
யோகாசனம் என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பண்டைய கால உடல், மனம் மற்றும் ஆன்மீக பயிற்சியாகும். யோகாசனம் = யோகா + ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.
சூரிய நமஸ்காரம் - பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் சூரியனை வணங்குவதற்காக செய்யப்படும் ஒரு ஆரோக்கிய யோகாசன பயிற்சியாகும். இது பன்னிரண்டு ஆசனங்களின் தொடர்ச்சியான ஓட்ட வரிசையாகும். அவைகள் முறையே Pranamasana, Hastauttanasana, ஹஸ்தபாதாசனம், அஸ்வ சஞ்சலனாசனம், தண்டாசனம், அஷ்டாங்க நமஸ்காரம், புஜங்காசனம், அதோ முக ஸ்வனாசனம், அஷ்வ சஞ்சலாசனம், ஹஸ்தபாதாசனம், Hastauttanasana, தடாசனம் ஆகும்.
அதிகாலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பான பலன்களை தரும். சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும், இரத்த ஓட்டம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடலின் நச்சுகள் வெளியேறும். மேலும், சூரிய நமஸ்காரம் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைத்து மன ஆரோக்கியத்தை வலுவாகவும் நிலையானதாகவும் வைத்திருக்க உதவும். சூரிய நமஸ்காரம் செய்தால் இவ்வளவு பலன் கிடைக்கும் போது 108 முறை செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதை நீங்கள் செய்யும் போது புரிந்து கொள்வீர்கள்.
இடுப்பு எலும்பு, முதுகெலும்பில் பிரச்சனைகள் உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண்டிப்பாக சூரிய நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் உடல் நலப்பிரச்சனைகள் இருந்தால், 108 சூரிய நமஸ்கார பயிற்சியை தொடங்கும் முன் யோகா பயிற்சியாளர் அல்லது உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
உடல் எடையை குறைக்க நீங்கள் ஒரு நிலையான வழியை தேடுகிறீர்கள் என்றால், 108 சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 90% க்கும் அதிகமான யோகா பயிற்சியாளர்கள் தொப்பையை குறைக்க சூரிய நமஸ்காரத்தை பரிந்துரைத்துள்ளனர். மெதுவாக, மிதமாக மற்றும் வேகமாக என எப்படி செய்தாலும், 108 சூரிய நமஸ்காரம் செய்வது உடல் எடையை மற்றும் தொப்பையை குறைக்க சிறந்த யோகா பயிற்சியாகும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தசைகளை வலுப்படுத்தவும் 108 சூரிய நமஸ்காரம் உதவுகிறது. அதனால்தான் எடை இழப்பு மற்றும் தொப்பையை குறைக்க இந்த சூரிய நமஸ்காரம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கலோரிகளை எரிப்பதற்கும், எடை மேலாண்மைக்கு உதவுவதற்கும் 108 சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது.
நினைவில் கொள்ளுங்கள், 108 சூரிய நமஸ்காரங்கள் செய்வது மிகப் பெரிய சவாலாகும். அதாவது நீங்கள் யோகாவுக்கு புதியவராக இருந்தால், உங்கள் வழக்கமான யோகா பயிற்சிக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ தொடர்ச்சியாக 20 சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் முதலில் தொடங்க வேண்டும், பின்னர் முறையே 40, 60, 80 என்று படிப்படியாக அதிகரிக்க வேண்டும். நீங்கள் உடல் ரீதியாகத் தயாரானதும் 108 சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் அதிக பலனை பெற முடியும்.
சூரிய நமஸ்காரத்தின் ஒவ்வொரு யோகா போஸும் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் சூரிய நமஸ்காரத்தை 108 முறை செய்தால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1500 கலோரிகளை எரிக்க முடியும். எனவே, வயதைப் பொருட்படுத்தாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க 108 சூரிய நமஸ்காரம் ஒரு சிறந்த உடற்பயிற்சி திட்டமாகும்.
ஒரு முக்கியமான விஷயம் - 108 சூரிய நமஸ்காரம் செய்யும் போது உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்தால் மட்டுமே தொப்பை மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.