கோபம், வேகம், அனைத்துக்கும் அணை கட்டிவிட்ட அறிஞர் அண்ணாவின் பதில்!

C. N. Annadurai
C. N. Annadurai
Published on

அண்ணா என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அந்நாளைய முதல்வர் அண்ணாதுரை அவர்கள், காஞ்சியில் பிறந்து, கல்வியால் உயர்ந்து, கனியன்பினால் மக்களைக் கவர்ந்து, ஆட்சிக் கட்டிலில் ஏறி, அருஞ்சாதனை படைத்தவர்!

தாய் மொழியாம் தமிழில் அடுக்கு மொழியிலும், அந்நிய மொழியான ஆங்கிலத்தில் அதற்கு இணையாகவும் பேசி, உலக மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தவர்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று தன் செய்கைகளால் நிரூபித்துக் காட்டியவர்! அரசியல் சதுரங்கத்திலும் ‘பிஷப்’, ’எலிபென்ட்’, ’க்யூன்’ போன்று வேகம் காட்டாமல், ’கிங்’ போலவே நிதான வழி நின்றவர்!

சாதாரணமானவனாகப் பிறந்து, சாதனையாளனாக இறந்து, சாவிலும் வரலாற்றுப் புகழ் ஈட்டியவர். இவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் எவருக்குமே இல்லாததாம்!

சட்டசபை நிகழ்வுகளுக்குச் சரித்திரப் புகழ் கொடுத்தவர்!

ஒருமுறை சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது... காரசாரமான விவாதம்!

உறுப்பினர் கருத்திருமன் உதறி எடுக்கிறார்! உரத்த குரலில் ஓங்கி அடிக்கிறார்!

‘Your days are counted’ (உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன!)

பார்க்கிறார் அண்ணா! மிக நிதானமாக எழுந்து மெதுவாக, ஆனால் அனைவருக்கும் தெளிவாகக் கேட்கும் விதமாக, ’Even our steps are measured’ (நாங்கள் எங்கள் ஒவ்வொரு அடியையையுமே பார்த்துப் பார்த்துத்தான் நிதானமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்!) என்று கூற, சபையில் சில விநாடிகளுக்கு நிசப்தம்!

கோபம், வேகம், அனைத்துக்கும் அந்தப் பதில் அணை கட்டி விட்டதாம்!

இதையும் படியுங்கள்:
“ஆதாரம் இதோ!” - சட்டப் பேரவையில் அறிஞர் அண்ணா!
C. N. Annadurai

இது எதை ஞாபகப்படுத்துகிறது தெரியுமா?

ராமருக்குப் பட்டாபிஷேகம் சூட்ட எல்லா முன்னேற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. நகரே விழாக்கோலம் பூண்டு கிடக்கிறது! ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலேயே விழா நடப்பதைப்போல் எண்ணி வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்!

அரண்மனையோ உற்சாகப் போர்வையில் உத்வேகம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தூணும் புத்துயிர் பெற்று நிமிர்ந்து நிற்கிறது. ராமரும், லட்சுமணனும் சிரித்துப் பேசியபடியே உள்ளே வருகிறார்கள்!

கூனியின் சூழ்ச்சிக்கு ஆளான கைகேயி, உள்ளுக்குள் பொருமியபடி அறையிலிருந்து ஹாலுக்கு வருகிறாள். ராமனை அருகில் அழைக்கிறாள்!

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற்கொண்டு பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி  ஏழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றாள்!”

"காட்டுக்குப் போயி, தவமெல்லாம் இருந்து, நதிகளில் எல்லாம் முழுகிவிட்டுப் பதினான்கு ஆண்டுகள் கழித்து வரச்சொல்லி உங்கப்பா தசரதர் சொன்னார்!" என்று கூறுகிறாள், சிற்றன்னை கைகேயி! - பரதனைப் பெற்றவள்!

ராமனுக்கா தெரியாது யார் இப்படிச் செய்வார்களென்று! தந்தை தயரதனின் அன்பு அவர் அறியாததா என்ன? கைகேயியின் மாயவலை தன்னைச் சூழ்வதை அறிந்தவரல்லவா அவர்! இருந்தாலும் அவர் பதிலில்தான் எத்தனை பணிவு!

“மன்னவன் பணியன்றாகின் நும்பணி மறுப்பனோ என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன் மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்!”

“என்னம்மா நீங்க! அப்பாதான் சொல்லணுமா? நீங்க சொன்னா போக மாட்டேனா? (நீங்கதான் சொல்றீங்கங்கறது வெளிப்படை) பரதன் பெற்ற ஆட்சி நான் பெற்றது போலல்லவா? இதோ! கெளம்பிட்டேம்மா! ” என்று கூறி ராமன் புறப்பட்டதாக ராமாயணம் பேசும்!

இதிகாசமோ, அரசியலோ! சாமர்த்தியமும், சாந்தமும் நல்ல முடிவுகளைத் தானே  கொடுக்கும்!

இதையும் படியுங்கள்:
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?
C. N. Annadurai

அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் உரையாற்றி விட்டு, கேள்வி நேரத்தில் பங்கேற்கிறார்!

ஒரே சொற்றொடரில்  மூன்று முறை ஒரு வார்த்தை தொடர்ந்து வருமாறு சொற்றொடர் ஒன்றை அமைக்க முடியுமா என்று கேட்கிறார் ஒருவர்.

எவ்விதத் தயக்கமோ, கால தாமதமோ இன்றி, சொற்றொடரைக் கூறுகிறார்.

“There is no sentence that begins with because, because, because is a conjunction”

“எந்தப் புதிய சொற்றொடரும் ஏனெனில் என்ற சொல்லுடன் ஆரம்பிக்காது ஏனெனில், ஏனெனில் என்பது ஓர் இணைப்புச் சொல்!”

கை தட்டலும் ஆரவாரமும் அடங்க அதிக நேரமாயிற்றாம்!

இப்படிப் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம் அறிஞர் அண்ணாவைப் பற்றி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com