பிறர் சுதந்திரத்தில் தலை இடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் படியுங்களேன்..!

Interfering others freedom
2 men fighting
Published on

பிறர் சுதந்திரத்தில் தன்னிச்சையாக உரிமை எடுத்துக்கொள்ளும் போக்கு இப்போது பலரிடமும் இருக்கிறது.

சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தேன். உடனிருந்த உறவினருடன் மீனம்பாக்கம் போகவேண்டும் நான். பயணக் கட்டண சிக்கனத்தை உத்தேசித்து ‘‘அங்கிருந்து பாரீஸுக்கும் பஸ்ஸிலேயே போய்விடலாம்,’’ என்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது அருகில் நின்றிருந்த ஒருவர், ‘‘சார், பாரீஸுக்குப் போக எதிர்சாரியில் போய் நில்லுங்க. நீங்க தவறான பக்கத்திலே நின்னுகிட்டிருக்கீங்க,’’ என்று எங்கள் பேச்சின் இடையே புகுந்தார்.

‘‘நாங்க பாரீஸுக்குப் போகறதுக்காகத்தான் காத்திருக்கிறோம்னு உங்ககிட்ட யார் சொன்னது?’’ என்று அந்த இடையூரறால் எரிச்சல்பட்ட உறவினர் அவரிடம் கோபமாகக் கேட்டார்.

‘‘இல்ல சார்...நீங்க பேசிகிட்டிருந்தீங்க, ஹெல்ப் பண்ணலாமேன்னுதான்..’’ என்று தயங்கி இழுத்தார் அந்த அறிமுகம் இல்லாத நபர்.

‘‘உங்ககிட்ட கேட்டா மட்டும் பதில் சொல்லுங்க,’’ என்று கடுப்பாகச் சொன்னார் உறவினர். ஆனாலும் அந்த நபரின் கண்களில், ‘இவங்க பாரீஸுக்குப் போகணும்னு சொன்னது எதுக்காக?’ என்று தெரிந்து கொள்ளும் வம்பு மின்னியது.

நல்லவேளையாக நாங்கள் பயணம் செய்யவேண்டிய பேருந்து வந்ததால் மேலும் அங்கே எந்த தர்மசங்கடமும் தொடரவில்லை. பிறர் பேசிக்கொள்வதில் ஆர்வம் காட்டும் இந்த அநாகரிகம் நிறைய பேரிடம் இருக்கிறது.

இப்படி தாமாக வலிய வந்து யோசனை சொல்பவர்களிலும் தவறான தகவல் கொடுப்பவர்கள்தான் அதிகம்! ஏதேனும் ஒரு குறிப்பிட்ட முகவரிக்குச் செல்ல, முன்பின் அறியாத ஒருவரிடம் சந்தேகம் கேட்டீர்களானால் அவருக்கும் அந்த இருப்பிடம் தெரியாவிட்டாலும், ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லி நம்மை திசைத் திருப்பி அலைய விடுவார். அதாவது, அந்தத் தகவல் தனக்குத் தெரியாது என்பதை வெளிப்படுத்திக்கொள்ள அவருக்கு கௌரவக் குறைச்சலாக இருக்கிறது போலும்!

இதையும் படியுங்கள்:
ரத்தன் டாடா - ஒருவருக்குள்ளே இத்தனை நற்குணங்கள் இருக்க இயலுமா?
Interfering others freedom

ஒரு கடை வாசலில் பத்துப் பதினைந்து இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தன. அவற்றில் ஒன்றின்மேல் ஒருவர் மிகவும் சௌகரியமாக அமர்ந்திருந்தார். ஒருசில நிமிடங்களில் ஓர் இளைஞர் அங்கேவந்து அந்த வாகனத்தின் ஹான்டில்பாரைத் தொட, "உங்க வண்டியா சார்," என்று அசடுவழியக் கேட்டபடி அதுவரை அதன்மீது உட்கார்ந்திருந்தவர் இறங்கிக் கொண்டார். வண்டி சொந்தக்காரரின் கோபம் அந்த வண்டி புறப்பட்டுச் சென்ற வேகத்திலேயே தெரிந்தது. பிறர் உடைமையிலும்தான் எவ்வளவு இயல்பாக உரிமை எடுத்துக்கொள்கிறார்கள்!

ஓர் அலுவலகத்தின் வாயிலில் நின்றபடி ஒரு இளைஞர் சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர் பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு இளம்பெண் ஒரு டூவீலர் இருக்கை மீது ஒரு விண்ணப்பப் படிவத்தை வைத்து பூர்த்தி செய்துகொண்டிருந்தார். அந்தப் பெண்ணையே இந்த இளைஞர் உற்று கவனித்துக் கொண்டிருந்தது அவருக்கு அருகில் நின்றிருந்த எனக்கும் வெறுப்பாக இருந்தது. இதற்கிடையில் தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்த அந்தப் பெண் சட்டென்று நிமிர்ந்து அந்த இளைஞனைப் பார்த்தாள்.

உடனே அவரைப் பார்த்து, ‘‘என்ன சார் வேணும் உங்களுக்கு? எதுக்காக என்னையே பார்த்துகிட்டிருக்கீங்க?’’ என்று கோபமாகவே கேட்டாள்.

அந்த இளைஞன் அந்தப் பெண்ணை நெருங்கி வந்தார். ’’ஃபாரம் பூர்த்தி பண்ணிட்டீங்களா?’’ என்று சாதாரணமாகக் கேட்டார்.

‘‘அதைப் பற்றி உங்களுக்கு என்ன இவ்வளவு அக்கறை?’’ என்று கேட்டதிலிருந்து அந்தப் பெண்ணின் அதிகரித்த கோபம் புரிந்தது.

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 12 - 'அரசியலைச் சாக்கடையாக்கி வாக்கு மீன்களைச் சேகரிக்க முயலும் ட்ரம்ப்!' ஆனால்...
Interfering others freedom

‘‘இல்லை, நீங்க எழுதி முடிச்சிட்டீங்கன்னா நான் என் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்படுவேன்’’ என்று இளைஞர் தன்மையாகக் கூறியபோதுதான் அந்தப் பெண்ணுக்கு அவருடைய வாகனம் மீது வைத்தபடி தான் விண்ணப்பத்தை நிரப்பிகொண்டிருந்த உண்மை புரிந்தது. எனக்கும்தான். ‘‘சாரி சார், சாரி,’’ என்று அந்தப் பெண் தன் தவறுக்கு வருந்த, அந்த இளைஞரோ எந்த பதிலும் சொல்லாமல் தன் வாகனத்தை முடுக்கிவிட்டு புறப்பட்டுப் போனார்.

இப்படி அடுத்தவர் சொத்திலும் சுதந்திரத்திலும் உரிமை கொண்டாடும் இந்த மன நிலையை என்னென்று சொல்வது? இந்த அத்துமீறலும், யதேச்சாதிகாரமாக உரிமை கொண்டாடுதலும்தான் நாளாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுவது, சட்டத்துக்குப் புறம்பான சில நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று மேலும் ஒழுக்கம் குறைய வழிவகுக்கும். தான் இப்படி உரிமை எடுத்துக்கொள்வதுபோல பிறரும் நம் சுதந்திரத்தில் தலையிடும்போது நம்மால் பொறுத்துக் கொள்ளமுடியுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com