சிறுகதை: திவாகரனுக்கு இரத்தக் கொதிப்பு!

Man reading newspaper | how to reduce BP naturally
how to reduce BP naturally short story in tamilImage credit: AI image
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on: 
Kalki strip
Kalki strip

கொஞ்ச நாட்களாகவே திவாகரனுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கிறது. ‘ப்ளட் ப்ரஷர் மானிட்டரில்‘ அவ்வப்போது பரிசோதித்துக் கொண்டு வருவான். ‘‘இப்படி அடிக்கடி பார்த்துகிட்டே இருக்காதீங்க; மானிட்டர் அதிகமா காமிச்சா அப்படியே அப்செட் ஆகிடறீங்க; அதுக்கப்புறம் அன்னிக்கு பூரா நான் குடும்ப வேலைகள்ல நிம்மதியா ஈடுபட முடியலே. அதனால இந்த மானிட்டர் சனியனைத் தூக்கி எறியுங்க. ஒருநாளைக்கு ரெண்டு, மூணு வேளையா பார்த்துப்பீங்க?‘‘ என்று மனைவியின் புலம்பல் வேறே!

இத்தனைக்கும், வாட்ஸ் ஆப், ஏ.ஐ. ஜெமினியிடமிருந்தெல்லாம் ஆலோசனை கேட்டு அதன்படி, கொதிப்பு அதிகமாக இருக்கும் நாட்களில் சாப்பாட்டில் உப்பைக் குறைத்துக் கொள்வதும், காலையில் கர்ம சிரத்தையாக நடைப் பயிற்சி மேற்கொள்வதும், யாரிடமும், எதற்காகவும் கோபப்படவே கூடாது என்ற முயற்சிப்பதுமாகத்தான் இருக்கிறான்; ஆனாலும் கொதிப்பு அவனுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு அழிசாட்டியம் பண்ணுகிறது!

சிலசமயம் திவாகரனுக்கு மானிட்டர் மேலேயே சந்தேகம் வந்துவிடும். பேட்டரியை மாற்றுவான்; அப்போதும் அந்த விசுவாசமான மானிட்டர் சரியான அளவையே காட்டும். விசுவாசம் யாருக்கு? தனக்கா, கொதிப்புக்கா என்று கேட்டு அத்துடன் மானசீகமாகவும் கோபப்படுவான். இத்தனைக்கும் மருத்துவர் சிபாரிசு செய்த மாத்திரையை, அவர் சொன்னபடி தினம் ஒன்று என்று எடுத்துக் கொண்டும் வருகிறான்.

தினமும் மானிட்டரையே பார்த்துக் கொண்டு குழம்பித் தவிப்பானேன் என்று ஒருசமயம் பக்கத்து மருத்துவமனைக்குப் போய் 25 ரூபாய் கட்டணம் செலுத்தி B.P., மற்றும் சர்க்கரை அளவை சோதித்துக் கொண்டான். இதன் மூலம், B.P. மானிட்டர் தனக்கே விசுவாசமாக இருப்பதைப் புரிந்து கொண்டான். பணி ஓய்வுக்குப் பிறகான இந்த அறுபத்தைந்து வயதில் இனியும் கைக்கருவியுடன் சடுகுடு விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது என்று தீர்மானித்து மருத்துவரைப் போய்ப் பார்த்தான்.

‘‘தூங்கி எழுந்த பிறகு எப்போதிலிருந்து கொதிப்பு அதிகமாக இருப்பதாக உணர்கிறீர்கள்?‘‘ என்று கேட்டார், மருத்துவர்.

‘‘எட்டு மணிக்கெல்லாம், டாக்டர்,‘‘ என்று தன் கொதிப்பு அனுபவங்களைத் தொகுத்த நேர அளவைச் சொன்னான், திவாகரன்.

