கவிதை: தேர்தல் மை!

voting awareness
Voting awarenessImage credit: Ai
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Kalki strip
Kalki strip

ஆட்காட்டி விரலுக்கு

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை

வைக்கப்படும் அலங்காரப்பொட்டு!

வரும் ஆண்டுகளில்

வளத்தைச் சேர்க்கவும்…

வறண்டு போகவும்…

நமக்குநாமே எழுதிக்கொள்ளும்

தீர்ப்பின் அடையாளம்!

வாக்குச் சீட்டிலிருந்து

பட்டனை அழுத்தும்

நவீன முறைக்குத்

தாவிய போதும்…

விரல்பொட்டுக்கு மட்டும்

வந்திடவில்லை மாற்றம்!

அந்த விரலைத்

தேர்ந்ததன் நோக்கம்

உளவியல்படி ஒன்றுண்டு!

அடுத்தவரைச் சுட்டி

அடையாளம் காட்டும்

அற்(ப)புதப் பணியை

என்றைக்கும் செய்வது

கட்டை விரலின்

கக்கத்தில் இருக்கும்

ஆட்காட்டி விரலே!

தேர்தல் என்பது

பலரில் ஒருவரைத்

தேர்ந்தெடுக்கும் திருவிழாதானே!

ஆளைச் சுட்டும்

அந்த விரலுக்குச்

சிறப்பிடம் வழங்கிச்

சிறப்பிப்பது முறைதானே!

அதைத்தான் ஆணையம்

அன்றிலிருந்து இன்றுவரைக்கும்

மாற்றமின்றி மதிப்பளித்துச்

செயல் படுத்துகின்றது!

பதினெட்டு நிரம்பி

வாக்களிப்போர் மட்டுமே

இந்தப் பொட்டினை

ஏற்கும் தகுதியைப்

பெற்றே இலங்குவர்!

முதல்முறை இதனை

ஏற்றதன் பிறகு

முகிழ்ந்திடும் மகிழ்ச்சி

எல்லை கடந்தது!

எல்லோரிடமும் காட்டிடத்தூண்டும்

இதயம் எங்கணும்

பரவிடும் பரவசம்!

ஓட்டு (VOTE) என்ற

ஆங்கிலச் சொல்லுக்கு

‘வரிசெலுத்துவோரின் குரல்’

(Voice Of Taxpayers Everywhere)

என்ற நிலையே இருந்துள்ளது!

வரிசெலுத்துவோர் மட்டுமே

வாக்குரிமை அளிக்கும்

அந்தநிலையை மாற்றியமைத்து

வயது வந்தோரனைவரும்

வாக்குச் செலுத்தும்

உன்னத நிலைக்கு

உயர்வை அளித்தவர்

அண்ணல் அம்பேத்கர்!

இதையும் படியுங்கள்:
கவிதை: ஜனநாயகத் திருவிழா!
voting awareness

அவரின் உழைப்பை

அகத்தில் வாழ்த்தி…

வயதுவந்தோர் அனைவரும்

வாக்கினை அளித்து…

ஆட்காட்டி விரலில்

அற்புத மையை ஏற்போம்!

நல்ல அரசினை அமைப்போம்!

logo
Kalki Online
kalkionline.com