சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவரின் நகைச்சுவை நடிப்பும் அவர் வசனங்களை உச்சரிக்கும் விதமும், உடல் மொழியும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.
மதன் பாப் என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்பட்ட எஸ். கிருஷ்ணமூர்த்தி 1953, அக்டோபர் 19ஆம் தேதி பிறந்தவர். ஒரு இசைக் கலைஞராக கலைப் பயணத்தை தொடங்கிய இவர், சிறுவயதிலேயே கிடார் வாசிக்க கற்றுக் கொண்டவர். பின்பு தனக்கென ஒரு இசைக்குழுவை உருவாக்கியவர். நாடகங்களுக்கு பின்னணி இசை அமைத்து பின்பு திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
கே.பாலச்சந்தரின் அறிமுகத்தால் நடிப்பில் இறங்கினார். 1984 ஆம் ஆண்டு வெளியான 'நீங்கள் கேட்டவை' படத்தில் கீபோர்டு ஆர்டிஸ்ட்டாக சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், 200 படங்கள் வரை நடித்துள்ளார். இவரது வெளிப்படையான முக பாவனைகள், தனித்துவமான சிரிப்பு ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டவர். அவரது நகைச்சுவை வசனங்கள், வேடிக்கையான முக பாவனைகள், மற்றும் உடல்மொழி மூலம் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர். தமிழ் தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான 'அசத்தப்போவது யாரு?'ல் நடுவராக பணியாற்றியவர்.
இவரின் டிரேட் மார்க்கே அவருடைய சிரிப்புதான். இவர் சிரிக்க ஆரம்பித்தால் சில வினாடிகள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார். விளம்பரங்கள், டிவி சீரியல்கள், சினிமாக்கள் என பலவற்றிலும் சிறப்பாக கால் பதித்து வெற்றி கண்டவர்.
மதன் பாப்பிற்கு சுசிலா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். தன்னுடைய 71 வயதில் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னையில் ஆகஸ்ட் 2 மாலையில் இந்த உலகத்தை விட்டு மறைந்தார்.
இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட இவரின் மறைவு அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.