கழிந்தன. உயிருடன் இருப்பவர்களைத் தேடி, சிறுசிறு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் கவனத்தை ஈர்க்க, அவர் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

சுனாமி மீட்பு - Tsunami Survival Story
சுனாமி மீட்பு - Tsunami Survival Story

பகல் நேரங்களில் மணல் ஈக்களும் (Sandflies), இரவில் கொசுக்களும் அவரை வாட்டி எடுத்தன. சில உப்புநீர் முதலைகள், நீரில் மிதந்துகொண்டிருந்தன; சில முதலைகள், மரக்கட்டைகளின்மீது வெயில் காய்ந்து கொண்டிருந்தன. ஓர் பௌர்ணமி இரவின்போது, அகு அமர்ந்திருக்கும் மரக்கட்டைக்கு மிக அருகில் ஒரு முதலை நோட்டமிட்டு விட்டு, பின்னர் விலகிச்சென்றது.

கிட்டத்தட்ட ஒருவாரம் கழித்து பெய்த மழை, தற்காலிகமாக அவரது தாகத்தை போக்க உதவியது. ஆனால் அம்மழையைத் தொடர்ந்து, இரவுகளில் கடுங்குளிர் நிலவியது.

உடல் சோர்ந்து அசைவற்றுக் கிடந்த அகுவை, நீர் உடும்பு (Water Monitor Lizard) ஒன்று, பிரேதம் என நினைத்து ஆராய்ந்துகொண்டிருந்தது. அதன் தொடுதல் அவருக்கு சற்று நம்பிக்கையை கொடுத்திருக்கக் கூடும்.

உடைந்த கிளை ஒன்றை துடுப்பாக பயன்படுத்தி, அங்கிருந்து மற்றொரு பகுதிக்கு நீந்திச் சென்றார். அப்பகுதியை அடைந்ததும், அவர் கண்ணெதிரில் இருப்பது கடற்கரையிலிருந்து சாஸ்திரிநகர் செல்லும் காட்டுப்பாதை என்பது அவருடைய நினைவுக்கு வந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து, எப்படியோ அந்த கடற்கரையை வந்தடைந்ததும் ஒரு மனதிருப்தி. அருகிலிருந்த சிற்றோடை ஒன்றின் நீரைப் பருகி, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தன் தாகத்தை தணித்துக்கொண்டார்.

சுனாமி மீட்பு - Tsunami Survival Story
சுனாமி மீட்பு - Tsunami Survival Story

ஜனவரி 11 ஆம் தேதி, சுனாமி தாக்கிய 16 நாட்களுக்குப் பிறகு, நான்கு கால்களில் தவழ்ந்து, தவழ்ந்து, அகு, சாஸ்திரிநகரின் புறநகர் பகுதியை அடைந்தார். சேற்றில் கிடந்த கால்சட்டை ஒன்றை எடுத்து, எலும்பும் தோலுமாய் இருந்த தன் உடலில், அதை அணிந்துகொண்டார். அது நழுவி விடாமல் இருக்க, பச்சைக்கொடி ஒன்றை இடுப்பில் பெல்ட்டாக பயன்படுத்திக் கொண்டார். (அன்று பிற்பகல் போர்ட் பிளேரில், இந்தக் கட்டுரையின் துணை ஆசிரியரும், ANET குழுவில் ஒருவருமான மணீஷ் சாண்டி, அவரைக் கண்டபோது அகு இந்த தோற்றத்தில்தான் இருந்தார்.)

முதியவர் ஒருவர் அகுவிற்கு உணவளித்து சாஸ்திரி நகருக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த வீடுகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து சிதறிக்கிடந்தன. சுனாமியின் சீற்றத்தால், ஒட்டுமொத்த கிராமமே உருக்குலைந்து போயிருந்தது.

அந்த சமயத்தில், சென்னை முதலைப்பண்ணையின் இயக்குனராக இருந்தவர் ஹாரி ஆண்ட்ரூஸ். சுனாமி குறித்து அறிந்ததும், உடனடியாக அவரும் மணீஷ் சாண்டியும் போர்ட் பிளேருக்குச் சென்றிருந்தனர். பாயிண்ட் 41 பகுதியில் வான்வழித் தேடுதலுக்காக, அவர்கள் தீவிரமாக முயன்றுகொண்டிருந்தனர். ஆனால், விமானப்படையின் அனைத்து விமானங்களும், இருபத்திநான்கு மணிநேரமும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா! பல கோடிகளுக்கு விற்பனையான உலகின் 5 சிறந்த ஓவியங்கள்!
சுனாமி மீட்பு - Tsunami Survival Story

இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், அந்த 16வது நாள்தான், ஹாரிக்கு கடற்படையிடமிருந்து வான்வழித்தேடுதலுக்கு அனுமதி கிடைத்தது. அவர்கள் வானிலிருந்து, கலாத்தியாவை சுற்றியுள்ள பகுதிகளை தேடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓர் திறந்தவெளி நிலப்பரப்பிலிருந்து சிலர் தம் கைகளை அசைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

விமானி, அந்த இடத்தில் விமானத்தைத் தரையிறக்கினார். தென்னை மரமொன்றின்கீழ், அகு அமர்ந்திருப்பதைக் கண்டவுடன் ஹாரி மகிழ்ச்சியடைந்தார். அதே நேரத்தில், மற்றவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தபோது, மிகவும் வருத்தமடைந்தார்.

மற்றொரு விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அகு மற்றும் அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக போர்ட் பிளேருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஹாரியும் விமானியும் மற்றவர்களைத் தொடர்ந்து தேடும்பணியில் ஈடுபடவிருந்தனர்.

பின்னர், மின்னி பேயில் உள்ள INS தன்வந்திரி மருத்துவ மனையில் அகு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடலில் ஓரளவு வலிமை திரும்பியதும், வடக்கு அந்தமானிலுள்ள வெபியில் வசித்துவரும் தன் குடும்பத்தினருடன் சில மாதங்களை கழித்தார். பின்னர், ANET -க்கு திரும்பினார்.

மறைந்த அம்பிகா திரிபாதியின் நினைவுகள் இன்றும் நம்முடன் வாழ்கின்றன. அவர் ஆர்வத்துடன் மேற்கொண்ட ஓங்கல் ஆமைகள் குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் ANET மூலம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ANET தற்போது கடல்சார் ஆராய்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் Dakshin Foundation அமைப்பின் கீழ் இயங்கி வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஏன் வளைகுடா நாடுகளில் மட்டும் எண்ணெய் வளங்கள் அதிகமாக இருக்கின்றன?
சுனாமி மீட்பு - Tsunami Survival Story

இத்தகைய துயரமிகு அனுபவத்திலிருந்து அகுவை மீளச்செய்த அவருடைய மனவலிமையும் உடல் வலிமையும் நம் அனைவருக்கும் ஓர் சிறந்த முன்னுதாரணமாகும். இவ்வனுபவத்தால் அவரை மிகவும் பாதித்தது எதுவென்று நான் அவரை கேட்டபோது, தனக்கு ஏற்பட்ட துன்பத்தைவிட, தன்னுடன் இருந்த நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள்; அவர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் அவரை மிகவும் வருத்தமடையச் செய்ததாக அவர் கூறினார்.

(கிரேட் நிக்கோபரின் சுனாமி அனுபவங்கள் ... நிறைந்தது)

logo
Kalki Online
kalkionline.com