குஜராத் ஜாம் நகரில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் 'வந்தாரா' வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இயற்கையான காடுகளுடன் செயற்கையாகவும் மரங்களை வளர்த்து அடர்ந்த வனப்பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். இது உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என அழைக்கப்படுகிறது. இந்தப் பூங்காவில் மிருகங்கள், பறவைகள், ஊர்வன என எண்ணற்ற ஜீவன்கள் நிறைந்து காணப்படுகிறன. இது 26.2.2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த உயிரியல் பூங்காவில் யானை, சிங்கம், புலி, சிறுத்தை, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை, மான்கள், காட்டுப்பன்றி, எண்ணற்ற பறவை இனங்கள், முதலைப் பண்ணை, பாம்பு பண்ணை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட எண்ணற்ற வினோதமான மிருகங்கள் என சுமார் 2,000 வகையான விலங்குகள் உள்ளன.
இங்கு செயற்கை நீரூற்றுகள், குளங்கள், குட்டைகள் ஏராளமாக உள்ளன. இவை தவிர பெரிய கால்நடை ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. அதில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற வசதிகள் உள்ளன. மயக்கவியல் நிபுணர்கள், டாக்டர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். பெரிய அளவில் அறுவை சிகிச்சை அரங்கமும் உள்ளது. இந்த வனவியல் பூங்காவில் சுமார் 2500 நபர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.
எத்தியோப்பியா, லிபியா, வெனிசுலா, காங்கோ, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணற்ற மிருகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சில சர்வதேச விலங்கு நல அமைப்புகள் (குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் உள்ளவை) குற்றம் சாட்டியுள்ளன. இவை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் ஆனந்த் அம்பானி நாங்கள் சட்டப்படி உரிய அனுமதியுடன் தான் இவற்றைக் கொண்டு வந்தோம் என மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து விலை கொடுத்து வாங்கியுள்ளோம் என குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இவை தவிர கோலாப்பூரில் உள்ள ஜெயின் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நந்தினி என்ற 32 வயதுடைய பெண் யானையை இங்கு கொண்டு வந்துள்ளனர். அதற்கு மகாதேவி எனப் பெயர் மாற்றி வைத்துள்ளனர்.
இந்த யானையை மீட்டுக் கொண்டு வருவதற்காக ஜெயின் சமூகத்தினர் தினசரி ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
உலகத்திலேயே மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்காவில் இத்தனை பிரச்சினைகள் உள்ளன. இதனை எப்படி ஆனந்த் அம்பானி முகேஷ் அம்பானி சமாளிக்க போகிறார்கள் என்பதுதான் கேள்வி!?