

உங்க பையன் “அப்பா சாக்லேட் வேணும்” என்று அடம்பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அவனை அழைத்து கொண்டு சூப்பர் மார்க்கட்டுக்கு சென்று சாக்லேட் பார் ஒன்றை வாங்கி அவன் கையில் திணிக்கிறீர்கள். "டாடி டாடி… இது சின்னது… எனக்கு பெருசு வேணும்” என்கிறான் உங்கள் செல்லம்! நீங்கள் சாக்லேட்டை வாங்கி அதன் எடையை பார்க்கிறீர்கள்.180 கிராம் என்கிறது சாக்லேட். அட! இருக்க முடியாதே… இதே சைசில்தானே வழக்கமாக வாங்குவேன். அது 200 கிராம் என்று இருக்குமே என்கிறது உங்கள் சின்ன மூளை!
இங்குதான் சாக்லேட் தயாரிப்பாளரின் கில்லாடித்தனம் வெளிப்படுகிறது! நீங்கள் முன்னர் வாங்கிய அதே நீள அகலம் உள்ள சாக்லேட் பார், ஆனால் இது நயந்தாராவின் இடையைப்போல் மெலிந்து புது வடிவம் எடுத்தது! ஆம், நீங்கள் கவனிக்கக் கூடாதே என்பதற்காக உருவத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் எடையை சிறிது குறைத்து அதே விலைக்கு விற்கும் புது தந்திரம் இது! இதற்கு நிபுணர்கள் வைத்த செல்லப் பெயர் தான் ஷ்ரிங்க்ஃப்ளேஷன் (Shrinkflation) !
ஷ்ரிங்க்ஃப்ளேஷன் (Shrinkflation) என்ற சொல் அண்மைக் காலங்களில் நுகர்வோர் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஒரு புதிய பொருளாதாரப் பரிமாணம் அல்ல, ஆனால் அதன் தாக்கம் என்று கூறலாம்.
ஷ்ரிங்க்ஃப்ளேஷன் என்பது ஒரு பொருளின் அளவு, எடை அல்லது எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அதன் விலையில் அதற்கான மாற்றத்தை செய்யாமல் அதே விலையில் விற்பனை செய்யும் ஒரு பொருளாதார யுக்தி. இதை உங்களைப் போன்ற அப்பாவி கஸ்டமர் கவனிக்காமல் கடந்து போவார்கள் என்று நம்புகின்றனர் பல கில்லாடி உற்பத்தியாளர்கள். ஆனால், இந்த 'கண்ணுக்குத் தெரியாத' விலை உயர்வு அப்பொருட்கள் மீதுள்ள நுகர்வோரின் நன்மதிப்பையும் படிப்படியாக குறைக்கிறது என்பது உண்மை.
முச்சந்திக்கடை பாட்டி ஒரு கரண்டி தோசை மாவில் தோசை செய்த காலம் போய் அரை கரண்டி மாவில் அதே சைசில் மெல்லிய தோசையை செய்து அதே விலைக்கே விற்பது போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தியாவில் பிஸ்கட் பாக்கெட்டுகள், சிப்ஸ், சாக்லேட்டுகள், சோப்பு கட்டிகள், சலவைத்தூள் போன்ற பொருட்களில் இந்த செயல்பாட்டை பரவலாகக் காணலாம்.
இந்த நிகழ்வு பெரும்பாலும் அதிக பணவீக்கச் சூழலில்தான் அரங்கேறுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, போக்குவரத்துச் செலவுகள், தொழிலாளர் சம்பளம் போன்ற பல காரணங்களால் நிறுவனங்களின் லாப வரம்புகள் குறையும்போது, கம்பெனிகள் லாபத்தைப் பாதுகாக்க வேறு வழிகளைத் தேடுகின்றன.
விலையை நேரடியாக உயர்த்துவது நுகர்வோரின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால், நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் அளவை (நிறை அல்லது கொள்ளளவு) குறைத்து, அதே விலையிலோ அல்லது சற்றே அதிக விலையிலோ விற்க முனைகின்றன.
நுகர்வோர் அதே விலைக்கு ஒரு பொருளை வாங்கும்போது, உண்மையில் அவர்களுக்குக் குறைவான எடையுள்ள பொருள் கிடைக்கிறது என்பதை உணர்வதில்லை. இது ஒருவித மறைமுக விலை உயர்வு என்பதை அறியாமல் கஸ்டமர் காதில் பூச்சுற்றும் வேலையை பல உற்பத்தியாளர்கள் லாவகமாக செய்து முடிக்கிறார்கள்.
இது பொருட்கள் விற்பனையோடு மட்டும் நின்றுவிடாது சேவைகளினும் பரவி வருவதை பார்க்கலாம். கடைகளில் கஸ்டமர் சர்விஸ் செய்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் தொடங்கி ‘கால் சென்டர்’களில் ஆட்குறைப்பு செய்து வரை இது பரவி வருகிறது. நீங்கள் ‘சுடு சுடு’ தோசைக்கு ஆர்டர் பண்ணிவிட்டு ‘ஐஸ் தோசை’ சாப்பிட்ட அனுபவத்திற்கான காரணமும் இந்த ஆட்குறைப்பே!
