
இவ்வருட ஏப்ரல் மாதக் கடைசியில் சென்னையிலிருந்து டெல்லி சென்று, அங்கிருந்து மிலான் (இத்தாலி) சென்று, காரில் சூரிக்கை அடைந்தோம். டெல்லி டு மிலான் ப்ளைட்டின் ப்ளையிங் டைம் ஏறத்தாழ ஒன்பது மணி நேரம்.
ப்ளைட்டின் டிவிக்கள் இயங்கவில்லை. இங்கே அமுக்குங்கள்! அங்கே அமுக்குங்கள்! திரையின் எங்கு வேண்டுமானாலும் அமுக்குங்கள்! என்றார்கள். விரல்களுக்கு அன்று நல்ல பயிற்சி!விடை மட்டும் பூஜ்யந்தான்!
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குக் கிளம்பிய போயிங் 787, டெல்லியிலிருந்து கிளம்பி, அகமதாபாத் செல்கையிலும் டிவிக்கள் சரியாக இயங்கவில்லையென்று அகமதாபாத் வரை பயணித்த பயணி ஒருவர், விபத்துக்குப் பின் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் உலகெங்கிலும் போயிங் 787 விமானங்களைப் பல விமான நிறுவனங்களும் இயக்கி வருகின்றன. தற்போது அவ்வகை விமானங்கள் 1100 என்ற அளவில் தினந்தோறும் பறந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவை அதிக வசதிகளும், மிகவும் முன்னேற்றமான தொழில் நுட்பங்களும் கொண்டவை என்றும் கூறப்படுகிறது.
இப்பொழுதெல்லாம் விமானப் பயணங்களின் போது, வயதானவர்களையும், வீல் சேரிலேயே வலம் வருபவர்களையும்கூட அதிக அளவில் காண முடிகிறது. வயதானவர்களுக்குப் பயணங்கள் இனிமையாக அமைய வேண்டுமானால் நடைமுறைகள் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசின் செயல்பாடுகளும், ஏர் இந்தியாவின் நடவடிக்கைகளும் பயணியருக்குப் பயன் அளிப்பதற்குப் பதிலாக சிரமத்தையே அளிப்பதாக உள்ளன.
ஏற்கெனவே விமான நிலையங்களில் இயங்கும் உணவகங்களில் உணவின் விலை விமானம் பறக்கும் உயரத்தில்! எத்தனை முறை அது குறித்து எவ்வளவு பேர் எழுதியும் யாரும் அதைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அது ஒரு புறமிருக்க, பண்டிகை மற்றும் சிறப்பு நாட்கள் விமானக் கட்டணத்தை, ஆம்னி பஸ்கள் போல, அந்தந்த நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு உயர்த்திக் கொள்கின்றன.
போன வருடம் வரை சென்னை விமான நிலையத்தில் விமானத்தைப் பிடிக்க வருவோரும், இறங்கிச் செல்வோரும் வாசலிலேயே சொந்தக் கார்களிலோ, வாடகைக் கார்களிலோ பயணம் செய்து வந்தது எளிதாக இருந்தது. இப்பொழுதோ விமானத்திலிருந்து இறங்கி, லக்கேஜ்களுடன் எதிரேயுள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு வந்தே டாக்சி பிடிக்க வேண்டியிருக்கிறது. இரண்டே லிப்ட்கள் செயல்படுவதால் பீக் நேரங்களில் பயணியரின் பாடு மிகவும் சிரமம்! டாக்சிக் காரர்கள் பெரும்பாலானோர் நேர்மையாகச் செயல்படுவதில்லை.
