

சிவப்புத் தபால் பெட்டிகள், தந்திச் சத்தங்கள், மணிஆர்டர்கள் மற்றும் எஸ்டிடி பூத்துகள் நிறைந்த அந்தப் பொற்காலம் எங்கே சென்றது? நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் வரவால் நாம் தொலைத்துவிட்ட தபால் தந்தித் துறையின் பசுமையான நினைவுகளையும், கடந்த கால மனித உறவுகளின் ஆழமான பிணைப்புகளையும் இந்த விரிவான கட்டுரையின் மூலம் வாசித்து மகிழுங்கள்!
தபால் தந்தித் துறை என்று ஒரு துறை இருந்தது. இன்லேண்ட் போஸ்ட் கார்டு, மணியார்டர் என்றும், தந்தி என்றும் அந்தக்கால மக்களின் நாடித்துடிப்பு போல இரவும் பகலும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அடித்துக் கொண்டு கிடக்கும்.
இந்தத் தந்திகளை கொண்டு செல்வதற்கும் தபால்களை ரெயிலில் இருந்து மெயில் எனும் பெயரில் பைகளைத் தூக்கி வரவும் ED bagger எனும் பெயரில் ஊழியர்கள் இயங்கி வந்தார்கள்.
பெரும்பாலான அதிமுக்கியமான தந்திகள் விடிய விடிய வரும். ஆகவே அதை வாங்க சப் போஸ்ட் மாஸ்டர் தபால் அலுவலகத்திலேயே குடும்பத்தோடு குடியிருப்பார். அந்தத் தந்தி இப்போது செயல்பாட்டில் இல்லை. அதன் துடிப்பும் அனேகமாக நின்றே போய்விட்டது.
எப்படி ரெயில்வேயில் நீராவி எஞ்ஜினும் டீசல் எஞ்ஜினும் காணாமல் போனதோ அப்படி. பெரும்பாலான சாவுச்செய்திகளைக் கொண்டு வரும் தந்தித் துறை புதைக்கப்பட்டு விட்டது.
டெலிபோன் எக்சேஞ்சுகள் எங்கே போனது என்றே தெரியவில்லை. டெலிபோன் ரிங்க் சத்தம் கேட்டு மூணு மாமாங்கம் ஆகி விட்டது. தெருவுக்கு 7 எனும் கணக்கில் எல்லா நேரமும் மக்கள் கியூவில் நின்று STD போட்டுப் பேசிக்கொண்டிருக்கும் 24 X 7 என்று செயல் பட்டு வந்த STD பூத்துகள் தொலைந்தே போய் விட்டன.
எஞ்சியது இழுத்துக் கொண்டு கிடக்கும் தபால் துறையும் BSNL எனப்படும் தொலைபேசி சிம் கார்டு விற்பனை நிலையமும் மட்டுமே. தொலைத்தொடர்புத் துறையையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கித் துறையையும் தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கும் காலமிது.
அரசு வேலைகளில் இருப்போரும் அப்படித்தான் நடந்து கொண்டு தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு இருப்பதை உணராது கெத்தாக உட்கார்ந்திருக்கிறார்கள். திரும்பவும் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தாலும் ஆச்சரியமில்லை.
தனியார் நடத்தும் கூரியர் சர்விஸ்கள் வந்த பிறகு கார்டு, கவர்கள், இன்லேண்ட் லெட்டர்கள், ஸ்டாம்புகள், புக்போஸ்ட், மணியார்டர்கள், சர்டி ஃபிகேட் ஆஃப் போஸ்டிங், பார்சல்கள், பதிவுத்தபால்கள் யாவும் மறைந்தே போனது.
Certificate of posting என்றால் என்ன என்று தபால் அலுவலக ஊழியரே நம்மிடம் கேட்கிறார். செல்போன் வந்த பிறகு ட்ரங்கால் டெலிபோன் லேண்ட் லைன் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆகியவையும் வங்கிப்பணப்பரிமாற்றம் வந்த பின்பு கேஷியரிடம் பணம் வாங்கி அதுவும் போய் வங்கிகளின் ATM வந்து மெஷினில் நாமே பணமெடுத்து அதுவும் போய் G Pay, Pay Tm என்று ஆனபிறகு மணி ஆர்டர் அனுப்பும் பழக்கமும் சுத்தமாக நின்று போனது.
இவற்றோடு ஊழியர்களின் சுறுசுறுப்பும் காணாமல் போய்விட்டன. வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் நுழைந்தாலே ஊழியர்களின் முகம் அஷ்ட கோணலாகிறது. டெக்னாலஜி மாறிவிட்டதால் டைப் ரைட்டரிலிருந்து பேஜர் வரை ஒரு காலத்தில் ஆவென்று வாய் பிளந்து நாம் பார்த்து மலைத்த பல அதிசய தொழில் நுட்பங்களெல்லாம் இப்போது காயலான் கடைகளில் கிடக்கின்றன.
