

உரத்த சிந்தனை அமைப்பு கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து பாரதியின் தேசப்பற்று மற்றும் சமூக முன்னேற்ற சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடையே பரப்பும் பணியினை ”பாரதி உலா” என்ற பெயரில் செய்து வருகிறது.
பள்ளி கல்லூரி மாணவரிடையே பாரதியார் பாடல் களிலிருந்து பேச்சு, பாடல், நடன நிகழ்ச்சிகளை நடத்தி, பங்கு பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள், பாரதி பாடல்கள் நூல், ஊக்கத்தொகை, சான்றிதழ் போன்றவற்றை, வழங்கி வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற மற்ற மாநிலத் தலைநகர்களிலும் பாரதி உலா நடைபெற்று வருகிறது.
"பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்" என்று புகழ்ந்து பாடிய பாரதியைப் போற்றும் விதமாக முதல் நிகழ்ச்சி, இந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. பாரதி உலா-2025 ன் நிறைவு விழா, கடந்த பிப்ரவரி 22ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது.
பல கல்லூரிகள், பள்ளிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் நடனம், உரைகள், பாடல்களைத் தொடர்ந்து, பாரதி உலாவில் தொடர்ந்து பங்கேற்று வரும் திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு, உரத்த சிந்தனையின் “பாரதி பணி வேந்தர்” விருது வழங்கப்பட்டது.
விருதினை வழங்கி, நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள், பங்கேற்ற மாணவர்களின் திறமையைப் பாராட்டினார். தொடர்ந்து, தனது உரையில், “பாரதியை நூறாண்டுகள் கடந்தும் இன்றும் கொண்டாடுகிறோம். அவர் காலத்தில் அவருக்கு எந்த விருதும் வழங்கப் படவில்லை.
அவரது சாதனைகளே விருதுகளைவிட மேம்பட்டு நிற்கின்றன. தமிழ் இலக்கியத்தையும், சமுதாயத்தையும் பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.
1904 ம் ஆண்டிலேயே, பெண்களுக்காகவும், தாழ்த்தப் பட்டவர்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பாரதி குரல் கொடுத்திருக்கிறார். அதற்கான சான்றுகள் அவர் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங்கள் உள்ளன. தமிழகத்தில் முதன் முதலாக இந்தப் புரட்சியைச் செய்தவர் பாரதி.
இத்தகைய விழாக்கள் பாரதியை நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்வதற்காகவே நடத்தப்படுகின்றன. கவிஞர்களைப் போற்றும் சமுதாயமே சிறந்த சமுதாயம். பாரதியின் பாடல்களை பல இன்னல்களுக்கு நடுவே வெளிவரச் செய்த பாரதியாரின் மனைவி செல்லம்மா, மற்றும் குடும்பத்தாரைப் பாராட்டுகிறேன் என்றும் வைத்தியநாதன் கூறினார். மேலும், தமிழையும் தேசியத்தையும் போற்றுபவர்கள், பாரதியைப் போற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இயக்குனர் முத்துராமன் தனது உரையில், தனது கடும் உழைப்பைக் குறிப்பிட்டு, உழைப்புதான் என்றுமே உயர்வைத்தரும் என்றும், வயதானவர்கள், ஓய்வாக இருக்காமல் பொது வாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திரைப்பட நடிகரும் டெக்னோ ப்ராடக்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான முரளி ஸ்ரீநிவாசன், தபம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.மேகநாதன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் பஞ்சாபகேசன், கோயம்புத்தூர் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விஜயா, ஸ்ருதிலய வித்யாலயா முதல்வர் பார்வதி பாலசுப்பிரமணியம்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழா சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தமிழ் இணைய கல்விக்கழக அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.