
மனித வாழ்வை பண்படுத்துவதில் இசை, ஓவியம், நடனம், நாடகம் போன்ற நுண்கலைகள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் சென்னை நாடக சபாக்களில் நடத்தப்படும் நாடகங்கள் மக்களுக்கு பல நல்ல சமூக கருத்துக்களையும், ஆன்மீக கருத்துகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நாடகக் கலைஞர் கே.ஆர்.எஸ்.குமார் தமிழகத்தின் பிரபல நாடகக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார். சென்னை குரோம்பேட்டை கல்சுரல் அகடெமி சார்பில் 12.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்ற, ’அவதாரப் புருஷர் ஸ்ரீ இராகவேந்திரர்’ என்னும் நாடகத்தில் ஸ்ரீ இராகவேந்திரராக கே.ஆர்.எஸ். குமார் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த நாடகத்தில் 40 தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட, இவருடன் 27 கதாபாத்திர கலைஞர்ளும் ஈடுபட்டிருந்தனர். இவரே இந்நாடகத்தின் இயக்குனரும் ஆவார்.
மிகச்சிறப்பாக இருந்த இந்நாடகம் முடிந்ததும், அவருடைய நாடக உலகின் அனுபவங்களை குறித்து கேட்டு தெரிந்துகொண்டதிலிருந்து சில துளிகள்....
ஸ்ரீ கே.ஆர்.எஸ். குமார் தன்னுடைய ஐந்தாவது வயதில் தனது நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். கிராமம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடக்கும் கலாச்சார விழாக்களிலும், கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் பல்வேறு நாடகங்களிலும் பங்கேற்றார்.
கும்பகோணம் வாணி விலாச சபையில் உறுப்பினராக இருந்த இவர், அந்த சபா நடத்திய பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர்,1984ல் இவரின் குருநாதரும், நாடகக் காவலருமான ஆர்.எஸ்.மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் குழுவில் சேர்ந்தார். நேஷனல் தியேட்டர் நடத்திய சுமார் 1000 நாடகங்களில் நடிகராகவும், உதவி இயக்குநராகவும், குழு ஒருங்கிணைப்பாளராகவும், மேடைப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ். மனோகரின் மறைவுக்குப் பிறகு அவருடைய மனைவி சீதாலட்சுமி மனோகரின் ஆசியுடன் நாடகக் கலைஞர்கள் கலைக்கூடக் குழுவைத் தொடங்கினார்.
அவரால் அமைக்கப்பட்ட நாடக கலைஞர்கள் கலைக்கூடம் 40 நாடக கலைஞர்களுடனும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடனும் தற்போது இயங்கிவருகிறது. திருநாவுக்கரசர், ஸ்ரீ பக்த ஆண்டாள், அவதார புருஷர் ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஸ்ரீ பக்த துகாராம் ஆகிய நாடகங்களை அவர் மேடையேற்றியுள்ளார். சமீபத்தில் 'அவதாரபுருஷர் ஸ்ரீ ராகவேந்திரா' என்ற புதிய நாடகத்தை பல்வேறு சபாக்களில் அரங்கேற்றியுள்ளார். இவர் பக்தி நாடகங்களை மட்டுமே இயக்குவதும், அவற்றில் மட்டுமே நடிப்பதும் தமது கொள்கையாக கொண்டுள்ளார்.
மத்திய அரசின் இசை நாடகத்துறையின் சார்பில் பல்வேறு தேசிய நாடக நாடகங்களில் பல்வேறு வேடங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் தமிழ்நாடு இயல், இசை, நாடகத் துறை நடத்தும் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். பாரத் கலாச்சார் அமைப்பு அவருக்கு 'நாடக கலா பாரதி' விருது வழங்கி வாழ்த்தியுள்ளது.
திருஅருள் பிரகாச வள்ளலார், பாதுகா பட்டாபிஷேகம் ஆகிய நாடகங்களை விரைவில் அரங்கேற்றுவதற்கான முனைப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள், திரைப்பட இயக்குனர் பாலசந்தர் ஆகியோரின் பாராட்டையும் பெற்றுள்ள சிறந்த நாடகக் கலைஞர் இவர்.
இவரைப் போன்ற கலைஞர்களால்தான் இன்னும் தமிழ் கூறும் நல்லுலகில் நாடகக் கலை உயிர்ப்புடன் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
தொடர்ந்து நாடக உலகில் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நாடகங்களை இயக்குவதும், நடிப்பதுவும்தான் தன் வாழ்நாள் இலட்சியமாக கொண்டுள்ள அவரின் கலையுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்திவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றோம்.