

தங்கத்தின் விலை ராக்கட் வேகத்தில் உயர்ந்து வந்தாலும், நகைக் கடைகளில் எப்பொழுதும் திருவிழாக் கூட்டமாகவே இருக்கிறது. எப்படி இது? என்று காரணம் புரியாமல் வியந்திருத்த நேரத்தில் வந்துள்ளது விபர அறிக்கை.... நம் நாட்டில் தங்கம் என்பது, குடும்ப கௌரவத்தைப் பறை சாற்றுவது, பெருமையைச் சேர்ப்பது, ஆபத்துக் காலத்தில் உதவுவது, மன நிம்மதியையும் மகிழ்வையும் தருவது, வாழ்வின் பயத்தைப் போக்குவது என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கோல்ட் (Gold savings) இருந்தால் தான் ‘கோல்டன் லைப்’ என்று பலரும் எண்ணுகின்றனர். அது ஓரளவுக்குச் சரியே! ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரை எடை போடுவது அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும், உடைகளையும் வைத்துத்தான்!குணம், கல்வி, இத்யாதிகளெல்லாம் அதற்குப் பிறகுதான்!
நம் தமிழ் நாட்டில் ஆன்மீகத்துடனும், நம் பாரம்பரியக் குடும்பச் சடங்குகளுடனும் பின்னிப் பிணைந்து கிடப்பது தங்கமே!திருப்பதி ஏழு மலையான் உண்டியலில் கிலோ கணக்கில் தங்கம் காணிக்கையாக்கப்படுவதை, அவ்வப்போது செய்திகளின் வாயிலாக அறிகிறோம். மணப்பெண் தன் குடும்பத் தகுதிக்கேற்ப புகுந்த வீட்டுக்குக் கொண்டு வரும் பொருட்களில் சிறப்பிடம் வகிப்பது தங்கமே.
அதோடு மட்டுமல்ல. பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்த பின்னரும், தலைத் தீபாவளி, குழந்தைகளின் காப்பு, காதணி விழா என்று பிறந்த வீட்டுச் சீர்களிலும், மாமன் முறைச் சீர்களிலும் தலைமையிடம், தங்கத்திற்குத்தான்!
உலகின் பொருளாதாரம் ஆட்டம் காண்கையில் அதனைத் தடுத்து நிறுத்துவது கோல்ட் தான்! கரன்சி போல் அதற்கு நாடு, மொழி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லா நாட்டிலுமே கோல்ட் கோல்டு தான்! பவுனு பவுனுதான் என்பதைப்போல!
உலகத் தங்கக் கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க நாட்டின் தேசீய கோல்ட் ரிசர்வு அளவுக்குச் சற்றேறக்குறைய, நம் தமிழ் நாட்டிலும் தங்கம் குவிந்து கிடக்கிறதாம்! இது நமக்கெல்லாம் மிகப் பெரும் பெருமைதானே!
நமது இந்திய நாட்டில் உள்ள மொத்தத் தங்கம் 34,600 டன் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதன் மதிப்பு சுமார் 3.80 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் இந்தியப் பண மதிப்பில் சுமார் 33,692 கோடி ரூபாய் என்றும் மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) நிறுவன அறிக்கை சொல்கிறது.
அதில் 45 விழுக்காட்டுத் தங்கம் தென்னிந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலுந்தான் அதிகமாக உள்ளதாம்! நம் தமிழ்நாட்டில் மட்டும் 6720 டன் தங்கத்தை, நம் மக்கள் காசுகளாகவும், நகைகளாகவும் குவித்து வைத்துள்ளார்களாம்!
அதோடு நிறுத்தாமல் மற்றொரு ஒப்பீட்டு அறிக்கையையும் உலகத் தங்கக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் 8000 டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாகவும், ஜெர்மனியில் 3300 டன்னும், இத்தாலியில் 2450 டன்னும் கையிருப்பில் இருக்கையில், நம் தமிழ் நாட்டில் மட்டுமே 6720 டன் தங்கம் நம் மக்கள் கைவசம் உள்ளதாம். இத்தாலியும், ஜெர்மனியும் நம் அருகில் கூட வரவில்லை.
தங்கத்தின் மதிப்பு ஆண்டுக்குச் சுமார் 8 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்தே வருவதால், அதில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறதாம். பங்குச் சந்தை (Share Market) யில் பங்குகளை வாங்குவதில் ரிஸ்க் அதிகம் உண்டு. அதில் கூடவும், குறையவும் செய்யும். தங்கத்தில் அந்த ரிஸ்க் இல்லை.
அப்படியே இருந்தாலும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை. அதோடு மட்டுமல்லாது, பங்குகள் நம் பெருமையை, சிறப்பை, வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதாக இல்லை. ஆனால், தங்கம் நம் கௌரவத்தைப் பறை சாற்றும் சாதனமாகப் பயன்படுகிறது.
எனவே தான் ஏழை, எளியவர்கள் கூட பொட்டுத் தங்கமாவது வீட்டில் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதிலேயே முக்கிய முதலீட்டைச் செய்கின்றனர்! அதனால் தான் உலக டெப்ரஷனின் போது நாம் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.
தமிழர்கள் என்றால் சும்மாவா?
‘பாரத நாடு பழம்பெரும் நாடு!
நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!’ என்பதோடு,
‘தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா!’
என்பதையும் இங்கு நினைவில் வைப்போம்!