

கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது?
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் வாழ்ந்த நுண்ணியத் தாவரங்கள், விலங்குகளின் (microscopic plants and animals) எச்சங்களிலிருந்து கச்சா எண்ணெய் உருவாகிறது. இந்த உயிரினங்கள் இறந்து கடலடியிலே இருக்கும்போது மணல் அடுக்குகள் (layers of sediment) அதன்மீது படிப்படியாக படிந்து தங்குகிறது.
இதனால், அவை அபரிமிதமான வெப்பம், அழுத்தத்திற்கு ஆளாகி; புவியியலால் காலப்போக்கில் இவை ஹைட்ரோகார்பன்களாக (hydrocarbons) மாறும். இவைதான் இப்போது நிலத்தடியில் கச்சா எண்ணெய் வளங்களாக எடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
வளைகுடா நாடுகளில் மட்டும் ஏன் ஏராளமான எண்ணெய் உள்ளது?
வளைகுடா பகுதி (Gulf Countries) குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் போன்ற நாடுகள் எண்ணெய் உருவாவதற்கு ஏற்ற புவியியல் நிலைமைகளுடன், பல கோடி வருடம் முன் செழிப்பாக இருந்த கடற்பரப்புகளின் (ancient seabeds) மேல் அமைந்துள்ளன.
அதோடு, அப்போது நிகழ்ந்த டெக்டோனிக் நகர்வுகளும் (tectonic plates) இந்த கச்சா எண்ணெய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அதனால் இன்று உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் 48% வளைகுடா நாடுகளே உற்பத்தி செய்கின்றன.
எரிபொருட்கள் எப்படி பிரித்தெடுக்கப்படுகின்றன?:
கச்சா எண்ணெயிலிருந்து வடிகட்டுதல் (fractional distillation) மூலம் 8-10 வரை வகையான எரிபொருட்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. எண்ணெய் படிப்படியாக வெப்பப்படுத்தப்பட்டு, சில குறிப்பான கொதிநிலை (boiling points) அடைந்த பின்பு எரிபொருட்கள் பிரிக்கப்படுகின்றன.
LPG (Liquefied Petroleum Gas): மிகக் குறைந்த (very low) வெப்பநிலையில் பிரிக்கப்பட்டு, வடிகட்டுதலின் மேல் பகுதியில் சேகரிக்கப்படுகிறது.
பெட்ரோல் (petrol): நடுத்தர (mid range) வெப்பநிலையில் பிரிக்கப்படுகிறது. அதிக தேவை மற்றும் சிக்கலான சுத்திகரிப்பு (refining complexity) தன்மை காரணமாக பெட்ரோல் பொதுவாக விலை அதிகமாக இருக்கும்.
டீசல்: அதிக (higher) வெப்பநிலையில் இது பிரிக்கப்படுகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் திறன்கள்:
இந்தியா இறக்குமதியைத்தான் (Imports) பெரிதும் சார்ந்துள்ளது. நாட்டின் கச்சா எண்ணெய் தேவைகளில் 85%க்கும் அதிகமாக வெளியில் இருந்துதான் வாங்கப்படுகிறது. அதில் முக்கிய இறக்குமதி மையங்களாக மும்பை (ஜவஹர்லால் நேரு துறைமுகம்), விசாகப்பட்டினம் மற்றும் பாரதீப் (Paradip) ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் எடுக்கிறார்களா?முதன்மையாக அசாம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்தும், அரேபிய கடலில் மும்பை ஹை (Mumbai High) போன்ற கடல் பரப்பிலும் இந்தியா கச்சா எண்ணெயை நிலத்தடியிலிருந்து உற்பத்தி செய்கிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே இதனால் பூர்த்தி செய்ய முடியும். அதனால்தான் இந்தியா இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது.
உலக அரங்கில் சவுதி அராம்கோ (Aramco) மிகப்பெரிய கச்சா எண்ணெய் கையாளுநராக உள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1.6 பில்லியன்(160 கோடி) லிட்டர் கச்சா எண்ணெய்யை பூமியின் அடியிலிருந்து உற்பத்தி செய்கிறார்கள்.
எவ்வளவு காலம் இந்த கச்சா எண்ணெய் வளங்கள் பூமியில் கிடைக்கலாம்?
சர்வதேச (International) எரிசக்தி அமைப்பின் கூற்றுப்படி, உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சி குறைந்து வருகிறதாம்; அதேபோல் இதன் இருப்பும்(Source) சில அளவில்தான் உள்ளதாம். ஆக தற்போதைய நிலவரப்படி இந்த இருப்புக்கள் 40-50 ஆண்டுகள் வரை நீடிக்குமாம். இருப்பினும் இது உலகின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாற்று எரிசக்தி வழிகள் மற்றும் புவிசார் அரசியல் (geopolitical factors) பொறுத்து வேறுபடலாம்.