
‘சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி’ என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்து. நடந்து செல்லும் பழக்கம் மிகவும் அரிதாகிவிட்ட இந்த காலகட்டத்தில், ஏதாவது உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலத்தைக் காக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
நடக்க வேண்டிய வயதில் நடந்து பழகாமல், சோம்பல்பட்டு சில போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டு, வயதாகிவிட்டபோது, உடலில் சேர்ந்துவிட்ட சர்க்கரை, கொழுப்பை, நடந்துதான் கரைக்க வேண்டும் என்றாகி விட்டது!
அவசரம், நேரம் சேமிப்பு என்ற நிர்ப்பந்தங்களால் கால்களுக்கு வேலை கொடுக்காமல், வாகனங்களை நாடுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த நேரத்தை சேமிக்க வேண்டும் என்று வாகனங்களை நாடினோமோ, அந்த வாகனங்களின் எண்ணிக்கைப் பெருகிவிட, அவை ஏற்படுத்தும் சாலை நெருக்கடியால், அந்த நேரம், போக்குவரத்து சுலபமாவதற்காகக் காத்திருப்பதில் வீணாகி விடுகிறது. அவ்வாறு காத்திருக்கப் பொறுமை இல்லாத அவசரம், எதையும் சாதிக்காது என்பது தெரிந்தும், வேகத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பாதது இப்போதைய பண்பாகி விட்டது!
சாலைப் போக்குவரத்து, நாளுக்கு நாள் நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது. அரசுப் பேருந்துகள், தனியார் டிரக்குகள், பெரிய வடிவ கார்கள், சிறிய வடிவ கார்கள், பள்ளிக்கூட வேன்கள், தனியார் தொழிலகப் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், சாதா ஆட்டோக்கள், டூ வீலர்கள், ஸ்கூட்டர்கள், மோபெட்கள், சைக்கிள்கள், கைவண்டிகள், சிலசமயம் மாட்டு வண்டிகள் என்று எல்லா வாகனங்களும் தெருவையே மிகவும் குறுக்கிவிட்டன.
இவற்றில் சைக்கிள் ஓட்டிகள் நிலைமைதான் பரிதாபம். அவர்களால் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பின்னால் விரைந்து வரும் வாகனங்கள், பக்கத்துத் தெருவுக்கு சைக்கிள் திரும்ப முடியாதபடி அடைத்துக் கொண்டிருக்கும். ஓரமாகப் போக முடியாமலும், இணையாகப் போக இயலாமலும் சைக்கிளோட்டிகள் தடுமாறித்தான் போகிறார்கள்.
இத்தகைய சைக்கிளோட்டிகளின் வேதனையைத் தீர்க்க, சாலைகளில் அவர்களுக்கென்றே ஓரமாகத் தனிப்பாதை அமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு ஒத்து வராததால் பின்னர் கைவிடப்பட்டு விட்டது.
சைக்கிளோட்டிகளுக்குத் தனிப்பாதை என்று அமையுமானால், அதிக எண்ணிக்கையில் மக்கள் சைக்கிளைப் பயன்படுத்தத் துவங்குவார்கள் என்றும் இதனால் சுற்றுச் சூழல் மாசு இன்றி பாதுகாக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.
இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் பரீட்சார்த்த முறையில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நேரு பூங்காவிலிருந்து சேத்துப்பட்டு போக்குவரத்து சிக்னல்வரை சைக்கிளோட்டிகளுக்காக தனிப் பாதை அமைத்தார்கள். மக்களும் உற்சாகமாக அந்தப் பாதையைப் பயன்படுத்த முன்வந்தார்கள். அவர்களுடைய பாதுகாப்பு கருதி, அந்தப் பாதை, சாலை ஓரமாக நடைபாதையை ஒட்டியே அமைக்கப்பட்டு, வழிநெடுக சங்கிலித் தடுப்பும் போடப்பட்டது. ஆனால்,
அந்த சாலையில் பேருந்து நிறுத்தங்கள் இருந்ததால், பேருந்துகள் அங்கே வந்து நிற்கும்போது சைக்கிளோட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். பேருந்தில் மக்கள் ஏறி, இறங்க, அது புறப்பட்டுப் போனபிறகுதான் சைக்கிள்கள் தடைபட்ட தம் பயணத்தைத் தொடர முடிந்தது. இதைவிடக் கொடுமை, அந்தப் பேருந்து நிறுத்தங்களில், ஆட்டோக்களும் நின்று கொண்டிருந்ததுதான். அவ்வாறு நின்றிருந்த ஆட்டோக்களைத் தாண்டி, பேருந்துகள் பாதி சாலையில் நிற்கும். அவற்றையும் மீறி சைக்கிளோட்டிகள் எப்படிச் செல்ல முடியும்? அப்படியே போனாலும், சைக்கிளுக்கான பாதையை விட்டு நடுசாலைக்கும் அப்பால் அல்லவா செல்ல வேண்டும்?
ஓரிரு தினங்களிலேயே இந்தத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று கைவிடப்பட்டது. அதாவது பலவகை வாகனங்கள் புழங்கும் சாலையில் இதுபோன்று சைக்கிளுக்கென்று தனிப் பாதை அமைப்பது வெற்றிகரமாக இல்லை. ஆகவே, பேருந்து நிறுத்தம், ஆட்டோ இடையூறு இல்லாத சாலைகளில் முதலில் சைக்கிளுக்கான தனிப்பாதை அமைக்கலாம். இது நிச்சயம் வெற்றி பெறும்; பிற வாகனங்களைவிட சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்; இதே திட்டம் பிற பகுதிகளுக்கும் அந்தந்த போக்குவரத்து சூழ்நிலையை உத்தேசித்து நடைமுறைப் படுத்தலாம்.
‘‘இப்பல்லாம் ஜிம்முக்குப் போய் அங்கே ஒரே இடத்தில் நிற்கும் சைக்கிளை ஓட்டி உடற் பயிற்சி மேற்கொள்வார்களே தவிர, தம் தினசரி அலுவல்களை கவனிக்க சைக்கிளை யார் நாடுவார்கள்?‘‘ என்கிறீர்களா, அதுவும் சரிதான்.