சிறுகதை: வசதியை அளக்கர இரண்டு கோடுகள்! (பொருளாதாரச் சமமின்மைக் கதை)

Tamil Short story vasathiyai alakkara irandu kodugal
Family eat food in five star hotel
Published on

வெய்ட்டர் கண்ணன் டேபிள் 14 லில் அமர்ந்திருந்த குடும்பத்தைச் சற்று தொலைவிலிருந்து அவர்கள் கண்ணில் படாமல் கூர்ந்து பார்த்தான். 

அப்பா, அம்மா, ஒரு டீன் ஏஜ் பெண், ஒரு பையன். முகங்கள் உடைகள் இரண்டிலும் வசதியின் பிரதிபலிப்பு. 

“நோ டாட், இந்த சம்மர் வக்கேஷனுக்கு யூரோப் வேண்டாம். ஆஸ்ட்ரேலியா தான்” என்றாள் பெண். 

“கென்யா டாட்” இது பையன் “நா ஸஃபாரி போகணும்”

“ஓகே. நானும் விவேக்கும் கென்யா. அம்மாவும் ஷாலுவும் ஆஸ்ட்ரேலியா” தந்தை தீர்வு கொடுத்தார். 

“கடவுள் இவர்களையும் படைக்கிறார். என்னையும் படைக்கிறார்” கண்ணன் நினைத்துக்கொண்டான். இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுடைய ரெஸ்டாரண்ட்டில் அந்தக் குடும்பம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது குறைந்தது ரூ 20,000 – ரூ 30,000 செலவழித்திருப்பார்கள் – அவனுடைய சம்பளத்தில் பாதி!!

கண்ணன் அவன் குடும்பத்துடன் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டது அபூர்வம். இத்தனைக்கும் அவன் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. ஆனால் அப்பா ஒரு எலெக்டரிஷியன் – செய்த வேலைக்குக் கண்டபடி காசு கேட்கத் தெரியாத அப்பாவி. அதனால் அவன் செல்லமாக வளரவில்லை – செல்வம் இருத்தால்தானே செல்லம் இருப்பதற்கு?

கஷ்டப்பட்டு பி.காம் முடித்தான். கண்ணன் பார்ப்பதற்கு வெற்றி பெறாத ஹீரோ போல் இருப்பான். மேலும் ஆங்கிலத்தில் தேர்ச்சி இருந்ததால் இந்த உயர்தர ரெஸ்டாரண்ட்டில் சேர முடிந்தது. சேர்ந்து 3 வருடமாகிறது. இப்போதுதான் அவன் குடும்பம் 3 வேளை சாப்பாட்டை முழுமையாகப் பார்க்கிறார்கள்.  

“ஸுப், ஸ்டார்ட்டர்ஸ் ரெடி” வாட்ஸ்ஆப் மெஸேஜ் கிச்சனிலிருந்து வந்ததும் அவைகளை அங்கிருந்து கொண்டு வந்து மிக பவ்யமாக டேபிள் 14 லில் வைத்துவிட்டு திரும்பத் தன் இடத்துக்கு வந்தவனை “ஹாய் கண்ணா” என்று வரவேற்றாள் நித்யா. அவளும் அங்கே வெய்ட்ரஸ், 2 வருடங்களாக. இருவரும் சில மாதங்களாகக் காதலித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன நித்யா, கன்வெண்ஷன் ஹால்ல டியூட்டியா?”

“ஆமாம். பர்த்டே ப்ரஞ்ச். மொத்தம் 30 பேர். தலைக்கு பில் ரூ 5,000” அவளும் ஒரு மகா ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவள். 

அவர்களை ஒன்று சேர்த்தது அவர்களுடைய பொருளாதார நிலமையும் அதனால் வாழ்க்கையில் அவர்கள் கண்டிருந்த அவஸ்த்தைகளும் தான். கூடவே இந்த வட்டத்தை விட்டு எப்படியாவது வெளியே வர வேண்டும் என்ற வெறி இருவருக்குள்ளும். 

“என்ன நித்யா யோசிக்கர?”

“கண்ணா, ஒண்ணு கேக்கறேன், நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உடனே கொழந்த  பெத்துக்கரோம்னு வெச்சுப்போம்”

“இண்டரெஸ்ட்டிங், தொடருங்கள் மிஸ்ஸர்ஸ் கண்ணன்” 

“அந்தக் கொழந்தய ஒரு நல்ல ஸ்கூல்ல படிக்க வெக்கணும் இல்லியா?”

“ஐ நோ வேர் யூ ஆர் கமிங் ஃபரம்” அவர்களுக்குள் ஒரு தொழில் ரீதியான ஒப்பந்தம் – முடிந்த வரையில் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வது. “படிக்க வெக்க ரொம்ப செலவாகும், அதானே?”

“இல்ல”

“தென்?”

“நல்லா ஸ்கூல் போனா மத்த கொழந்தெங்க கார்ல வருவாங்க. நம்ம பிள்ள?”

“டோன்ட் வொர்ரி – ஸ்கூல் பஸ்ல போகர ஸ்கூலா பாக்கலாம்”  

அவள் விடவில்லை “சரி, ஒரே ஸ்கூல் பஸ்ல எல்லாப் பாசங்களும் போவாங்கன்னு வெச்சுப்போம். சில பசங்க ஐஃபோன் வெச்சுருப்பாங்க, சில பேர் அவங்க ஸம்மர் வெக்கேஷனுக்கு அப்ராட் போனோம்னு பேசிப்பான்க. அவங்க லைஃப்ஸ்டைலப் பார்த்து நம்ம கொழந்த “சே, நமக்கு இதெல்லாம் கெடைக்க மாட்டேங்குதே” ன்னு வருத்தப்படாதா?”

நெகிழ்வுடன் தொடர்ந்தாள் “நம்ம ரெண்டு பேரும் அந்த மாதிரி எத்தனை தடவ ஃபீல் பண்ணிருப்போம்?”

அவன் மௌனமாகத் தலையசைத்தான். நினவு தெரிந்ததிலிருந்து அவன் தன் “வசதி குறைவு” தந்த துக்கங்களுடனும்  அவமானங்களுடன் இடைவிடாத போராட்டம் நடத்தியிருக்கிறான். தனக்கு  மட்டும் ஏன் 'லைட்' அடிக்கும் ஷூ கிடைக்கவில்லை என்ற கேள்வி நான்கு வயதில் வந்தபோதும் தனக்கு மட்டும் ஏன் 'ட்ராக்டர்' பொம்மை கிடைக்கவில்லை என்ற கேள்வி ஐந்து வயதில் வந்தபோதும், அம்மாவிடம் வந்த பதில் நாலைந்து அடிகள்தான் - ஜூனியர் கண்ணனுக்கு அப்போது புரிந்திராதது அடி கொடுத்த அம்மா ஏன் அழுகிறாள் என்பது. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் என்பதை அவன் வளர வளரப் புரிந்துகொண்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - ரமணனா இப்படி!
Tamil Short story vasathiyai alakkara irandu kodugal

“கண்ணா!”

அவன் புன்சிரிப்புடன் அவளைப் பார்த்து “யூ ஆர் கரெக்ட் நித்யா. இப்போ கூட வசதி கொறைவைப் பத்திதான் பேசிட்டிருந்தோம்”  

அவள் பெருமூச்சு விட்டாள். “இட் ஹர்ட்ஸ்.”

“இதுக்கு ஒரு சல்யூஷனும் கெடயாது. அனேகமா நம்ம கொழந்தையோட அடுத்த தலைமுறை பணக்காரக் கொழந்தையா இருக்க வாய்ப்பு உண்டு – அதுவும் நம்ம கொழந்தை எல்லாக் கஷ்டத்தையும் மீறி நல்லாப் படிச்சு ஒசத்தியா வந்தா”

“ஒரு வழி இருக்கு கண்ணா – சப்போஸ் நம்ம ஒரு 10-12 வருஷம் கழிச்சு புள்ளை பெத்துக்கிட்டோம்ன? அப்போ நம்ம கைல காசும் சேர்ந்தகுடும்.”

“அதாவது நமக்கு 36-38 வயசுல பெத்துக்கலாம்னு சொல்ற... நாட் பேட்!”