அடுத்தபடியாக இமிக்ரேஷன்! விமான நிலையத் தமிழக்கத்தில் குடியேற்றம்! நாம் நாட்டை விட்டுச் செல்லும் போதும், திரும்பி உள்ளே நுழையும் போதும் நமது பாஸ்போர்ட்டில் விபரங்களைப் பதிவார்கள். இது முன்பு, சென்னைக்கு வருபவர்களுக்குச் சென்னையிலேயே பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. தற்பொழுதோ டெல்லி வழி சென்னைக்கு வந்தால், டெல்லியிலேயே நாம் இமிக்ரேஷனை முடிக்க வேண்டியுள்ளது. இதனால் பல சிரமங்கள்!
முன்பெல்லாம் நமது லக்கேஜுகளை நாம் இறுதியாக வரும் சென்னைக்கு அனுப்பி விடுவார்கள். நடுவில் நாம் விமானங்கள் மாறினால் போதும். இப்பொழுதோ, நாம் லக்கேஜுகளை டெல்லியிலேயே எடுத்து, மீண்டும் சென்னை விமானத்திற்கான நடைமுறைகளை முடித்து லக்கேஜ்களை நமது பொறுப்பில் மாற்ற வேண்டியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் சூரிக்கிலிருந்து டெல்லி வந்தேன். ஏர் இந்தியாவில்தான்! அதுவே லேட்! எனவே, நான் சென்னைக்கு புக் செய்திருந்த விமானத்தைப் பிடிக்க முடியவில்லை! ஒரு மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு அடுத்த விமானத்திற்கான டிக்கட் தந்தார்கள். அந்த விமானமும் தாமதமே! இருப்பினும் மிக விரைவாகவே, சுமார் இரண்டே முக்கால் மணி நேரத்திலேயே சென்னையை நெருங்கி விட்டோம். லேண்டிங் ஆகப் போவதாக பைலட் அறிவித்தார். மாலை வெயில் கடல் காற்று வாங்க, திருவொற்றியூர் வான் வழியாகப் பீச்சிக்கு மேலே பறந்து, கிண்டி வழியாக, கத்திப்பாராவைக் கடந்து விமானம் கீழிறங்க ஆரம்பித்தது.
நகரின் அழகை மாலை வெயிலில் ரசித்தபடி வந்தோம். பெர்பக்ட் லேண்டிங் என்று சொல்லத்தக்க வகையில், மிக ஸ்மூத்தாக இறங்கிய விமானத்தின் பின் சக்கரங்கள் தரையில் பட, விநாடியில் மீண்டும் விமானம் மேல் நோக்கிப் பறக்க ஆரம்பித்து விட்டது! அனைவருக்கும் என்னவோ ஏதோ என்ற பயம்! மறுபடியும் நல்ல உயரத்திற்குப் போய் விட்டது. பின்னர் பைலட் அறிவித்தார்.... "ஏர் ட்ராபிக் காரணமாக மேலே வந்து விட்டோம். இது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வே! அடுத்த ஐந்தாறு நிமிடங்களில் லேண்டிங் ஆகி விடுவோம்!"
மீண்டும் கடல், கடற்கரை, கத்திப்பாரா! அப்புறந்தான் லேண்டிங்!
நான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும், நமது நாட்டிலும் பல முறை விமானப் பயணம் மேற்கொண்டுள்ளேன். எப்பொழுதும் இது போல நடந்ததில்லை. இதுவே முதல்முறை! பைலட் சொன்னதைப்போல இது சாதாரண நிகழ்வல்ல என்றும் அசாதாரண நிகழ்வே என்றும் சிலர் கூறினார்கள்.
எவ்வளவோ விஞ்ஞான முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஓரிடத்திலிருந்து விமானம் புறப்பட்டதிலிருந்து ட்ராக் செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் கடைசி வினாடி நிகழ்வுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வதென்று தெரியவில்லை!விபரமறிந்தவர்கள் விளக்கினால் நலம்.
விமான நிறுவனங்கள், குறிப்பாக ‘ஏர் இந்தியா’ தங்கள் விமானப் பாதுகாப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமென்றே தோன்றுகிறது! அரசும் விமானப் பயணத்தை இனிதாக்கத் தக்க நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.