

இன்றைய குழந்தைகளின் கைகளில் வண்ணமயமான பென்சில்கள், விதவிதமான பேனாக்கள், டிஜிட்டல் டேப்லெட்டுகள் இருக்கின்றன. ஆனால் அன்று என்ன இருந்தது என்று இந்தத் தலைமுறை அறியுமா?
1960, 1980, 1990 மற்றும் 2000-களின் தொடக்கத்தில் பள்ளிக்குச் சென்றவர்களின் அனுபவங்களை நீங்கள் கேட்டதுண்டா? வாய்ப்பு இருந்தால் கேட்டுப் பாருங்கள். சிலேட்டு, சிலேட்டு பலப்பம் அல்லது குச்சி, இங்க் பேனா இல்லாமல் நிறையாது அவர்கள் பள்ளி அனுபவங்கள். இன்று எந்தக் குழந்தைகளுக்கும் தெரியாத இவை தந்த சுகமான படிப்பு அனுபவங்கள் என்றும் நினைக்க நினைக்க இனிமை தான்.
அன்று சிலேட்டில் தொடங்கிய நமது கல்விப் பயணம் இன்று கணினித் திரையில் தொடர்கிறது. எழுதும் கருவிகள் மாறிவிட்டன; கற்றல் முறைகளும் மாறிவிட்டன. ஆனால் சிலேட்டில் முதன்முதலில் எழுதிய முதல் எழுத்தின் மகிழ்ச்சியையும், இங்க் பேனாவில் எழுதிய முதல் கையெழுத்தையும் எந்தத் தொழில்நுட்பத்தாலும் மீண்டும் உருவாக்க முடியாது.
ஸ்மார்ட் கிளாஸ், டேப்லெட், டிஜிட்டல் பேனா, கணினி எனக் கல்வி மாறிவிட்டது. ஆனால் சிலேட்டு, பலப்பம், மரபென்சில்கள், பிளேடுகள், இங்க் பேனா, மைக்கூடு, பிளாட்டிங் தாள், அழிப்பான்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், அலுமினிய பெட்டி என பழைய பொருட்கள் தந்த மகிழ்ச்சி அலாதியான தனித்துவமானது.
அன்று பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய குழந்தைகளின் முதல் நண்பன் சிலேட்டுதான். கருப்பு நிறச் சிலேட்டில் வெள்ளை நிறச் சிலேட்டுக் குச்சியால் அ, ஆ, இ, ஈ என்று எழுதக் கற்றுக்கொண்ட நாட்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா?
குழந்தைகளின் முதல் எழுத்துகளைத் தாங்கிய சிலேட்டு. நான்கு முனைகளும் கலர் கலரான பிளாஸ்டிக்கால் மூடி நடுவில் இருக்கும் கரும்பலகை நம்மை எழுதத் தூண்டும். தவறாக எழுதினால் அழித்துவிட்டு மீண்டும் எழுதும் வசதியுடன் இருக்கும் சிலேட்டைக் கழுவி வெயிலில் காயவைத்த நினைவுகள் பசுமையானவை.
சிலேட்டில் எழுதும்போது எழும் டொக்டர் டொக் என்ற அந்தத் தனித்துவமான சத்தம் இன்றும் பலரது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் சிலேட்டுக் குச்சி உடைந்துவிட்டால் அதைத் தூக்கி எறிய மனம் வராது. சிறிய துண்டாக இருந்தாலும் கடைசி வரை பயன்படுத்துவோம்.
சிலேட்டில் எழுதிவிட்டு தண்ணீர் தெளித்து, துணியால் துடைத்து மீண்டும் பயன்படுத்திய அனுபவம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்காத ஒன்று. அதிலும் தண்ணீர் எடுக்க சோம்பல் பட்டு எச்சில் கொண்டு அழித்து அடி வாங்கிய அனுபவம் மறக்க முடியுமா?
அடுத்த நிலையில் பென்சிலும் பிளேடும் பிரிக்க முடியாத நட்புறவில் இருந்தது.
ஆம்.. சிலேட்டிலிருந்து நோட்டுப் புத்தகத்திற்கு மாறியதும் பென்சில் நம்முடைய அடுத்த நண்பனானது.
அப்போது பென்சில் சீவுகருவி (ஷார்ப்னர்) எல்லோரிடமும் இருக்காது. பல நேரங்களில் பிளேடைக் கொண்டுதான் பென்சிலைச் சீவுவோம். மரத்துண்டுகள் சுருளாக விழுவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யம். அதிலும் கூர் உடையாமல் சீவுவதும் சீவுகருவியில் சீவும் போது மரசுருள் அழகாக நடுவில் அறுந்து நேக்காக சீவுவதும் போட்டியாகவே நடக்கும்.
பென்சில் சிறியதாகிவிட்டாலும் அதைத் தூக்கி எறிய மாட்டோம். எழுதுவதற்குச் சிரமமாகும் வரை நுனி வரை பயன்படுத்துவோம். சிலர் சிறிய பென்சிலின் பின்புறத்தில் பென்சில் நீட்டிப்புக் கருவியைப் பொருத்தியும் பயன்படுத்துவார்கள். அப்போதெல்லாம் கருப்பு சிவப்பு நீள்கோடுகள் கொண்ட நடராஜ் பென்சில் வைத்திருந்தால் வசதி என்று சொல்வதுண்டு.
பெரிய கிளாஸ் அதாங்க ஆறாம் வகுப்பு வந்ததும் நம்ம கையில் இங்க் பேனா தருவார்கள். ஆஹா.. பேனாவின் கையெழுத்துக்கு ஒரு தனி கம்பீரம் இருப்பது இன்றளவும் உண்மை.
