தாம்பாளத்தில் தாளம் போட்டு தமிழ் வளர்த்த மேதை!

ஏப்ரல் 13: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்!
Pattukkottai Kalyanasundaram
Pattukkottai KalyanasundaramAI Image
Published on
Kalki Strip
Kalki Strip
  • எளிய, நாட்டுப்புறத் தமிழில் உயர்ந்த சிந்தனைகள் வேண்டும்.

  • ஆபாச வரிகளோ இரட்டை அர்த்தச் சொற்களோ இருக்கக் கூடாது.

  • காதல் பாட்டானாலும் கூட எதிர்கால நம்பிக்கை ஒளிர்விட வேண்டும்.

  • யதார்த்தத்தோடு முன்னேறும் பாதையைக் காண்பிக்க வேண்டும்.

  • இசையைத் தாளத்துடன் போட்டு பாட்டை அனுபவிக்க வேண்டும்.

  • பட்டி தொட்டி எல்லாம் பாடல் முழங்க வேண்டும்.

ஒரு ஆளைச் சொல்லுங்க பார்ப்போம் என்றால் பதில் பளிச்சென வரும் இல்லையா – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்) ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி (ஆசை) (அரசிளங்குமரி 1957)

எப்படிப்பட்ட அறிவு வளரணும், கவிஞரே, நீங்கள் சொல்வது?

மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் மதிப்பது நம் கடமை

வள்ளுவப் பெருமகன் சொல்லிய வழியில் வாழ்வது அறிவுடமை

(இரும்புத்திரை 1960)

வள்ளுவன் வழியில் (ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..) தாயையும் மகிழ்ச்சி கொள்ள வைக்கும் வளர்ச்சியே உண்மை வளர்ச்சி என்பதை எளிய சொற்களால் சொல்வது தான் பட்டுக்கோட்டையாரின் பாணி!

13-04-1930 அன்று தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாசலக் கவிராயருக்கு மகனாகப் பிறந்தவர் கல்யாணசுந்தரம்.

இளமையிலிருந்தே சுறுசுறுப்பாக இருந்த கவிஞர், விவசாயம், இட்லி வியாபாரி, மிஷின் டிரைவர், தேங்காய் வியாபாரி என பல தொழில்களில் முனைப்பு காட்டியவர். அரசியல்வாதியாகவும் பாடகராகவும் நடிகராகவும் கவிஞராகவும் என்று இப்படி சுமார் 16 தொழில்களில் ஈடுபட்டார்.

இயற்கையாகவே உள்ளத்திலும் உடலிலும் ஊறி இருந்த 'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்ற பாரதியின் வழியைப் பின்பற்றிக் கவிஞராகவே கடைசியில் மிளிர்ந்தார்.

1954ல் படித்த பெண் என்ற படத்திற்கு தன் முதல் பாடலை எழுதியவர் 1959ல், 29 வயதிலேயே அகால மரணத்தைச் சந்திக்கும் வரை 55 படங்களில் 187 பாடல்களைப் பாடி தமிழகத்தையே வியக்க வைத்தார்; சிந்திக்க வைத்தார்.

தூங்காதே தம்பி தூங்காதே

நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! (தூங்) நீ

தாங்கிய உடையும் ஆயுதமும்

பல சரித்திரக் கதை சொல்லும்

சிறைக்கதவும், சக்தியிருந்தால்

உன்னைக்கண்டு சிரிக்கும் சத்திரந்தான் உனக்கு

இடம் கொடுக்கும் (தூங்)

நாடோடிமன்னன் (1958)

என்று அறிவுரைப் பாடலைப் பட்டி தொட்டி எங்கும் முழங்கச் செய்ததோடு மக்களின் திலகமாக எம்.ஜி.ஆரையும் மக்களோடு இணைத்து விட்டவர் பட்டுகோட்டையார். இசையைத் தாளத்துடன் போட்டு, பாட்டுப் பாடி பாடலை மலரச் செய்வது அவர் பழக்கம். தாம்பாளத்தை எடுத்து கையினால் டக் டக் என்று அடித்தால் பாடல் வரிகள் சமுதாயத்தை எழுப்பும் வகையில் தானே உள்ளத்திலிருந்து சொற்களாக வந்து விழும். ஒருமுறை பாடல் வரிகளை மறந்து விட்ட அவர் வீட்டிற்குள்ளேயிருந்து தாம்பாளத்தை எடுத்து வந்து தாளம் போட, மறந்துவிட்ட வரிகள் தாமே ஞாபகத்திற்கு வந்தன!

