
கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நாம் எல்லோரும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினோம். வீட்டில் உள்ள விநாயகர் மட்டுமின்றி அருகிலும் பல்வேறு இடங்களில் பிரமாண்டமான விநாயகரை நாம் கண்டு களித்தோம்.
சென்னை குரோம்பேட்டையில் விநாயகர் பக்தர் ஸ்ரீனிவாசன் அவர்கள் கடந்த 19 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கண்காட்சி நடத்தி வருவது உங்களுக்குத் தெரியுமா?
இந்த வருடம் 22 ஆயிரம் விநாயகர் உருவங்களைக் கொண்டு 12 நாட்களுடைய விநாயகர் கண்காட்சி நடத்தி வருகிறார். முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு 100 விநாயகர் உருவங்களைக் கொண்டு இந்தக் கண்காட்சி தொடங்கிய அவர், வருடா வருடம் விநாயகர் உருவங்களின் எண்ணிக்கை அதிகரித்து, இந்த வருடம் 22 ஆயிரம் என இந்தக் கண்காட்சியின் பிரம்மாண்டத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார்.
இந்தக் கண்காட்சியில் ஒரு மனிதன் இளம் வயது முதல் முதிய வயது வரை எத்தகைய செயல்களை எல்லாம் செய்வானோ அத்தகைய பல்வேறு செயல்களை விநாயகர் செய்வது போன்று பல்வேறு விநாயகர் சிலைகள், படங்கள், பொம்மைகள் என பல்வேறு விநாயகர்கள் உள்ளனர்.
ரங்க ராட்டினத்தில் விநாயகர், படகில் விநாயகர், கம்பத்தை சுற்றி விளையாடும் விநாயகர், நீரூற்றில் விநாயகர், பல்வேறு உலோகங்களில் விநாயகர்கள் என விநாயகர் உருவங்கள் கண்காட்சி முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்தக் கண்காட்சி ஓம்கார வடிவான விநாயகரைப் பல்வேறு காட்சியமைப்புகளில் நாம் கண்டு மகிழ்ச்சி அடைய உதவுகிறது. பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் இந்த கண்காட்சியை விரும்பி பார்வையிடுகின்றனர்.
இந்தக் கண்காட்சியைத் தொடங்கியதன் வரலாற்றை விநாயகர் குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் கேட்டபோது, அவர் 2001 இல் விபத்தில் சிக்கியபோது, அதிலிருந்து மீண்டு வர விநாயகரின் அருள் உதவியது என்று கூறுகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் இத்தகைய கண்காட்சியை அவர் தொடங்கியதாகக் கூறினார்.
முதலில் அவரது அலுவலகத்திலேயே ஒரு அறையில் நூறு விநாயகர்களைக் கொண்டு தொடங்கியவர், இந்தக் கண்காட்சிக்கு மக்களை அழைக்க சாலைக்கு சென்று, 'வாருங்கள் வாருங்கள்' என்று அழைத்த தனது ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தக் கண்காட்சி பின்னர் விரிவடைந்து அவரது குழுமத்தின் மற்ற திருமண மண்டபங்கள், வணிகக் கட்டடங்கள் என பல்வேறு இடங்களில் வருடாவருடம் நடந்து வருகிறது. இந்த வருடம் ஸ்ரீ ராம் கணேஷ் வணிக வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இதனை நடத்தும் ஸ்ரீனிவாசன் அவர்கள் இதனை எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக மக்களுக்காக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை குரோம்பேட்டையில் நடக்கும் இந்த வருட விநாயகர் கண்காட்சியை நீங்கள் தவறாமல் கண்டு களியுங்கள். இடம் மற்றும் காட்சி நேரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
இடம்
ஸ்ரீ ராம் கணேஷ் காம்ப்ளக்ஸ்,
21, அனுமார் கோவில் தெரு,
ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை- 44
(ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில்)
நாள்- 27/ 8/ 2025 முதல் 7/9/ 2025 வரை
காட்சி நேரம்:
காலை 9 முதல் 12 மணி வரை
மாலை 4 முதல் 7 மணி வரை
இந்தக் கண்காட்சி மூலம் பரம்பொருளான விநாயகரின் பல்வேறு உருவங்களைக் கண்டு களிப்போம்.