‘‘சரி, எத்தனை மணிக்குத் தூங்கி எழுந்திருக்கிறீர்கள்?‘‘

‘‘எப்படியும் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.‘‘

‘‘தினசரி வழக்கமாக, பல் துலக்குவது, காபி குடிப்பது எல்லாம் உண்டுதானே? அப்புறம் என்ன செய்கிறீர்கள்?‘‘

இதையும் படியுங்கள்:
ஏன் வளைகுடா நாடுகளில் மட்டும் எண்ணெய் வளங்கள் அதிகமாக இருக்கின்றன?
Man reading newspaper | how to reduce BP naturally

‘‘வாசலுக்கும், உள்ளுக்குமாக வீட்டிலேயே அலைவேன்.‘‘

‘‘வீட்டுக்குள்ளேயே நடைப் பயிற்சியா? இதுவும் நல்ல ஐடியாதான். ஆனால் ‘அலைவேன்‘ என்று ஏன் சொன்னீர்கள்?‘‘

‘‘டாக்டர், எனக்குக் காலையில் காபி இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அந்த நேரத்தில் செய்தித் தாளைப் படிக்காவிட்டால் நாள்பூரா ஒன்றுமே ஓடாது. அதுக்காகத்தான் பேப்பர் தம்பி வருகிறானா என்று பார்க்க அப்படி அலைகிறேன்.‘‘

‘‘ஓ, சரி, பேப்பர் வந்ததும் உடனே பிரித்துப் படிக்க ஆரம்பித்து விடுவீர்கள், சரியா?‘‘

‘‘ரொம்ப சரி.‘‘

‘‘உங்க ரத்தக் கொதிப்புக்கும் இதுதான் காரணம்,‘‘ என்றார் டாக்டர்.

‘‘டாக்டர், என்ன சொல்கிறீர்கள்?‘‘

‘‘ஆமாம், இப்போதைக்கு, தேர்தல் முஸ்தீபுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கட்சிகளுக்கிடையே காரசாரமான விமரிசனங்கள், விவாதங்கள், சண்டை, சச்சரவு, போராட்டம், பொதுஜன பாதிப்பு, போதாக்குறைக்கு கற்பழிப்பு, பாலியல் சீண்டல், காமக் கொடூரங்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் செய்திகளைச் சுமந்து கொண்டு வருகிறது, தினசரி. அவற்றைப் படிக்க நேர்வதால் அப்படியே ரத்தம் கொதிக்கிறது உங்களுக்கு…"

‘‘அப்படியா சொல்கிறீர்கள், டாக்டர்?‘‘

‘‘ஆமாம். ஒன்று செய்யுங்கள். பேப்பர் வரும்போது வரட்டும். அதன் மீதான ஆர்வத்தை அறவே நீக்கிவிடுங்கள். பேப்பர் படிப்பது தவிர உள்ள பிற நடவடிக்கைகளை குளிப்பது, இறை பிரார்த்தனை, காலை உணவு சாப்பிடுவது, உங்கள் வீட்டு வாசலில் கொஞ்ச நேரம் சாலைப் போக்குவரத்தை கவனிப்பது மேற்கொள்ளுங்கள். காலையிலேயே செய்திகளைப் படித்து விட்டு நீங்கள் சாதிக்கப் போவதுதான் என்ன? ரத்தக் கொதிப்பை அதிகரித்துக் கொள்வதைத் தவிர? எப்படியும் அச்சிடப்பட்ட செய்திகள் அப்படியேதான் இருக்கப் போகின்றன; மாறப்போவதில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: என் அப்பா!
Man reading newspaper | how to reduce BP naturally

ஆகவே காலை உணவுக்குப் பிறகு, விஸ்ராந்தியாக பேப்பர் படியுங்களேன். உங்கள் சினத்துக்குக் காரணமான செய்தி ஏதேனும் வந்திருந்தாலும், சாப்பிட்டிருப்பதால், வயிற்றில் கோப அமிலம் சுரக்காது; நீங்களும் ஒரு நிதானத்திற்கு வந்திருப்பீர்கள். விவேக சிந்தனை மனசுக்குள்ளும், மூளைக்குள்ளும் ஓடும். சரியா?‘‘

நாலைந்து நாட்களுக்கெல்லாம், ‘அட, மருத்துவர் யோசனைதான் எப்படி ஒர்க் அவுட் ஆகிறது!‘‘ என்று வியந்தான் திவாகரன். ‘‘என்ன முகத்ல புது தேஜஸ்!‘‘ என்று மனைவியும் வியக்கிறாள்!

logo
Kalki Online
kalkionline.com