

டாக்டர் பத்ரி ஊசி போடும் டாக்டர் இல்லை; மனிதர்களின் வாழ்க்கையை வளமாக்க ஊக்கமூட்டும் டாக்டர். சமூகத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும், முதியோர்களுக்கும் அவசியமான நல்ல பல கருத்துக்களை கட்டுரைகளாக பத்திரிகைகள் பலவற்றிலும் எழுதி வருபவர். அப்படி அவர் எழுதி, தினமணியில் வெளியான 86 கட்டுரைகளில் 38 கட்டுரைகளின் தொகுப்புதான் “வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்” என்கிற புத்தகம்.
நம் தேவையை நாம் அறிவோம் என்ற கட்டுரையில் இன்றைய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் யுகத்தில் எந்த அளவுக்கு நம் வாழ்க்கை நுகர்வோர் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.
பொருளின் அவசியத்துக்கும், தேவைக்கும் இடையில் உள்ள இடைவெளியை நாம் மறந்து விடுகிறோம். எதைப்பார்த்தாலும் உடனே வாங்கி விடுகிறோம். அந்தப் பொருளோ, சேவையோ நமக்கு தேவையா? இல்லையா? என்பதையெல்லாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. எல்லாம் உலகமயமாக்கலின் விளைவு” என்று கூறுகிறார்.
மறத்தலையும், மன்னிப்பையும் வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் “மறப்போம் மன்னிப்போம்” என்பது சொல்வதற்கு எளிது; ஆனால் நடைமுறையில் கடினம். குறிப்பாக பிறரால் நமக்கு நிகழ்ந்த கசப்பான சில நிகழ்வுகளை எளிதிலே மறக்க முடியாது” என வெகு யதார்த்தமாகக் கூறுகிறார்.
எல்லோரும் எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால், தோல்வியும் நமக்கு ஒரு நல்ல ஆசிரியர் என்பதை பிரபல “ஹாரி பாட்டர்” புத்தகங்களை எழுதிய ஜே.கே.ரௌலிங், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் “தோல்வியின் நன்மைகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை மேற்கோள்காட்டி, எளிமையாக விளக்குகிறார்.
மனிதநேயம் பற்றிய கட்டுரையில் “நமது உண்மையான மகிழ்ச்சி நமது மனநிறைவிலேயே உள்ளது. மனிதநேயம் அந்த மகிழ்ச்சியை நமக்கு விலையில்லாமல் கொடுக்கிறது. மனிதநேயத்தின் குணங்களைக் காட்டுவதற்கு ஒருவர் செல்வந்தராக இருக்க வேண்டியதில்லை. பிறர் மீதான அக்கறையை எளிய செயல்களின் மூலமாக வெளிப்படுத்தலாம்” என்று எழுதுகிறார்.
சோம்பல் பற்றிய கட்டுரையில், “எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டுமே சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல், ஒருமுறை மனதிற்குள் சோம்பல் நுழைந்துவிட்டால், அதன்பின் அதனுடைய ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. சோம்பல் நமது பொன்னான காலத்தை வீணாக்குகிறது. இது மிகவும் ஆபத்தானது. இதனால், நாம் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு பணி தேவையற்றதாகக் கருதப்படும்போது, அந்த நபரின் சோம்பலின் அளவும் அதிகரிக்கிறது” என்று சோம்பலின் ஆபத்தான குணாதிசயங்களைச் சொல்லி எச்சரிக்கிறார்.
மின்சார சேமிப்பு, நீரின் அருமை, நட்பின் அவசியம், மௌனத்தின் சிறப்பு, இளஞ்சிறார் குற்றவாளிகள், தயக்கத்தைத் தவிர்த்தல், உடல்மொழி உணர்த்தும் உண்மைகள், பெண்கள் பாதுகாப்பு, முதியோர் நலன், உறக்கத்தின் முக்கியத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறை, கடனில்லா வாழ்வு என்று புத்தகத்தில் வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு தடவை இந்தப் புத்தகத்தை முழுசாகப் படித்து முடித்தால் உற்சாக டானிக் குடித்தாற் போன்ற புத்துணர்ச்சி பெறமுடியும்.
புத்தகத்தின் தலைப்பு: வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்
ஆசிரியர்: முனைவர்.என்பத்ரி
வெளியூடு: புஸ்தகா டிஜிட்டல் மீடியா, பெங்களூரு
விளை: ரூ.190/-