

மனிதர்களுக்கு மட்டுமல்ல, வீரத் தியாகம் செய்த விலங்குகளுக்கும் உலகம் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ள அதிசயக் கதைகள் இக்கட்டுரையில் சொல்லப்படுகின்றன. கொரியப் போரில் வெடிமருந்து சுமந்த ரெக்லெஸ் குதிரை, இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய யானை லின் வாங், போர்க்கைதி நாய் ஜூடி, போலந்து சேவை விலங்குகள், ஆடு பில்லி, பென்குயின் நில்ஸ் ஓலாவ் ஆகியோரின் சேவையும் அரசு அங்கீகாரமும் விரிவாக விளக்கப்படுகின்றன.
மனிதர்களுக்கு மட்டுமா ஓய்வூதியம்? இல்லவே இல்லை. அரசாங்கத்திடம் தங்கள் நற்பணிகளுக்காகவும், வீர தீர செயல்களுக்காக்கவும் உலகம் முழுதும் பல மிருகங்கள் பென்ஷன் வாங்கியுள்ளன. அவர்களை பற்றி வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஸ்டாஃப் சார்ஜென்ட் ரெக்லெஸ் (போர்க் குதிரை, அமெரிக்கா): அமெரிக்க வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இராணுவ விலங்கு ரெக்லஸ், கொரிய போரின் போது அமெரிக்க மரைன் கார்ப்ஸின் ஒரு சுமை சுமக்கும் குதிரையாக இருந்தது. கடுமையான எதிரித் தாக்குதலுக்கு மத்தியிலும் முற்றிலும் தனியாக வெடிமருந்துகளை சுமந்து சென்றதற்காக புகழ்பெற்ற அது, ஸ்டாஃப் சார்ஜென்ட்டாகப் பதவி உயர்வு பெற்றது.
அது ஓய்வு பெற்றவுடன், மரைன் கார்ப்ஸ் அதற்கு வாழ்நாள் முழுவதும் இலவச குடியிருப்பு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் அடையாள பூர்வமாக மாதாந்திர உணவுப் படியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
லின் வாங் (யானை, தைவான்):
இந்த ஆசிய யானை, இரண்டாம் உலகப் போரின் போது சீனப் படையெடுப்பு படையில் பணியாற்றி, மியான்மர் மற்றும் சீனா வழியாகப் பொருட்களைக் கொண்டு சென்றது. பின்னர் அது இராணுவத்துடன் தைவானுக்கு மாற்றப்பட்டு, தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளைத் தைபே மிருகக்காட்சிசாலையில் கழித்தது. ஒரு தேசிய வீரராக கருதப்பட்ட லின் வாங்குக்கு, அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க இராணுவ சேவைக்காக, தைவான் அரசாங்கம் 2003-ல் அது இறக்கும் வரை ஒரு சிறப்பு முன்னாள் படைவீரர் ஓய்வூதியம் வழங்கியது.
ஜூடி (பாயிண்டர் நாய், இங்கிலாந்து):
இரண்டாம் உலகப் போரின் போது ஒரு கப்பலின் சின்னமாகக் பணியாற்றிய ஒரு தூய இன ஆங்கில பாயிண்டர் நாயான ஜூடி, ஜப்பானியப் படைகளால் பிடிக்கப்பட்ட பிறகு, அதிகாரப்பூர்வமாக போர்க்கைதியாக (POW 81A) பதிவு செய்யப்பட்ட ஒரே நாயாக ஆனது.
அது கொடூரமான முகாம்களில் இருந்து தப்பிப் பிழைத்தது, சக கைதிகளைப் பாதுகாத்தது, மேலும் அதன் வீரத்திற்காக Tikin பட்டத்தை பெற்றது. போருக்குப் பிறகு, அதற்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவப் பராமரிப்பும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
அரசு அங்கீகாரம் பெற்ற சேவை விலங்குகள் (போலந்து):
2021-ல், போலந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை இயற்றியது. அதன்படி ஓய்வு பெற்ற அனைத்து காவல் நாய்கள், இராணுவ நாய்கள் மற்றும் சேவைக் குதிரைகளுக்கும் அதிகாரப்பூர்வமான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. வரலாற்று ரீதியாக, சேவை விலங்குகள் எந்தவித நிதியுதவியும் இன்றி அவற்றைக் கையாளுபவர்களிடமோ அல்லது காப்பகங்களிடமோ விடப்பட்டு வந்ததால், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற சுமார் 1,200 சேவை விலங்குகளுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவப் பராமரிப்பு மற்றும் உணவுப் படிகளை சட்ட பூர்வமாக உறுதி செய்வது தனது "தார்மீக கடமை" என்பதை அரசாங்கம் உணர்ந்தது.
லான்ஸ் கார்ப்பரல் வில்லியம் "பில்லி" வின்ட்சர் I (ஆடு, இங்கிலாந்து): காஷ்மீர் இனத்தைச் சேர்ந்த பில்லி என்ற ஆடு, பிரிட்டிஷ் இராணுவத்தில் ராயல் வெல்ஷ் ஃபுசிலியர்ஸ் பிரிவில் ஒரு உயர் பதவியில் பணியாற்றியது.
அது முறையான சேவை எண்ணையும் லான்ஸ் கார்ப்பரல் பதவியையும் கொண்டிருந்தது. (ஒரு ராணியின் அணிவகுப்பின் போது "நேரடி உத்தரவை மீறியதற்காக" சிறிது காலத்திற்கு ஃபுசிலியர் பதவிக்குத் தரம் இறக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட்டது ). 2009-ல் பில்லி ஓய்வு பெற்றபோது, விப்ஸநேட் மிருகக்காட்சிசாலையில் அதன் வாழ்நாள் முழுவதற்குமான பராமரிப்புக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
நில்ஸ் ஓலாவ் (பென்குயின், நார்வே/இங்கிலாந்து): எடின்பர்க் மிருகக்காட்சி சாலையில் வசிக்கும் பிரிகேடியர் சர் நில்ஸ் ஓலாவ் III, நார்வே மன்னரின் காவலர் படையின் அதிகாரப்பூர்வ சின்னமாகவும் தலைமை கர்னலாகவும் பணியாற்றும் ஒரு ராஜபென்குயின் ஆவான். அவனுக்கு கௌரவ வீரப்பட்டம் மற்றும் வழக்கமான இராணுவப் பதவி உயர்வுகளுடன், அவனது பராமரிப்பு, உயர்தர மீன் உணவு மற்றும் கவனிப்பு ஆகியவை நார்வே இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு பிரத்யேக நிதிநிலை அறிக்கை மற்றும் ஓய்வூதிய நிதியிலிருந்து நிதி அளிக்கப்படுகின்றன.
விலங்குகளின் அர்ப்பணிப்பு மற்றும் வரலாற்றுச் சாதனைகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், அவற்றின் மீதான நம் புரிதல் மேம்படுவதுடன், உயிரினங்கள் மீது காட்டும் இரக்கமும் மரியாதையும் பன்மடங்கு அதிகரிக்கிறது.