

உலகளவில் ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து, கரீபீனியா, மொரோக்கா போன்ற நாடுகளில் கஞ்சாவின் பயன்பாடு அதிகமாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் விளைச்சல், ஏற்றுமதி, விநியோகம் என பல கட்டங்களாக நடக்கும் போதைப் பொருட்களின் ஆண்டு வர்த்தக மதிப்பு 36 லட்சம் கோடி ரூபாய் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரம், இராஜஸ்தான், கோவா, குஜராத், கேரளம், ஆந்திரம் போன்ற பிற மாநிலங்களிளிலிருந்து வரும் கஞ்சாவை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க பெரிய அமைப்பு ஒன்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆந்திரத்தின் வடகிழக்குப் பகுதி மற்றும் ஒடிசா மாநில எல்லையில் அமைந்துள்ள பல்லாயிரக்கனக்கான ஊர்களில் வியாபாரிகளே பணம் கொடுத்து விவசாயிகளை கஞ்சாவை பயிர் செய்ய ஊக்குவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் 10 நகரங்களில் புகை, மது, போதைப் பொருள் ஆகியவற்றை பயன்படுத்தும் பள்ளி மாணவர்களிடையே தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வு ஒன்றினை சமீபத்தில் நடத்தியது.
கடந்த 2018 மே முதல் 2019 ஜூன் வரை பெங்களூரு, சண்டிகர், தில்லி, திப்ருகர், ஹைதராபாத், இம்பாலா, ஜம்மு, லக்னோ, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் நமக்கு அதிர்ச்சியைத் தருகின்றன.
இந்த நகரங்களின் பள்ளிகளில் 8, 9, 11 மற்றும்12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 5920 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், புகை, மது, போதைப் பொருள் என ஏதோ ஒன்றை பயன்படுத்தத் தொடங்கும் சிறார்களின் சராசரி வயது 12.9 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புகை, மது, போதைப்பொருள் உபயோகித்தல் என ஏதோ ஒரு பழக்கத்தில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 15.1% மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகையிலை பொருள்கள் தங்களுக்கு எளிதில் கிடைப்பதாக 46.3% மாணவர்களும், மதுவை எளிதில் வாங்க முடிவதாக 36.5% மாணவர்களும், கஞ்சாச் செடி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பாங் எளிதில் கிடைப்பதாக 21.9% மாணவர்களும், கஞ்சாவை எளிதில் வாங்க முடிவதாக 16.1% மாணவர்களும், ஹெராயின் போதைப் பொருள் எளிதில் கிடைப்பதாக 10% மாணவர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், 8 ஆம் வகுப்பு மாணவர்களை விட 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் இவற்றின் பயன்பாடு இரண்டு மடங்காக இருப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
தங்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் இந்த தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பதாக, சுமார் 40% மாணவர்களும், கஞ்சா பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாக 8. 2% மாணவர்களும் கூறியுள்ளனர். போதைப்பொருள் பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்பதை ஆய்வில் பங்கேற்ற 95% மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதை இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குடும்ப முறையில் குழந்தைகள் மீது சாத்தியமில்லாமல் போன கண்காணிப்பும், கூடா நட்புகளுமே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது.
சிறுவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் அளவுக்கு கஞ்சா புழக்கத்தில் உள்ளது பெருத்த கவலயைத் தருகிறது. இந்திய போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (1985), போதைப்பொருள்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல், கடத்துதல், பதுக்குதல் போன்றவற்றை குற்றச் செயல்களாக கருதுகிறது. இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 10 முதல் 30 ஆண்டு வரை சிறைத்தண்டணையும், அபராதமும் விதிக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.
எதிர்கால இந்தியா வளமானதாக மாற இந்த இளைய தலைமுறைதான் மனித வளங்களாக மாற வேண்டும். ஆனால், இவர்கள் குற்றவாளியாக மாறும்பொழுது, நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறையலாம்.
தொடர் போதைப் பொருட்களின் பயன்பாட்டால் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டமின்மை, நினைவாற்றல் குறைவு, குற்றச்செயல்களில் ஈடுபடுதல், பெறோர்களுக்கு கீழ்படியாமை, பசியின்மை, உடல் எடை குறைவு, தலை வலி, பார்வைக் குறைவு, முதுகு வலி, மூட்டு வலி, சுவாசக் குறைபாடு, மன அழுத்தம், நரம்பு மண்டலத்தில் பாதிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
இளைஞர்கள் பலர் போதைப்பொருளை வாங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லாத பொழுது திருடுவதில் தொடங்கி தொடர்ந்து பல குற்ற சம்பவங்களில் கூட தொடர்ந்து ஈடுபடுகின்றனர். காவல்துறையினரிடம் இவர்கள் சிக்கினாலும் 18 வயதை நிறைவு செய்யாத இவர்களை சட்டம் அனுப்புவது சீர்த்திருத்த பள்ளிகளுக்கு மட்டுமே. இதனால், இவர்கள் தான் செய்யும் குற்றத்தின் தீவிரத்தை உணர்வதில்லை.
விளையாட்டாகத் தொடங்கும் இப்பழக்கத்தை விட்டு அவர்கள் வெளியே வருவதற்கு ஒரு கட்டத்தில் விரும்பினாலும் அவர்களால் முடிவதில்லை. போதையில் இருப்பவர்களிடையே சிறப்பாக செயலாற்றும் திறனும், சிந்திக்கும் திறனும் இருப்பதில்லை.
தற்போதைய சமுதாயத்தில் மிக எளிதாக கிடைக்கும் மது, சிகரெட், பிற போதை பொருள்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் பயன்படுத்துவதாலேயே, அவர்களுடைய குழந்தைகளும் இவற்றை பயன்படுத்துவதாக இது சார்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் கூறுகின்றன.
நல்ல பெற்றோர்களின் குழந்தைகளே நல்ல மாணவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் திகழ முடியும். குழந்தைகள் தங்கள் குடும்பங்களில் அன்றாடம் பார்ப்பதையும், கேட்பதையும் தங்கள் வாழ்க்கையில் பழக்கமாக கொள்ளுகிறார்கள். அவர்களின் பெற்றோரே அவர்களின் வாழ்வின் முன்மாதிரிகள் ஆவர்.
எனவே, பெற்றோர்கள் நல்லொழுக்கத்துடன் குடும்பத்திலும் பொதுவெளியிலும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. ஒழுக்க கல்வி என்பது பள்ளிப் பாடத்தில் இல்லாமல் போய்விட்ட நிலையில் இளைஞர்களை முறையாக கண்காணித்து வளர்க்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிகம் உள்ளது. இதை உணர்ந்து அவர்கள் செயல்படுவது நல்லது.
மொத்தத்தில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாக மாற வேண்டும்.