தீமை விளைவிக்கும் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே கிடையாது. புதிதாக மணமாகி வரும் தம்பதிகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடாமல் இருக்க முடியாது. நாடகக் குழுவினரும், போட்டிகளில் வெற்றி பெற்றவரும் திருஷ்டி கழித்த பின்னரே வீட்டிற்குள் செல்வர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவர்கள் எப்போதும் தாயத்தையோ அல்லது தங்களுடன் பல விசேஷ பொருள்களையோ எடுத்துச் செல்வது வழக்கம்.
பெர்லினைச் சேர்ந்த டாக்டர் செலிக்மேன் (Dr Seligmann – Berlin 1910) இரண்டாயிரத்து ஐநூறு பிரபலங்களின் கழுத்து, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் அணியும் காப்பு அணிகள் பற்றி ஆராய்ந்து உலகின் பிரபல புத்தகத்தை ஜெர்மானிய மொழியில் எழுதியுள்ளார்.
இந்தப் பட்டியல் நீண்டது என்றாலும், நமக்குத் தெரிந்த பிரபலமான சிலரை இங்கு பார்ப்போம்.
உலகின் ஆகப் பெரும் பணக்காரரான ராக்ஃபெல்லர் எதையும் எளிதில் நம்பாதவர்.
ஆனால் அவர் எப்போதும் பையில் ஒரு ஈகிள் ஸ்டோனை (Eagle Stone) வைத்திருப்பார். இதில் பல அதிர்ஷ்டத்தைத் தரும் கற்கள் இருக்கும். ஆட்டினால் அது சலசலவென சத்தமும் போடும். இது தன்னை எல்லா வியாதிகளிலிருந்தும் காப்பாற்றும் என்று அவர் நம்பினார். கப்பல் விபத்து உள்ளிட்டவற்றிலிருந்து தான் தப்பிக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.
கேம்பிரிட்ஜில் பணியாற்றிய பிரபலமான பேராசிரியர் ரைட் என்பவர் எதையும் நம்பாத சந்தேகப் பேர்வழி. ஆனால் அவர் இரவு பகல் எப்போதும் ஒரு தங்க மோதிரத்தை அணிந்திருப்பார். அதில் 12 ராசிகளும் பொறிக்கப்பட்டிருக்கும். அது கையில் இல்லாவிட்டால் தன்னால் வேலை பார்க்கவே முடியாது என்று அவர் சொல்வார். அவருடன் பணியாற்றிய ஒருவர் அவருடன் ஏற்பட்ட தகராறில் அவருக்கு கடவுள் பெயரால் சாபம் ஒன்றைக் கொடுத்து விட்டார். உடனடியாக அவரை ஒரு நோய் தொற்றிக் கொண்டது. அந்த சாபத்தினால் தான் தனக்கு அந்த நோய் வந்தது என்று அவர் நம்பினார்.
ரஷியாவை ஆண்ட ஜார் மன்னன் சிலுவை பொறிக்கப்பட்டிருந்த ஒரு மோதிரத்தின் மீது அபார நம்பிக்கை கொண்டவர். அது அவரது தாத்தாவைக் காப்பாற்றி வந்த மோதிரம். அதை அணியாமல் அவர் இருந்ததே இல்லை. ஆனால் ஒரு நாள் அதை அணிய அவர் மறந்து விட்டார். அன்று தான் அவர் கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாக 2009-ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு முடிய இருந்த பாரக் ஒபாமாவை அனைவரும் அறிவர். அவர் எப்போதும் அனுமனின் சிறிய சிலை ஒன்றைத் தன் பையில் வைத்திருப்பார். அது தனக்கு அளப்பரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது என்று 2016ல் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
1905ல் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியோடர் ரூஸ்வெல்ட் தன் கையில் எப்போதும் ஒரு தங்க மோதிரத்தை அணிந்திருப்பார். அதில் உள்ள நவரத்தினக் கல்லுக்கு அடியில் ஆப்ரஹாம் லிங்கனின் தலைமுடி இருந்தது.
அதை அவர் தனது விசேஷமான அதிர்ஷ்ட மோதிரமாக அணிந்து வந்தார்.
சந்திரனில் முதலில் கால் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ரைட் சகோதரர்களின் புரபல்லர் ஒன்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். அதை அவர் அதிர்ஷ்டமாகக் கருதினார்.
அதே அபல்லோ 11ல் சென்ற இன்னொரு விண்வெளிவீரரான மைக்கேல் காலின்ஸ் இந்தியாவிலிருந்து தருவித்த ஒரு ‘ஹாலோ லக்கி பீன்’ – ஐ ( Hollow Lucky Bean) அதிர்ஷ்டத்திற்காகவும் பாதுகாப்பிற்காவும் எடுத்துச் சென்றிருந்தார்.
தன்னைப் பாதுகாக்கவும் அதிர்ஷ்டம் பெறவும் அமெரிக்க ஜனாதிபதியான ஐஸன்ஹோவர், ஒரு அமெரிக்க வெள்ளி நாணயம், தங்கத்தினால் ஆன பிரிட்டிஷ் ஐந்து கினியா நாணயம் ஒன்று, பிரான்ஸ் நாட்டின் ஒரு ப்ராங்க் நாணயம் ஆகிய மூன்றையும் எப்போது பையில் வைத்திருப்பார்.
இப்படி உலக பிரபலங்களின் திருஷ்டி பற்றிய நம்பிக்கையையும் அதிர்ஷ்டம் தந்து துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் தொகுத்தால் அவை மிகப்பெரிய புத்தகங்களாக ஆகிவிடும்.