பள்ளிப் பருவத்தில் இங்க் பேனா பயன்படுத்துவது ஒரு தனி கௌரவமாகவே கருதப்பட்டது. குறிப்பாக, மேல் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களின் கைகளில் இங்க் பேனா இருப்பது பெருமையாக இருக்கும்.
அதுமட்டுமின்றி தினமும் பள்ளி செல்லும் முன் மை பாட்டிலைத் திறந்து, பேனாவில் மை நிரப்புவது ஒரு சுவாரஸ்யமான வேலை. சில பேனாக்களில் உள்ள ரப்பர் பம்பை அழுத்தி மை நிரப்புவோம். சிலவற்றில் நிப்பை நேரடியாக மையில் தொட்டு நிரப்புவோம்.
ஆனால், அந்தப் பேனாவைப் பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல. மை அதிகமாக நிரப்பினால் கசிந்துவிடும். சரியாக மூடாவிட்டால் சட்டைப் பையில் மை படிந்துவிடும். கையிலும் விரல்களிலும் நீல நிற மைக்கறை படிந்திருக்கும்.
இருந்தாலும் இங்க் பேனாவில் எழுதுவதற்கென்று ஒரு தனி அழகு இருந்தது. கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பலரும் பயிற்சி செய்தார்கள்.
இன்னொரு உளவியல் விஷயம்.. அன்று மாணவர் கைகள் கறைபடியாமல் இருந்தால் பெற்றோருக்கு அவர் எழுதவில்லை எனும் சந்தேகம் எழும்.
மைக்கூடும் பிளாட்டிங் பேப்பரும் தந்த சுவாரஸ்யமான அனுபவம்..
இங்க் பேனா பயன்படுத்தியவர்களுக்கு மைக்கூடு என்றால் நிச்சயம் நினைவுக்கு வரும். மேசையின் ஓரத்தில் மைக்கூட்டை வைத்துக்கொண்டு கவனமாக எழுதுவோம். இங்க்கின் மணம் நுகர்வதும் தனி சுகம். ஹீரோ பேனா, கேம்லின் பேனா: பள்ளி மாணவர்களிடம் பிரபலமாக இருந்த பேனாக்கள். தேர்வுக்கு முன்பு பேனாவைச் சரிபார்த்துக் கொண்ட நாட்கள் பரபரப்பு.
எழுதிய உடனே மை காயாமல் இருந்தால் நோட்டுப் புத்தகத்தில் அடுத்த பக்கத்திற்குப் பரவிவிடும். இதைத் தவிர்க்கப் பயன்படுத்தியதுதான் பிளாட்டிங் பேப்பர்.
எழுதிய வரிகளின் மீது அந்தக் காகிதத்தை மெதுவாக வைத்து அழுத்தினால் அதிகப்படியான மையை அது உறிஞ்சிவிடும். இன்றைய குழந்தைகளுக்கு இது ஒரு புதுமையான விஷயமாககூட இருக்கலாம். பெற்றோர்கள் மைபேனா மற்றும் பிளாட்டிங் பேப்பர் அனுபவத்தை அவர்கள் அறிய செய்யலாம்.
புதிய நோட்டுப் புத்தகத்தின் வாசனை இப்போதைய பிள்ளைகள் நுகர்வதுண்டா?.
பள்ளி திறப்பதற்கு முன்பு புதிய நோட்டுப் புத்தகங்கள் வாங்குவது ஒரு கொண்டாட்டம். ஒவ்வொரு நோட்டுக்கும் பழைய நாளிதழ் அல்லது வண்ணக் காகிதத்தில் அட்டை போடுவோம்.
அதன் மீது பெயர், வகுப்பு, பிரிவு, பாடத்தின் பெயர் ஆகியவற்றை அழகாக எழுதுவோம். சிலர் நோட்டின் முதல் பக்கத்தில் அழகான படங்களையும் வண்ண எழுத்துகளையும் வரைவார்கள்.
புதிய நோட்டுப் புத்தகத்தின் வாசனையும், அதன் வெள்ளைத் தாளில் முதல் வரியாக எழுதும் மகிழ்ச்சியும் இன்றும் பலரது மனதில் பசுமையாக இருக்கிறது. இப்போதும் இந்த வழக்கம் இருக்கிறது. இருந்தாலும் அன்று இருந்த சுவாரஸ்யம் இல்லாமல் கடமைக்காகவே உள்ளது. ஏனெனில் இந்த சுகங்களை அனுபவிக்க விடாமல் தடுக்கிறது கையிலிருக்கும் செல்போன் மற்றும் கணினிகள்.
இன்னும் கணித வகுப்பில் கோடு போடவும், புத்தகத்தில் அடிக்கோடிடவும் பயன்படுத்திய மரத்தாலான அளவுகோல்,
காம்பஸ், டிவைடர், புரோட்ரக்டர், பென்சில் ஆகியவற்றை ஒழுங்காக வைத்திருந்த ஜியாமெட்ரி பாக்ஸ், பள்ளிப் பை மற்றும் சிலேட்டுப் பை: துணிப்பை, தோளில் தொங்கும் பை, பின்னர் வந்த ஜிப்பர் பைகள் என அந்தப் பொருட்கள் நம்முடைய குழந்தைப் பருவத்தின் அழிக்க முடியாத அடையாளங்கள் என்றால் மிகையாகாது.
தேர்வு நேரத்தில் பிடித்த பேனாவைத் தொலைத்துவிட்டு பதற்றமடைந்து ஆசிரியர் சமாதானப் படுத்தியது, பள்ளியின் கடைசி நாளில் பழைய நண்பர்களுடன் பொருட்களைப் பகிர்ந்துகொண்டது என பள்ளிப் பருவ பொக்கிஷங்கள் மனதில் இன்னும் அழியாமல் இருக்கின்றன.