இப்போது பல மேலைநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் நீங்களே உங்கள் பொருட்களை ஸ்கான் செய்து பைகளில் அடுக்கி பணத்தை செலுத்தி விட்டு பெருமூச்சுடன் நடையைக்கட்டும் காட்சி அரங்கேறத் தொடங்கியுள்ளது. இதற்கு self-service என்ற அலங்காரமான பெயர் வேறு!
சரி, விலைகள் உயரும்போது, அதே விலைக்குப் பொருட்களின் அளவைக் குறைத்து விற்கும் Shrinkflation பற்றி கூறிவிட்டேன். ஆனால், அதைவிட அமைதியாக நுகர்வோரைப் பாதிக்கும் ஒரு புதிய வடிவம் உருவாகியுள்ளது. அதுவே 'ஸ்கிம்ப்ஃப்ளேஷன்' (Skimpflation).
இது பொருட்களின் தரம் அல்லது வழங்கப்படும் சேவையின் அளவைக் குறைத்து, விலையை அப்படியே அல்லது சற்று உயர்த்தி விற்கும் ஒரு தந்திரம் ஆகும். சாக்லேட் பாரில் கோக்கோவின் விகிதாசாரத்தை குறைத்து முந்திரியின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஜிலேபியில் நெய்யின் பாவனை குறைத்து மலிவான நிலக்கடலை எண்ணையை அதிகரிப்பது, தகரத்தில் அடைத்த மீனுடன் பாசமாய் கடல் நீரையும் அதிகமாக சேர்த்து அடைப்பது போன்ற தந்திரங்கள் இவை.
நம் ஊர் பாஷையில் சொல்வதானால் ஐந்து வருடங்களாக லிட்டர் பசும்பாலை அதே விலைக்கு வழங்கி வரும் அந்த புண்ணியவானை சொல்லலாம். கலந்த தண்ணீர் அளவு அவருக்கே வெளிச்சம். புரிகிறதா?
நிறுவனங்கள் உற்பத்திச் செலவுகள் (மூலப்பொருட்கள், தொழிலாளர் ஊதியம், எரிசக்தி, போக்குவரத்து) அதிகரிப்பதால், தங்கள் லாபத்தைப் பாதுகாக்கவே இந்த உத்தி என்பது அவர்கள் வாதம். விலையை நேரடியாக உயர்த்தினால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் அல்லது அளவைக் குறைத்தால் அது வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதால், தரத்தைக் குறைப்பது ஒரு 'கில்லாடித்தனமான' வழியாகக் கருதப்படுகிறது.
இது, நுகர்வோர் மீது மறைமுகமாகச் செலவுகளைத் திணிக்கும் ஒரு உத்தி என்பதில் ஐயமில்ல.
சரி, இதிலிருந்து தப்ப என்னதான் வழி என்று கேட்கிறீர்களா?
1. விழிப்புணர்வுடன் இருத்தல்: பொருட்களை வாங்கும் முன் அதன் அளவு, எடை மற்றும் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
2. அலகு விலையை சரிபார்த்தல்: ஒரு பொருளின் ஒட்டுமொத்த விலையை விட, ஒரு கிலோ கிராம் அல்லது ஒரு லிட்டருக்கான விலையை (Unit Price) ஒப்பிடுவது சரியான அளவைக் கண்டறிய உதவும்.
3. மாற்றுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்தல்: ஒரு பிராண்ட் இந்த தந்திரத்தை பயன்படுத்தினால், அதற்கு மாற்றாக வேறு பிராண்டுகளைத் தேடி தேர்ந்தெடுப்பது, அந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவும்.
4. புகார் தெரிவித்தல்: அநியாயமான வணிக நடைமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புகார் தெரிவிப்பது, இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க உதவும்.
நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாங்கும் பொருட்களின் தரம், சேவை, மூலப்பொருட்கள் ஆகியவற்றை கவனமாகப் பரிசோதிக்க வேண்டும். மாற்றங்கள் தென்பட்டால், மாற்றுத் தயாரிப்புகளைத் தேடவோ அல்லது நிறுவனங்களுக்குப் புகார் செய்யவோ தயங்கக் கூடாது.
Shrinkflation, Skimpflation என்பன இன்றைய சந்தையில் நாம் எதிர்கொள்ளும் புதிய சவால்கள். இவற்றைப் பற்றி அறிந்து வைத்திருப்பது, நமது பணத்தை புத்திசாலித்தனமாகச் செலவிட உதவும்.
அடுத்த தடவை நீங்கள் ஷாப்பிங் போகும் போது துணைக்கு துப்பறியும் சாம்புவையும் அழைத்துச் செல்லவதே ஒரே வழி. உற்பத்தியாளர்கள் செய்யும் கில்லாடித்தனமாக 'ஃப்ளேஷன்’கள் அவரின் கழுகுக்கண்களில் இருந்து தப்ப முடியாது!