கடனில் நல்ல கடன், கெட்ட கடன் கூட உண்டா விளக்குகிறார் - சோம. வள்ளியப்பன்!

புத்தக விமர்சனம்
book review in tamil
book review in tamil
Published on
Kalki Strip
Kalki Strip

“இக்காலப் பெற்றோர், தங்களின் சக்திக்கு மீறி பிள்ளைகளுக்காக பணத்தைச் செலவு செய்கிறார்கள். வரவுக்கு மீறி செலவு செய்கிறார்கள். தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்குகிறார்கள். நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் அகப்பட்டுக்கொண்டு, சிரமம் தெரியாமல் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அதற்காக அவர்கள் கடன் வாங்கவும் தயங்குவதில்லை. வருகிற வருமானத்தில் ஈ.எம்.ஐ. கட்டியே சோர்ந்து போகிறார்கள். இது இந்தக் காலத்துப் பெற்றோர்கள் செய்யும் பெரும் தவறு” என்கிறார் பங்குச்சந்தை முதலீடு குறித்து எல்லோரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாக பல புத்தகங்களை எழுதி இருக்கும் நிதி மற்றும் பொருளாதார ஆலோசகர் சோம. வள்ளியப்பன்.

பெரியவர்களுக்காக பல புத்தகங்கள் எழுதியுள்ள இவர், குழந்தைகளுக்காக முதன் முறையக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். தலைப்பு: “சிவப்பு நிற மிதிவண்டி”. கடன், வட்டி, லாபம் ஆகியவற்றில் தொடங்கி பணவீக்கம், முதலீடு, பரஸ்பர நிதி போன்றவை வரை, பணம் குறித்த பலவற்றையும் குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் வழியாக தெளிவாக எழுதி இருக்கிறார். ஆன்லைன் மோசடிகள், டிஜிட்டல் அரஸ்ட் உள்ளிட்ட சமகால பிரச்னைகள் குறித்தும் கூட எளிமையாக எழுதி இருப்பதைப் பாராட்டியே தீரவேண்டும்.

பணம் குறித்த அத்தியாயத்துக்கான கேள்விகளைக் கற்பனையாகத் தயாரிக்காமல், பள்ளி மாணவர்களிடம் கேள்விகளைப் பெற்று, அவற்றை உரையாடல்களில் நேர்த்தியாக இணைத்து விளக்கி இருப்பது மிகவும் அருமை.

அப்பா இளங்கோ, அம்மா கலைச்செல்வி, ஏழாம் வகுப்பு படிக்கும் அக்கா மல்லிகா, மூன்றாம் வகுப்பு மாணவனான தம்பி கபிலன் என்று ஒரு சிறிய குடும்பம். அப்பா பொருளாதாரம் தெரிந்தவர். அம்மா குடும்பத்தலைவி ஆனாலும் உலக அறிவும், அனுபவமும் கொண்ட புத்திசாலி. இவர்களை வைத்துத்தான் கதை நடக்கிறது.

இதையும் படியுங்கள்:
பணம் பாதாளம் வரை பாய்கிறதா? தொழில் தர்மங்கள் தடுமாறுவது ஏன்? ஒரு அதிரடி அலசல்!
book review in tamil

அப்பா, அம்மாவுடன் மல்லிகாவும், கபிலனும் கடைக்குச் செல்கிறார்கள். கபிலன் விரும்பிய ரிமோட் காரை வாங்கிக்கொடுக்கிறார் அப்பா. அவனுக்கு சந்தோஷம்தான். ஆனால், கடையில் இருந்த சிவப்பு நிற சின்ன சைக்கிளைப் பார்த்தவுடன், அதையும் வாங்கிக் கொடுக்கும்படி ஆசையாகக் கேட்கிறான். அவன் கேட்டதை வாங்கிக்கொடுக்க அப்பா இளங்கோவிடம் போதிய பணம் இல்லை. அதற்கான காரணத்தை அவனுக்குப் புரியும் மொழியில் அவர் விளக்குகிறார். அங்கே தொடங்குகிறது கதை. அப்படியே ஒவ்வொரு அத்தியாயமாக நகர்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி சாமானிய மக்களுக்கும் நிதி சார் கல்வி மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில், சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பொருளாதாரத்தைக் கதை வடிவில் கொடுத்திருப்பது புத்தகத்தின் சிறப்பு.

இந்தப் புத்தகத்தைப் பெற்றோர்கள் வாங்கிப் படித்துப் புரிந்துகொண்டு, இந்த புத்தகத்தில் வரும் இளங்கோ மற்றும் மல்லிகாபோல தங்கள் குழந்தைகளுக்கு பணம், வங்கி, பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை எளிதாகச் சொல்லிக்கொடுக்கலாம். அல்லது புத்தகத்தை வாங்கிக் கொடுத்து, அவர்களையே படிக்கச் சொல்லலாம்.

அதனால் அவர்களும் சிறு வயதிலேயே பணத்தின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். பிற்காலத்தில் பணத்தை விரயம் செய்யாமலும், அளவுக்கு மீறிய கடனில் மூழ்காமலும் இருக்க மிகவும் உதவியாக இருக்கும்.

புத்தகம்: சிவப்பு நிற மிதிவண்டி

ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம் ; மொபைல்: 9500045609

விலை: ரூ.210/-

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com