
ஏப்ரல் 28, திங்கள் கிழமை நடக்கவிருக்கும் பொது தேர்தல், கனடாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கனடாவில் தற்போது தாராளாவாத (லிபரல்) கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரதம மந்திரி மார்க் கார்னே, இவருக்கு முன்னால் ஒன்பது வருடங்களாகப் பிரதமராக இருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. 2021 பொது தேர்தலில், அவர் தலைவராக இருந்த லிபரல் கட்சி, 160 இடங்களைக் கைப்பற்றினாலும், பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. ஆகவே, அவர் கட்சிக்கு புதிய ஜனநாயகம் (நியூ டெமொக்ராட்) தன்னுடைய 24 பார்லிமென்ட் அங்கத்தினர் ஆதரவை அளித்தனர். ஜஸ்டின் ட்ரூடோ பிரதம மந்திரியானார். பிரதான எதிர்கட்சியான பழமைவாதிகள் (கன்சர்வேடிவ்) 119 இடங்களைப் பெற்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக கனடாவில் பணவீக்கம், அயல் நாடுகளிலிருந்து பெருமளவு குடியேற்றம், இதனால் ஏற்பட்ட வீட்டு வாடகை அதிகரிப்பு ஆகிய காரணங்களினால், ட்ரூடோ பொது மக்களின் ஆதரவை இழக்க ஆரம்பித்தார். மக்கள் மாற்றம் வேண்டுமென்று நினைக்க, எதிர்கட்சியான பழமைவாதிகள் கட்சித் தலைவருக்கு ஆதரவு ஓங்கியது.
இதனிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், புதிய ஜனநாயகக் கட்சி, தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. லிபரல் கட்சிக்குள்ளும் ட்ரூடோவிற்கு எதிர்ப்பு வலுக்க, ஜனவரி 6ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்தார். லிபரல் கட்சிக்கு புதிய தலைவராக மார்க் கார்னே பொறுப்பேற்று, பிரதம மந்திரி பதவியில் அமர்ந்தார். இவர், கவர்னராக கனடா வங்கியை நிர்வகித்து வந்தார்.
அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், கனடா 51வது மாநிலமாக, அமெரிக்காவின் பகுதியாக வேண்டும் என்று கூறி வருகிறார். மேலும், அமெரிக்கப் பொருட்களுக்கு கனடா அதிக வரி விதிப்பதாகக் கூறி, கனடாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரியை உயர்த்தியுள்ளார். இந்த சமயத்தில் பிரதம மந்திரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மார்க் கார்னே, அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிப்பதற்கும், அமெரிக்க, கனடா வர்த்தகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும், மக்களின் முழு ஆதரவைப் பெற்ற அரசு வேண்டும் என்று, கவர்னர் ஜெனரல் மேரி சைமனிடம், ஏப்ரல் 28, 2025 அன்று பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்டு, கவர்னர் ஜெனரல், பொதுத் தேர்தல் நடத்துவதற்கான உத்தரவை மார்ச் 23 ஆம் தேதி வழங்கினார்.
கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் எப்போதும் ஒரு குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும். பார்லிமென்டில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சம்மதத்துடன் இந்த நாள் முடிவு செய்யப்படுகிறது. முந்தைய தேர்தல் நடந்த வருடத்திலிருந்து, நான்கு வருடங்கள் கழித்து, அக்டோபர் மாதம் மூன்றாவது திங்கள்கிழமை பார்லிமென்ட் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி இந்த வருடம் அக்டோபர் 20 அன்று தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், அன்று தீபாவளி பண்டிகை தினம் என்பதால், தேர்தலை அக்டோபர் 27 அன்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. ஆனால், அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தால், பிரதம மந்திரி மார்க் கார்னே, தேர்தலை விரைவில் நடத்தப் பரிந்துரை செய்தார்.
ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பிரதம மந்திரி மார்க் கார்னே, தொழில் முறை அரசியல்வாதியல்ல. இவர் பேங்க் ஆஃப் இங்க்லாண்ட் கவர்னராக இருந்து, ப்ரெக்சிட் குழுமத்திலிருந்து பிரிட்டன் விலகிய போது ஆற்றிய பணி பலராலும் போற்றப்பட்டது. அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதரச் சிக்கலிலிருந்து நாட்டை வழி நடத்த அவருடைய பொருளாதார அறிவு உதவும் என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது.
பழமைவாதிகளின் கட்சித் தலைவர் பியரி பொலிவ்ரே, ட்ரூடோவிற்கு மாற்றாகக் கருதப்பட்டார். மக்களும், ஆட்சி மாற்றத்தை விரும்பியதாக கருத்துகள் நிலவின. ஆனால், அமெரிக்க குடியரசுத் தலைவரின் அதிரடி நடவடிக்கை, கனடாவில் ஒரு நிலையான அரசு தேவை என்றும், அதற்கு கார்னே பிரதம மந்திரியாக இருப்பது நல்லது என்றும் கருத்து நிலவுகிறது. ட்ரம்ப் அவர்களை பழமைவாதி என்று கருதுபவர்கள், அதைப் போன்ற பழமைவாதி பொலிவ்ரே பக்கத்திலிருந்து, லிபரல் பக்கம் சாய்கின்றனர்.
தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், கருத்துக் கணிப்பில் லிபரல் கட்சிக்கு 43.7 சதவிகிதம், மற்றும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 36.3 சதவிகிதம் இருப்பதாகக் கூறுகிறார்கள். மூன்று மாதத்தில், இந்த நிலை மாறியதற்கு முக்கிய காரணம் ட்ரம்ப் அவர்கள். அவரை, லிபரல் கட்சியின் “பீ டீம்” என்று யாரும் இதுவரை முத்திரை குத்தவில்லை.
கனடா தேர்தலில் சராசரியாக வாக்களிப்பது 70 முதல் 80 சதவிகிதம் இருந்தது. ஆனால் கடந்த தேர்தலில் அது 62.3 சதவிகிதமாகக் குறைந்தது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 28 மில்லியன். கனடாவில், தேர்தல் நாளிற்கு முன்னாதகவே வாக்குப் பதிவு செய்யும் வழிமுறையும் உண்டு. அதன் படி, ஏப்ரல் 18 அன்று வாக்குப் பதிவு நடந்து 2 மில்லியன் வாக்காளர்களுக்கு மேல் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். தேர்தல் நடக்கும் 28ஆம் தேதி விடுமுறை நாள் அல்ல. இரவு 9.30 வரை வாக்கு பதிவு செய்யலாம். வாக்குப் பதிவிற்கு பள்ளிகளில் ஏற்பாடு செய்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.
கனடா தேர்தல், சில சுவாரசியமான விவரங்கள்:
கனடாவில் இரண்டு மனிதர்களுக்கு தேர்தலில் ஓட்டு போடும் தகுதி கிடையாது. ஒருவர் கவர்னர் ஜெனரல். மற்றவர் தலைமை தேர்தல் அதிகாரி.
சிறையில் அடைபட்டிருக்கும் குற்றவாளிகளும் ஓட்டு போடலாம். பல ஜனநாயக நாடுகளில் குற்றவாளிகளுக்கு இந்த சலுகை கிடையாது.
2021 தேர்தலில் மொத்தம் 338 இடங்கள். மக்கள் தொகை அதிகரிப்பால், இந்த தேர்தலில் அது 343 ஆக உயர்ந்துள்ளது,
மக்களுக்கு அவர்கள் வாக்குப் பதிவு செய்ய வேண்டிய இடம், மற்றும் விவரங்களுடன் வாக்கு அட்டை தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஆனால், வாக்கைப் பதிவு செய்ய, இந்த அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை.