

வாதங்கள் பல வகைப்படும். வாதம், பிரதிவாதம், வாக்குவாதம், விதண்டாவாதம் இப்படி நிறைய உள்ளன.
இந்த வாதங்கள் பற்றி நாமும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
வாதம் – (debate): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே உள்ள கருத்து மோதலை குறிப்பதாகும். உதாரணமாக ஆவி இருக்கிறதா? இல்லையா? குடும்ப வாழ்க்கை சிறப்பது பெண்களாலா? அல்லது ஆண்களாலா? இப்படி நாடாளுமன்றத்தில் காரசாரமான வாதங்கள் அரசியலில் ஒரு நேரம் புயலை கிளப்பி விடும். சில நேரம் காற்றில் எழுதிய கவிதையைப் போல காணாமலேயே போய்விடும்.
விவாதம்: நீதிமன்றங்களில் நடக்கும் அரசு தரப்பு வக்கீல் மற்றும் எதிர் தரப்பு வக்கீல் ஆகியோர்களுக்கிடையே ஆன வாதம் இப்படி விவாதம் – இது ஒரு நேர்மறையான அணுகுமுறையாகும். இதில் விவாதம் செய்பவர்கள் நியாயமான முறையில் கருத்துக்கள் மற்றும் மனம் புண்படாதவாறு பரிமாறிக் கொள்வார்கள்.
இந்த வாதத்தில் ஒருவரின் கருத்தை மற்றொருவர் ஏற்காத மனோநிலை உள்ளவராக இருந்து விட்டால் அந்த அரங்கமே போர்க்களமாகி விடும். இவை பெரும்பாலும் அரசியல் விவாத மேடைகளில் காணலாம்.
வாக்குவாதம்: இந்த வகை வாதம் ஒரு முரண்பட்ட வாதமாகும். இந்த வாதம் செய்பவர்கள் சண்டை போடும் மனோபாவம் கொண்டவராகவோ அல்லது எளிதில் உணர்ச்சி வயப்பட்டவராகவோ இருந்து விட்டால் இந்த வாதத்திலிருந்து விடுபடுவது அல்லது தவிர்ப்பது மிகவும் சிறப்பான நடைமுறையாகும்.
ஒரு புராண கதையில் இருவரின் கழுத்திலும் மாலை அணிவிக்கப்பட்டு இருக்கும். இருவரிடையே வாக்குவாதம் நடைபெறும். அப்பொழுது எளிதில் உணர்ச்சி வயப்படுபவரின் கழுத்திலிருந்த மாலை வாடி விடும். அந்த தருணத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டதாக தீர்மானிப்பார்கள்.
பிடிவாதம்: இருக்கின்ற வாதங்களிலேயே மிகவும் சிக்கலான ஒன்று இந்த வாதம் தான். ஒருவரின் மனதிற்குள் தான் நினைத்தது தான் சரி என்று அவருக்குள் தீர்மானித்து விட்டால் யாராலும் அவரை எதிர்கொள்ள இயலாது. அவரின் மனதிற்குள் உள்ள ஒரு கருத்து அவருக்குள் அட்டையைப் போல இருந்து அவரையே அழித்து விடும் வல்லமை கொண்டது.
இவர்கள் மற்றவர்களின் யோசனையைக் கேட்கமாட்டார்கள். இவரது காதுகள் எதனையும் ஏற்கும் நிலையில் இருக்காது. இப்படிப்பட்டவரைத் தான் செவிடன் காதில் ஊதிய சங்கு என்பார்கள்.
பதின்ம வயதுடைய பெண்கள் அல்லது ஆண்கள் இப்படிப்பட்ட பிடிவாத குணத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் வயப்பட்டு விட்டால் உலகமே எதிர்த்தாலும், உடும்பு பிடியாக இருந்து பிடிவாதம் பிடித்தும் அழுகை ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
குழந்தைகளுக்கும் இந்த மனோபாவம் இருக்கும்… விரும்பும் விளையாட்டு பொருளை அல்லது பொம்மைகள் கிடைக்கும் வரை பிடிவாதம் பிடித்து வீட்டை ரணகளமாக்கி விடும். குழந்தைகளாக இருக்கும் வரை பராவாயில்லை. வளர்ந்தால் பிரச்சினைதான்.
விதண்டாவாதம்: ஒருவரின் கருத்தை ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு மற்றும் எந்த பயனும் இல்லை என்ற போதும் தமது கருத்தே மேலானது என்ற மனப்பான்மை கொண்டவர்கள் செய்யும் வாதம் இது. மிகவும் ஆபத்தானது.
பிறர் கூறுவதை மறுத்து தான் சொன்னதை நியாயப்படுத்த வீணாக வாதம் செய்து அதில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்பவர்கள். இதனால் பகைமை தான் ஏற்படும். இருந்தாலும் பராவாயில்லை என்பார்கள் இவர்கள்.
உதாரணமாக நண்பர்கள் கூட்டத்தில், ஒரு நண்பர் ஒரு தொழிலைப் பற்றி அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்குகிறார் என்று கொள்வோம்.
அந்த கூட்டத்தில் இந்த விதண்டாவாதம் செய்பவர் இருந்து விட்டால், “அது நடக்காது” “நீங்கள் சொல்வது தவறு” என்று தொடர்ந்து அவரை பேச விடாமல் செய்வதில் இவருக்கு நிகர் இவரே!
பிரதிவாதம்: ஒரு வாதத்திற்கு எதிராக அமைவது இந்த பிரதிவாதமாகும். இவை பெரும்பாலும் நீதிமன்றங்களில் நிகழ்த்தப்படுபவை ஆகும்.
அரசு வழக்கறிஞர் மற்றும் குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கிடையே இந்த வாதத்தை நிகழ்த்தி தங்களுடையப் பக்க நியாயங்களை எடுத்துரைப்பார்கள். இதன் அடிப்படிடையில் தீர்ப்பு வழங்கப்படுவது பொதுவானதாகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் “சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீல்கள் வாதம் விளக்கு” என்பார். வாக்கு வல்லமை எவருக்கு இருக்கிறதோ அவர் வென்று விடுகிறார்.
பொதுவான கருத்து என்னவென்றால் வாதத்தில் நீங்கள் எப்பொழுதும் வெற்றி பெறுபவர்களாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் எதிரிகளின் பகைமையும், உள்ள நட்பும் விலகுவதற்கான வாய்ப்பை நீங்களே ஏற்படுத்தி தருகிறீர்கள் என்று பொருளாகும்.
ஆகவே வாதியுங்கள்; ஆனால், அதில் உங்களை இழக்காதீர்கள்.