"பையனை தபால்ல அனுப்பி வை!" என்னாது? பையனைத் தபால்ல அனுப்பறதா? எங்கே, எப்படி?

Postal service to mail their child
Postal service to mail their child
Published on

‘‘பையனை தபால்ல அனுப்பி வை!‘‘

என்னாது, பையனைத் தபால்ல அனுப்பறதா? எங்கே, எப்படி….!

பொதுவாகவே தபாலில் (அஞ்சல் துறையாகட்டும் அல்லது தனியார் அஞ்சல் (கூரியர்) சேவையாகட்டும்) இன்ன பொருட்கள்தான் அனுப்பலாம், இன்னது கூடாது என்று விதிமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக கரன்ஸி, வெடிப் பொருட்கள், நகைகள், போதைப் பொருட்கள் போன்றவற்றைச் சொல்லலாம். இது அரசு அஞ்சல் துறை, கூரியர் மட்டுமல்லாமல் கண்டெய்னர் வரைக்கும் பொருந்தும்.

ஆனால் ஒரு காலத்தில் அமெரிக்காவில் குழந்தைகளை தபாலில் அனுப்பி வந்திருக்கிறார்கள் என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா?

ஆமாம், ஆனால் குழந்தைகளைப் போடக்கூடிய அளவுக்கு சாலையில் பெரிய சைஸ் தபால் பெட்டி இல்லை (!) என்பதால், அஞ்சல் அலுவலகத்திலேயே கொண்டுவிட்டு, உரிய தபால் தலையை வாங்கி அந்தக் குழந்தையின் சட்டையிலேயே ஒட்டி அனுப்பியிருக்கிறார்கள்! இந்தக் குழந்தைகளை அந்த அஞ்சல் அலுவலகத்திலிருந்து, அந்தக் குழந்தை போய்ச் சேருமிடத்தில் உள்ள இன்னொரு அலுவலகத்துக்கு ஒரு தபால்காரர் எடுத்துச் செல்வார். அங்கே குறிப்பிட்ட முகவரியில் அந்தக் குழந்தை சேர்ப்பிக்கப்படும்!

அட, இதென்ன கூத்து!

இதைவிட, ரயிலில் பயணிக்கும் பெற்றோர் தம் குழந்தைகளை அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டிருக்கும் தபால் கம்பார்ட்மென்டில் (ரயில்வே மெயில் சர்விஸ்) கொண்டு விட்டு விடுவார்கள். இங்கே பிற அஞ்சல் கடிதங்கள், பார்சல்களுடன், சேர்த்து அந்தக் குழந்தையையும் பார்த்துக் கொள்வார்கள், அஞ்சலக ஊழியர்கள். குழந்தைகள் என்பதால் அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு ஆகியவற்றையும் அளிப்பார்கள். என்ன, அந்தக் குழந்தைகள் பார்சல்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும், அவ்வளவுதான்.

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 8 - அமெரிக்க தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது! அடுத்து என்ன நடக்கும்?
Postal service to mail their child

பெற்றோரின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்ன? அவ்வாறு ஒரு குழந்தையை அனுப்ப 15 சென்ட் ஸ்டாம்ப் வாங்கி அதன் உடைமீது ஒட்டிவிட்டால் போதும், ஆனால் அதுவே குழந்தைக்குப் பயண டிக்கட் எடுக்க வேண்டுமானால், அதற்குப் பல மடங்கு செலவழிக்க வேண்டியிருக்கும்! அதாவது ஃப்ளோரிடா முதல் வர்ஜீனியா வரையிலான 700 மைல் தூர ரயில் பயணத்துக்கு அந்தக் குழந்தைக்கான பயணச் செலவு வெறும் 15 சென்ட்தான்! இதுநடந்தது 1915ம் ஆண்டுக்கு முன்னால்!

ஆனால் இந்த தமாஷ் 1913ம் ஆண்டிலேயே அரங்கேறிவிட்டது. ஓஹியோவைச் சேர்ந்த தம்பதி, தம் குழந்தையை ஒரு மைல் தொலைவில் இருக்கும் அதன் பாட்டி வீட்டில் கொண்டு சேர்க்க அஞ்சல் அலுவலகத்தில் குழந்தையைக் கொண்டு விட்டு 15 சென்ட் ஸ்டாம்பும் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்!

அப்போது அஞ்சல் சேவை தொடங்கப்பட்டதே தவிர, அஞ்சலில் எந்தப் பொருட்களை அனுப்பலாம் என்ற விதிமுறை எதுவுமே இல்லை. நான்கு பவுண்டு எடைக்கு மேல் உள்ள பொருட்களை பார்சலில் அனுப்பலாம் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அதனால் குறும்பர்கள் சிலர், முட்டைகள், செங்கற்கள், பாம்புகள் என்றெல்லாமும் அனுப்பி, அஞ்சலகத்தைத் திக்குமுக்காட வைத்து, குரூரமாக சந்தோஷப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக 1913 முதல் 1915வரை, ஏழு குழந்தைகள் இவ்வாறு பார்சலில் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வசதியை அளக்கர இரண்டு கோடுகள்! (பொருளாதாரச் சமமின்மைக் கதை)
Postal service to mail their child

ஆனால் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட மாவுத் ஸ்மித் என்ற குழந்தைதான் இவ்வாறு அஞ்சல் பயணம் மேற்கொண்ட கடைசி குழந்தை. அதற்குப் பிறகு தடாலடியாக பல நிபந்தனைகளை விதித்து அஞ்சல் சேவையை ஒழுங்கு படுத்தினார்கள்.

‘அஞ்சல் சேவை, மக்களுக்கான சேவை‘ என்ற கோட்பாட்டை மக்கள் இவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால், அதற்கு மறுப்பு சொல்லாமல், சேவை செய்தார்களே, அந்த அஞ்சலக கருணை உள்ளங்களைப் பாரட்டிச் சொல்லத்தானே வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com