
பூஜ்ய ஶ்ரீ பதினான்காம் தலாய் லாமா பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார்.
அமெரிக்க ஹெல்த் டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவர்கள் அவரது பிரத்யேக வைத்தியரான யேஷி டொண்டென் (Yeshi Dhonden) என்பவரை கொஞ்ச நேரம் தங்களுக்காக ஒதுக்கினால் அவரிடமிருந்து புதிதாக சிலவற்றைத் தங்கள் டாக்டர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறினர்.
தலாய்லாமாவும் டொண்டெனும் அதற்கு இசைந்தனர்.
பின்னர் என்ன நடந்தது என்பதை ரிச்சர்ட் செல்ஜெர் என்பவர் தனது புத்தகமான 'மார்டல் லெஸன்ஸ்: நோட்ஸ் ஆன் தி ஆர்ட் ஆஃப் சர்ஜரி' (Richard Slezer’s book 'Mortal Lessons: Notes on the Art of Surgery' – New York, Simon & Shuster, 1976) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.
இதில் ஒரு சுவையான பகுதியை பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்தது.
அப்போது செல்ஜெர் யேல் பல்கலைக்கழகத்தில் சர்ஜரி பிரிவின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.
மருத்துவமனையில் இருந்த அறிவிப்புப் பலகையில், 'ஜூன் 10ம் தேதி காலை ஆறு மணிக்கு யேஷி டொண்டென் மருத்துவ மனைக்கு வருகை புரிந்து சுற்றிப் பார்ப்பார்' என்ற அறிவிப்போடு யேஷி டொண்டென் பூஜ்ய ஶ்ரீ தலாய்லாமாவின் பிரத்யேக வைத்தியர் ஆவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
யேஷி டொண்டென் சுற்றிப் பார்க்கும் வார்டு அருகில் வெள்ளைக் கோட்டு அணிந்த ஏராளமான டாக்டர்கள் காத்திருக்க அவர்களுடன் செல்ஜரும் சேர்ந்து கொண்டார்.
அங்குள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நோயாளியை டொண்டென் சோதனை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எந்த நோய்க்கு அந்த நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது பற்றி டொண்டெனுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் நோயாளியை சோதிக்கும் போது அனைத்து டாக்டர்களும் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.
நோயாளியைச் சோதித்த பின்னர் அனைவரும் இந்த கேஸைப் பற்றி விவாதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட நோயாளியை சீக்கிரமே எழ வைத்து அந்தப் பெண்மணியிடம் வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் அவரைச் சோதிக்கப் போவதாகவும் புதிதாக சோதனைக்குச் சிறுநீர் வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
டொண்டென் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த நோயாளிப் பெண்மணியிடம் வந்தார். படுக்கைக்கு அருகில் வந்து நின்ற அவர் அந்தப் பெண்மணியையே நெடுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது பார்வை மல்லாந்து படுத்திருந்த அந்தப் பெண்மணிக்கு மேலே பதிந்திருந்தது. அவளின் உடல் பாகங்களை அவர் பார்க்கவே இல்லை.
பின்னர் அந்தப் பெண்மணியின் கைகளை தன் இரு கரங்களாலும் தூக்கினார். பின்னர் சற்று குனிந்து தன் தலையை தனது கழுத்திலிருக்கும் துணி வரை தாழ்த்தினார்.
அந்தப் பெண்மணியின் நாடித்துடிப்பைக் கண்ணை மூடிக் கொண்டு சோதித்தார்.
பிறகு நோயாளியின் கையை மெதுவாகக் கீழே வைத்தார். மொழிபெயர்ப்பாளரிடம் அவர் ஏதோ சொல்ல ஒரு சின்ன கிண்ணத்தையும் இரண்டு குச்சிகளையும் அவர் கொண்டு வந்தார்.
சோதனைக்காக இருந்த சிறுநீரில் கொஞ்சம் கிண்ணத்தில் விடப்பட்டது.
இரு குச்சிகளை வைத்து அதைக் கிளறினார் டொண்டென். பின்னர் அந்த சிறுநீர் அருகே முகத்தைக் கொண்டு சென்ற அவர் அந்த கிண்ணத்திலிருந்து வந்த நாற்றத்தைச் சற்றே முகர்ந்தார்.
அவ்வளவு தான், வார்டைச் சுற்றிப் பார்த்ததுடன் தனது விஜயத்தை முடித்துக் கொண்ட அவர் ஹாலுக்கு வந்தார்.
அனைவரும் அங்கு ஆவலுடன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கத் தயாராக இருந்தனர்.
“என்ன வியாதி என்று சொல்ல முடியுமா?” என்று ஒரு பேராசிரியர் கேட்க உடனே டொண்டென், “Congenial Heart Disease”
“Intervertivular Septal Defect (a hole in the wall between the left and right chmbers of the heart) with resultant heart failure என்றார்.
இடது மற்றும் வலது பக்க இதயப் பகுதிகளுக்கு இடையில் உள்ள சுவர் பகுதியில் ஒரு ஓட்டையால் ஏற்பட்ட இதய இயக்க நிறுத்தத்தால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
மற்றவர்கள் கேட்காத இதயத்தின் ஒலியை டொண்டென் மட்டும் எப்படிக் கேட்டார்?
எப்படி இவ்வளவு துல்லியமாக என்ன வியாதி என்பதை அவர் சொன்னார்?
அனைத்து அமெரிக்க டாக்டர்களும் பிரமித்து நின்றனர்.
எவ்வளவோ நவீனக் கருவிகளை வைத்து நிறைய சோதனைகள் செய்து நிர்ணயிக்கும் ஒரு வியாதியை எப்படி டொண்டெனால் இப்படிக் ஒரு கருவியும் இல்லாமல் கணிக்க முடிந்தது?
இதை அறிவியல்பூர்வமற்றது என்று சொல்ல முடியுமா, என்ன?
இது தவிர தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு தனது நல்ல ஆதரவைத் தந்து பல சோதனைகளைச் செய்யச் சொல்லி இருக்கிறார்.
தியானம் பற்றிய சோதனைகளின் முடிவைக் கண்டு அறிவியல் நிபுணர்கள் ஆச்சரியப்பட்டு அதை அப்படியே ஆவணப்படுத்தியுள்ளனர்.