 “அந்த வயசுல பெத்துக்கறது கொஞ்சம் ரிஸ்க்தான், ஆனா நாட் இம்ப்பாஸிபிள்”

“ஓகே, டன்” மீண்டும் வாட்ஸ்ஆப் அழைப்பு. டேபிள் 14 இல் இருந்து. 

விரைந்தான். 

“மெயின் கோர்ஸ் ஆர்டர் பண்ணலாமா?”  டேபிள் அப்பா கேட்டார். 

“ஷூவர் சார்”

ஆர்டரை எடுத்துக்கொண்டு கிச்சன் செல்லும் வழியில் நித்யாவைப் பார்த்து “கொஞ்சம் டேபிள் 14ஐப் பாத்துக்க, ஜஸ்ட் இந் கேஸ் தே நீட் ஸம்திங்.”

நித்யா டேபிள் பக்கம் சென்று புன்சிரிப்புடன் “ஏதாவது வேணும்ன சொல்லுங்க” என்று அவர்களைக் கேட்டு, வேண்டாம் என்ற பதிலையும் பெற்று நகர்ந்தாள். 

“டாட், எனக்கு பி.எம்.டபிள்யூ 5 மாடல் கார் வேணும்” டீன் ஏஜ் பெண் சொன்னது நித்யா காதில் விழுந்தது. அட, இண்டரெஸ்ட்டிங்கா இருக்கும் போலிருக்கே என்று காதுகளைக் கூர்மைப் படுத்தினாள். 

“ரியா, இது டூ மச். 60 லாக்ஸ் ஆகும். வேணும்னா ஒரு சின்ன ஈ.வி.வாங்கித் தரேன்”

“டாட், என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் மூணு பேர் கிட்ட பி.எம்.டபிள்யூ இல்ல மெர்சிடிஸ் இருக்கு.”

“ஸோ”

“அவங்க முன்னாடி நா இன்ஃபீரியரா ஃபீல் பண்றேன்”

மெயின் கோர்ஸை கண்ணன் கொண்டு வந்ததால் டேபிள் 14 மௌனமானது.

நித்யாவும் அவனுடன் சேர்ந்துகொண்டு பரிமாறினாள். பின் இருவரும் “என்ஜாய் யுவர் மீல்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். 

“கண்ணா, நம்ம டெசிஷனை மாத்திக்கலாம். புள்ளை பெத்துக்கரதைத் தள்ளி வெக்க வேண்டாம்”

“வாவ், என்ன ஆச்சு?” அவன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். "திடீர்னு ஒனக்குப் பணக்கார சித்தப்பா யாராவது கெடச்சுட்டாரா?” 

இதையும் படியுங்கள்:
சிறுகதை - பொய்க் கண்ணாடி!
Tamil Short story vasathiyai alakkara irandu kodugal

“ஒன் சென்ஸ் ஆஃப் ஹ்யூமரை வளர்த்துக் கொள். தாங்க முடியல” என்று சொல்லிவிட்டு, “கண்ணா, யாரு எவ்ளோ சம்பாதிச்சாலும் அவரை விடக் கூட சம்பாதிக்கரவர் இருப்பார், கரெக்டா?”

“ஸோ?”

“அதுனால யாரோட கொழந்தையும் 100% சந்தோஷமா இருக்க முடியாது” 

“எப்டி சொல்ற?”

“எல்லாரும் 'ரெண்டு கோடு' கான்செப்ட்டுக்குள்ளதான் இருக்காங்க – இந்த ரெண்டு கோடும் வசதியை அளக்கர கோடுங்க. ஃபார் எக்ஸாம்பிள் நான் என் கஸினப் பாக்கறேன்னு வெச்சுக்குவோம். என் கோடு அவ கோட விட சின்னக் கோடா இருந்தா நா வருத்தப்படுவேன்; என் கோடு பெரிய கோடா இருந்தா அவ வருத்தப்படுவா.”

அவன் புரிந்து கொண்டான். “ஆனால் திடீர்னு எப்படி இதை நீ தெரிஞ்சுக்கிட்ட?” 

“டேபிள் 14 எனக்கு போதி மரம்” என்று அவள் லேசாக சிரித்தபடி சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com