

வெற்றி பெற வேண்டுமென்றால் சுற்றியுள்ள ‘ஆமாம் சாமி’களை விலக்கி, நம் கருத்துக்கு எதிர்குரல் கொடுக்கும் நண்பர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இந்த கட்டுரை வலியுறுத்துகிறது. புகழ்ச்சி மட்டுமே தரும் சூழலில் நம் குறைகள் தெரியாது; விமர்சனமே நம்மை செதுக்கி உயர்த்தும் சக்தி. பல வரலாற்று நபர்களின் உதாரணங்கள் மூலம் எதிர்ப்பும் கேள்வியும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என விளக்கப்படுகிறது.
“நான் என்ன கருத்து சொன்னாலும், எது செய்தாலும், எல்லா நண்பர்களும் ஆமாம் போடுவார்கள். அப்படி நிறைய பிரண்ட்ஷிப்பா சேர்த்து வைச்சிருக்கேன்.” - பெருமையடித்து கொண்டார் இளைஞன்.
அதைக் கேட்டவர் “அப்படியா, நீ வாழ்க்கையிலே முன்னேறவே மாட்டே.” - அதிரடியாக ஏவுகணைச் சொற்களை செலுத்தினார்.
“என்னப்பா இப்படி சொல்லிட்டே, நான் முன்னேற முடியாதா ? எப்படி சொல்றே? கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன்...” கோரிக்கை விடுத்தார் பெருமைப்படுத்தி கொண்ட இளைஞன்.
“வெறும் ஆமாம்சாமிகள்” பக்கத்துல இருந்தா, நாம செய்யற தப்பும் தெரியாது, நம்மகிட்ட இருக்கிற குறைகளும், கண்ணுக்கே தெரியாதுப்பா. நீ வெள்ளை யானை வருதுன்னு சொன்னா ”ஆமாம்…ஆமாம்”ன்னு ஜால்ரா போட்டு அந்த புகழ்ச்சியிலேயே நீ அதலபாதாளத்துக்கு போயிடுவே.!
உதாரணத்துக்கு எடுத்துகிட்டா, “திரையுலகில் எவ்வளவோ நட்சத்திரங்கள் மின்னுகிட்டிருக்காங்க, ஆனா திடிரென “பவர் ஸ்டார்”ன்னு ஒருத்தர் வந்தாரே. அவரோட நிலைமை என்னாச்சு? எப்பவும் அவர் பின்னால இருபது பேர், நீங்க அகிலஉலக நடிகர், ஒங்களுக்கு மிஞ்சி சூப்பர் ஸ்டாரே கிடையாது-”ன்னு உசுப்பேத்தி ரணகளமானது தெரியும்ல.
“நண்பர்கள் வட்டத்துல, நாம சொல்ற கருத்துக்கு எதிர்குரல் கொடுக்கிற நண்பர்கள் இருக்கணுமப்பா, அப்பத்தான் நம்ம கருத்து வலியதா? அல்லது வலுவிழுந்ததா? ன்னு தெரிஞ்சுக்க முடியும். அதனால, நம்மை புகழ்பாடுபவர்களை விட நம்ம கருத்தை எதிர்த்து கிண்டல் செய்யுற ஆளும் இருக்கணுமப்பா” என்றார்.
மற்றவர்களால் மட்டந்தட்டப்படுபவர்கள் தாழ்ந்ததாக சரித்திரமில்லை, சாதனைதான் படைத்திருக்கிறார்கள். அதற்கு உதாரணங்களாக…..
“மக்களுக்கு பிடித்தமாதிரி உங்களால எழுதவே முடியாது, அது உங்களுக்கு வராதுங்க”ன்னு எழுத்தாளர் ஒருவரை நிராகரித்தார் பதிப்பாளர் ஒருவர்.
பதிப்பாளர் சொன்ன வார்த்தைகள் அவரை வீறுகொண்டு எழசெய்து. தம்மையே நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு நாவல்களை எழுதினார். அத்தனை நாவல்களும் புகழ்பெற்றன. அதில் ஒன்று “லிட்டில் விமன்” என்ற நாவலும் அடக்கம். அந்த நாவலின் ஆசிரியர் லூயி M ஆல்காட் (Louis M Alcott) என்பவர் ஆவர்.
“உன் குரல் சகிக்கலப்பா, உன்னால பாடவே முடியாது, நாளையிலேயிருந்து வகுப்புக்கு வராதே” என விரட்டி விட்ட ”என்ரிகோ க்ளுஸோல்”தான் பின்னாளில் பிரபல இசைக் கலைஞரனார்.
“நீ சரியான மக்குபேர்வழி உனக்கு சயின்ஸே மண்டையில ஏறாது” என்று மண்டையில தட்டி உட்கார வைக்கப்பட்டவர்தான், பின்னாளில் ஆயிரக்கணக்கான அறிவியில் கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்து வெளிச்சமூட்டிய தாமஸ் ஆல்வா எடிசன்.
“எல்லாமே வெளிநாட்டு அறிஞர்கள்தானா? நம்மூர்ல யாருமே இல்லையா? கேள்வியும் எழலாம்.
நம்மூர் பதிப்பாளர் ஒருவர், “இதெல்லாம் ஒரு எழுத்தாப்பா?, இது தேறாது” என்று எள்ளிநகையாடப்பட்ட ஒருவர், பின்னாளில் தம்மை இலக்கியத்திலும், அரசியலிலும், பத்திரிகை துறையிலும் மெருகேற்றி உலாவந்தவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள். பின்னாளில் அதே பதிப்பாளர் நண்பர் ஒருவரின் புத்தகத்திற்கு அணிந்துரைக்காக வலம்புரி ஜான் அவர்களின் வாசல் தேடி போனது வரலாறு ஆனது.
ஒருத்தர் சிறியதா வியாபாரம் செய்திட்டிருந்தார். அவர்கிட்டே “ஒனக்கு வியாபாரம் சரிப்பட்டு வராதுப்பா, மூட்டையைக் கட்டிகிட்டு ஊருக்கு போய் சேர்ற வழியப்பாரு..”அப்படின்னு எகத்தாளப் பேச்சை எதிர்க்கடைக்கார் அவிழ்த்து விட்டார்.
இப்படியான எகத்தாள பேச்சைக் கேட்டவுடன் ஆடிப்போக வில்லை, கோபப்பட்டு சீறிப்பாயவில்லை. நிதானமாக “இன்னும் இருபது ஆண்டுகளில். வியாபாரத்தை பல்மடங்கு பெருக்கியபின்….. பெரிய ஆடம்பர காரில் இதே தெருவில் வந்து இறங்குவேன்...” என சவால் விட்டு சாதனைப் படைத்தவர்தான் வெற்றி படிக்கட்டுகளில் முழக்கமிட்ட வசந்த அண்ட் கோவின் உரிமையாளரான வசந்தகுமார் அவர்கள்.
“ஆதலால், நண்பர்கள் வட்டத்துல, வெறும் “ஆமாம்சாமி ஆசாமிகளா ஆளைவிடுப்பா” என்று அவர்களை சற்றே விலக்கி , நம்ம குரலுக்கு எதிர்குரல் கொடுக்கிற ஆட்களையும் சேர்த்து வைச்சிக்கோங்க. அப்படி சேர்த்து வைச்சிகிட்டா “வெற்றி படிக்கட்டுகள்” உங்களை உயர்த்தி விடுமே!