காலமாற்றத்தில் கலைகள், கலைஞர்கள் மட்டுமல்ல மாய மந்திரங்களும் எந்திரங்களும் கூட காலாவதியாகிப் போய் விடுவது சாதாரண விஷயமாகி விட்டன.
காப்பி கலர் யூனிஃபார்ம் போட்ட தபால்காரரின் வருகைக்காகவும், அந்த சிவப்பு கலர் தபால் பெட்டிகளை எப்போ திறப்பார்கள் என்றும் ஆவலோடு காத்துக் கிடந்த காலமும் காலமாகி விட்டது.
கிழக்கிந்திய கம்பெனியின் ON COMPANY SERVICE என்ற பெயரில் குதிரைகளில் தபால்துறை செயல்பட்டபோது தபால் முத்திரைகள் ஒட்டப்படுவதில்லை. தபால் சேவகர்கள் பிரிட்டிஷாரின் தபால்களை குதிரைகளில் எடுத்துச்செல்ல குதிரையின் பின்னால் ஒரு காவலர் கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி கொக்கிரகுளம் வரை தடிக்கம்புடன் காவலுக்கு ஓடி வருவாராம்.
அந்தத் தபால்களில் ON COMPANY SERVICE என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும் அதை சுருக்கமாக OC தபால்கள் என்பார்கள். அதற்கு ஸ்டாம்புகள் ஒட்ட வேண்டியதில்லை. அதுவே நாளடைவில் OC என்றாகி OC என்றால் இலவசமென்று ஆகிவிட்டது.
இப்போதெல்லாம் இன்லண்டிலோ தபால் கார்டிலோ ஒரு தபால் போட்டால் அது அடுத்த தெருவில் பட்டுவாடா செய்வதற்கு கூட ரெண்டு மூணு நாள் ஆகிவிடுகிறது..
70 களில் சென்னையில் பீச் ரோட்டில் (ராஜாஜிசாலை) பிரிட்டிஸாரால் கட்டப்பட்ட அந்த பழைய சிவப்பு நிற முரட்டு கட்டிடத்தில்தான் ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் ஒரு மிகப்பெரிய ரெயில்வே நிலையம் போல இயங்கிய அந்த GPO இருந்தது.
அது இப்போதிருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளே நுழைந்து வெளியே வருவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. அத்தனை பெரியது. அவ்வளவு கூட்டமானது. மெயில் எனப்படும் ரெயில் வண்டிகளில் வந்து சேரும் ஆயிரக்கணக்கான தபால் பைகளை தள்ளுவண்டிகளுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து அங்கே குவிப்பார்கள்.
சாமான்ய மக்களின் தேவைகளையும் கனவுகளையும் உள்ளே போட்டு அரக்கு சீலிட்டு அடுக்கி தள்ளிக்கொண்டு போவார்கள் ஊழியர்கள். RMS எனும் ரயில்வே மெயில் சர்வீஸ் ஓன்றும் அப்போது தனியாக செயல்பட்டு வந்தது. ஒவ்வொரு ஊரிலும் தபால் நிலையங்களின் மூலம் சேகரிக்கப்படும் தபால்கள் ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்படும். RMS ஊழியர்கள் அவற்றை ஒரு ஸ்டேஷனிலிருந்து இன்னொரு ஸ்டேஷனுக்கு ரயில் போகுமுன்பே பிரித்து அந்தந்த ஊர்களில் இறக்கி போட்டு விட்டுப்போய்விடுவார்கள்.
இதற்கு சார்ட்டிங் என்று பெயர். அந்த சிவப்பு கட்டிடத்தில் அவர்களும் ஆயிரக்கணக்கில் பணி புரிந்தார்கள்.
அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல வந்து போகும் மக்களுக்கும் கூட அங்கிருந்த கேண்டீனில் நாலணாவுக்கு நெய் மணக்கும் பொங்கலும், நாலணாவுக்கு ரெண்டு இட்லியும் ஒரு வடையும் அளவிலா சட்னியும் சாம்பாரும் ஒரு ரூபாய்க்கு சாப்பாடும் கிடைக்கும். அது ஒரு தனி உலகம் அப்படி சாப்பிடும் வாய்ப்பு இனி வரும் எந்தத்தலைமுறை ஊழியர்களுக்கும் கிடைக்கப் போவதில்லை.
தபால் தந்தி ட்ரங்கால், மணியார்டர்களோடு ஒட்டி உறவாடி லெட்டர் எழுதி வாசித்துக் காட்டியது பொய்த் தந்தி கொடுக்கச் சொல்லி லீவு வாங்கியது கலர் கலராய் பொங்கல் தீபாவளி கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் அனுப்பியது வந்து சேரும் பொங்கல் தீபாவளி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளுக்கு காத்துக் கிடந்தது 30 பைசா ஸ்டாம்ப் ஒட்டி பிரிண்டட் மேட்டர் என்று எழுதி புக் போஸ்ட்டில் பத்திரிகைகளுக்கு படைப்புகள் அனுப்பியது எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனதுவோ?..