ஆகவே தான் அவர் அனுபவத்தால் பாடினார் இப்படி:

துள்ளாத மனமும் துள்ளும்

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும்

இன்பத் தேனையும் வெல்லும் - இசை

இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது

தோணியாவது கீதம்;

அன்புக் குரலில் அமுதம் கலந்தே

அருந்தத் தருவது கீதம்

கல்யாணப் பரிசு (1959)

பெண்ணழகை வர்ணித்துக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான கவிஞர்கள் படைத்த கவிதைகளை சங்க இலக்கியத்தில் ஆரம்பித்து இன்று வரை பார்க்கிறோம். நிலவைப் பார்த்த கவிஞருக்கு வந்த பாடல் இது:

ஆண்:

ஆடை கட்டி வந்த நிலவோ – கண்ணில்

மேடை கட்டி ஆடும் எழிலோ – இவள்

ஆடை கட்டி வந்த நிலவோ – குளிர்

ஓடையிலே மிதக்கும் மலர்

ஜாடையில் சிரிக்கும் இவள்

காடுவிட்டு வந்த மயிலோ – நெஞ்சில்

கூடுகட்டை வாழும் குயிலோ!

அமுதவல்லி (1959)

நிலவு, மலர், மயில், குயில் என ஒரே பாடலில் சில சொற்களில் பெண்ணழகைச் சுட்டிக் காட்டிய தனித்வம் மிக்க இவரது கற்பனை வளம் அனைவரையும் அதிசயிக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை.

இன்னொரு பாடல்:

நளின நடை அன்னம் போலே

நெளியும் இடை மின்னல் போலே

ஆடை கொடி பின்னல் போலே

அன்பு மொழி கன்னல் போலே

நெஞ்சினிலே நேசத்தாலே

நீந்திடுவேன் மீனைப் போலே

அங்கம் யாவும் தங்க நிறம்

ஆசை உள்ளம் சங்கு நிறம்

அழகே வடிவாய் வரும்

மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்

அமுதவல்லி (1959)

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் 'The Man Who Knows Too Much' என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற கே சரா, சரா என்ற பாடல் உலகப் புகழ் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை அதன் புகழ் மங்கவில்லை.

பாடலை எழுதியவர்கள் ரேமாண்ட் பி.ஈவான்ஸ் மற்றும் ஜே லிவிங்ஸ்டன் (Raymond B. Evans, Jay Livingston) ஆகிய இரு பாடலாசிரியர்கள். When I was a little girl என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 1955ல் எழுதப்பட்டது. பிரபல அமெரிக்க பாடகியான டோரிஸ் டே இதைப் பாட இன்றளவும் இது உலகைக் கவர்ந்து வருகிறது.

இதை ஆரவல்லி படத்திற்காக பட்டுக்கோட்டையார் மூலப் பாடலின் ஜீவனை பிரதிபலித்து தமிழ்ப் பாடலாக மலரச் செய்தார் இப்படி:-

சின்னப்பெண்ணான போதிலே

அன்னையிடம் நான்ஒரு நாளிலே

எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா

நீசொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா! -என்

கண்ணல்லவா கலா! – உன்

எண்ணம் போல் வாழ்விலே

இன்பம் காணலாம்!

ஆரவல்லி (1957)

இன்று வரை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடலாக இது இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

இதையும் படியுங்கள்:
இன்சூரன்ஸ் கம்பெனிகளே பார்த்து பயந்து ஓடிய ஒரே நடிகர்!
Pattukkottai Kalyanasundaram

இன்றைய சமுதாயத்தின் கெட்ட வழிமுறைகளைச் சாடி அவை திருந்த வழி கேட்டவர் பட்டுக்கோட்டையார்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்

திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

மகாதேவி (1957)

ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு விளக்கவுரை எழுதினால் அது பட்டுக்கோட்டை களஞ்சியமாகவே அமையும்.

கண்ணதாசன் அவரைப் பற்றிக் கூறியதே போதுமானது:

“திரையுலகில் பாட்டெழுதுவோர் வரலாம், போகலாம். ஆனால் ஒரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்பமானான் பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்கினான் மண்ணுக்குள்ளே! திரையுலகில் அவனே தத்துவஞானி! ஆழ்ந்த சிந்தனை! அழுத்தமான சொல்லாட்சி; ஒரு வரிக்கு மறுவரி உயிர் கொடுக்கும் தன்மை; அவன் எழுதிய பாட்டெல்லாம் அப்படி அமைந்தன!

தென்றல் 10-10-1959

பாட்டுக்கு ஒரு புலவன்;

தமிழ் சொல்லுக்கு அதிகாரன்

என்றும் பட்டுக்கோட்டையாரின் புகழ் நிற்கும்

அதைச் சொல்வோம் நாம் தினமும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com