

தமிழன்னையின் மடியில் தவழ்ந்து,
தமிழமுதத்தை உலகுக்குத் தந்தவரே!
சொல்லுக்குள் சுவையைச் சேர்த்து,
சொக்கவைக்கும் கவிதை தந்தவரே!
கண்ணீரிலும் கவிதை கண்டீர்,
காதலிலும் காவியம் படைத்தீர்!
மனித வாழ்வின் மேடு பள்ளங்களை
மணிமொழிகளால் எடுத்துரைத்தீர்!
திரைப்பாடல் ஒவ்வொன்றிலும்
தித்திக்கும் தத்துவம் தந்தீர்!
சிரிக்கின்ற உதடுகளுக்குப் பின்னே
சிந்திக்கும் இதயத்தை வைத்தீர்!
காதலின் இனிமை பாடினீர்,
காலத்தின் மாற்றம் கூறினீர்!
வாழ்க்கை என்னும் பாடசாலையில்
வாழ்வதற்கான பாடம் தந்தீர்!
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை” என்ற
உண்மையின் ஆழம் உணர்த்தி,
உள்ளங்களில் ஒளியை ஏற்றினீர்!
அர்த்தமுள்ள இந்து மதத்தில்
ஆன்மிகத்தின் ஆழம் சொன்னீர்!
மனித மனத்தின் மர்மங்களை
மக்களின் மொழியில் விளக்கினீர்!
அரசியல் கண்டீர், ஆன்மிகம் கண்டீர்,
அனுபவம் தந்த பாடங்கள் கண்டீர்!
எத்தனை பாதைகள் கடந்தாலும்
எழுத்தின் வழியே உயர்ந்து நின்றீர்!
உடலால் இன்று நம்மிடையே இல்லை,
உம் கவிதைக்கு மரணமில்லை!
காலங்கள் பல கடந்து சென்றாலும்
கண்ணதாசன் புகழுக்கு அழிவில்லை!
அக்டோபர் பதினேழில் நினைக்கின்றோம்,
அன்புக் கவியரசே, உம்மைப் போற்றுகின்றோம்!
கற்பனைத் தேரில் கவிதை பயணிக்க
காலமும் உம் புகழைப் பாடிடுமே!!
சொல்லெனும் பூக்கள் தொடுத்த மாலையில்
சுவைமிகு தமிழும் மணம் வீசுமே!!
விண்மீன் எண்ணிக்கை மாறிடலாம்
விடியலின் வண்ணங்கள் மாறிடலாம்!
தமிழ் நெஞ்சங்களில் நீர் விதைத்த
தத்துவ விதைகள் என்றென்றும் வாழுமே!!
கவியரசே, உம் எழுத்தோவியம்
காலத்தின் கண்ணாடியாய்
நித்தம் நிலைத்திருக்கும்!!
உம் கவி வரிகள்
ஒவ்வொன்றும்
உயிர்களின் உள்ளத்தில்
விளக்கேற்றும்!!
தமிழ் உள்ளவரை உம் புகழ் வாழும், தலைமுறைகள் தோறும்
உம் கவிதை பேசும்!
கவியரசே! நீர் மறைந்தாலும்
கவிதையாய் என்றும் வாழ்வீர்!
தமிழ் என்னும் வானம் உள்ளவரை
தாரகையாய் ஒளிர்ந்திடுவீர்!