
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அதை விட முக்கியமாக அவர்களின் பெற்றோருக்கு மிகவும் கவலை தரும் கேள்வி, 'மேலே படிப்பதற்கு எந்த பாடத்தை தேர்ந்தெடுப்பது' என்பது தான்.
அந்த மாணவனுக்கு/ மாணவிக்கு இந்த பருவத்தில் ஏற்படும் மனஉளைச்சல் சொல்லி மாளாதது. தற்போதைய காலங்களில் அவர்கள் மிகவும் விபரமாக தகவல்கள் பெற்றிருந்தாலும் தேர்ந்தெடுப்பதும் அந்த பாதையில் பயணித்து வெற்றி பெறுவதும் பெரிய சவால். நகர்புற மாணவர்களுக்கு கூடுதலாக வாய்ப்புகளும், தகவல்களும், ஆலோசனைகளும் பெற்றாலும் குழப்பம் கூடுகிறதேயன்றி குறைவதில்லை. கிராமப்புற மாணவர்களுக்கு இத்தகைய வழிகாட்டல் குறைவே. முதல் தலைமுறை மாணவர் என்றால் இன்னமும் குறுகிய வாய்ப்புகளே தென்படுகின்றன .
எண்பது காலகட்டங்களில், மருத்துவம் அல்லது பொறியியலில் பட்டம் பெறுவதே மேன்மையான தேர்வு. அடுத்த நிலையில் ஏதாவது ஒரு அறிவியல் பட்டப்படிப்பு, அதுவும் இல்லையென்றால் கிடைக்கும் எத்துறையிலேனும் ஒரு பட்டம் என்றே படிநிலை இருந்தது. வெகு சிலரே பட்டயப்படிப்பு படித்தனர். இத்தகைய தேர்விற்கு படிப்பவரின் பின் புலம், பண பலம், தன்னார்வம், முனைப்பு என்று ஏகப்பட்ட உந்து சக்திகள் செயல்பட்டன.
அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில், இந்த பிம்பங்கள் வெகுவாக தளர்ந்து போயின. உயர் கல்வி வாய்ப்புகள் பல பெருகின. மற்ற மாநில, நாடு சென்று படிக்கவும், வாய்ப்புகள் வசதிகள் கூடின. மிக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பல பகுதிகள் சென்று பல புதிய தளங்களில் படிக்க வாய்ப்புகளும் கூடிப்போயின. ஆயினும் மருத்துவ NEET, பொறியியல் JEE தேர்வுகளும் இன்றும் கோலோச்சி கொண்டுதான் இருக்கின்றன.
மருத்துவத்திலேயே உப/சார்பு பிரிவுகள் பல வந்தாலும், வாய்ப்பும் வசதியும் இருந்தாலும் அதனை இரண்டாவது வாய்ப்பாகவே பார்க்கும் மனநிலை தொடர்கிறது. பொறியியல் பட்டதாரிகள் பெருகி அவர்களது வேலை வாய்ப்புகள் குறைந்து போனாலும் அதன் மோகம் இன்னும் குறையவில்லை.
வணிகம் படித்து பட்டய கணக்காளர்கள் ஆகும் சிறந்த வாய்ப்புகள் தென்பட்டாலும் அதனை தேர்ந்தெடுப்பவர்கள் விருப்ப மனுவாக அதனை தாக்கல் செய்வதில்லை. மருத்துவத்திலேயோ, பொறியியலிலேயோ சேர்ந்தவுடன் கிடைக்கும் கணிந்த பார்வை, இவர்களுக்கு இத்துறையில் சேரும் போது கிடைப்பதில்லை, வெற்றி பெற்றவர்களுக்கே கிடைக்கிறது.
இதே நிலை தான் சட்டம் படிப்பவருக்கும், குடிமை பணியை தேர்ந்தெடுப்பவருக்கும் நேர்கிறது. எதனை எப்படி கண்டுணர்ந்து ஒழுகுவது என்பது நம் போன்ற வளர்ச்சி நோக்கி, பல படிமங்களை கொண்ட சமூக கட்டமைப்பு கொண்ட நாட்டிற்கு பெரிய சவாலான கேள்விதான்.
நான்கு மற்றும் ஐந்து வருட மேல்படிப்புக்கு பிறகு மாறிவிடும் வாய்ப்புகளை யாரும் அனுமானிக்க முடிவதில்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கும் கோலோச்சிய துறைகள் நேற்றைய செய்திதாளாக மாறி விடும் அபயம் அவர்களுக்கு புரிவதில்லை.
மற்றொரு அபாயம், எல்லோரும் வெற்றியின் அளவுகோலாக வேலை மற்றும் சம்பளத்தை நிர்ணயிப்பது. மேம்பட்ட அறிவையோ, வளர்ச்சியையோ, விருப்பத்தையோ, திறமையையோ கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. யாரொருவரும் ஒரு தனித்தன்மையற்று பிறப்பதில்லை. உருவ வேற்றுமைகள் போல இதுவும் இயல்பானது, நிச்சயமானது. ஆர்வம், திறமை சார்ந்த துறையை தேர்ந்தெடுத்தால், அது எல்லோராலும் விரும்பப்படாத துறையாக இருந்தாலும், அதில் அறிஞனாவது சத்தியமே என்று பல சாதனைகளை சமூகம் காட்டினாலும், நாம் அதனை அறிந்துகொள்வதில்லை. பாடம் படிப்பதில்லை.
பொறியாளரிடம் சிறந்த பாடகனும், மருத்துவரிடம் சிறந்த விளையாட்டு வீரனும், பட்டதாரியிடம் கலைஞனும் ஒளிந்து இருக்கலாம். இதனை கண்டு தெளிய காலம் ஆர்வம் சூழல் வாய்ப்பு ஆகியவை துணை நிற்க வேண்டும். சிலருக்கு அவர்களது நடு வயதில் இது தெரியவந்து வாய்ப்புகள் கிடைத்து ஜொலிக்கலாம். பலருக்கும் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற வாய்ப்புகள் அமைவதில்லை என்பது அவனுக்கு இந்த சமூகமிழைத்த துரோகம் இல்லையா. அப்படிப்பட்ட திறமை கண்டுணரப்படாத ஒரு மனிதனின் வாழ்க்கை சராசரியாக கழிந்து போவது காலத்தின் சோகமில்லையா.
திறமை என்பது ஆர்வம் சார்ந்தும் அல்லது இயல்பு சார்ந்தும் வெளிப்படும் ஆற்றல். சிலருக்கு பெரிய பயிற்சி பெறாமல் பாடவோ, ரசனையாக பேசவோ, ஓவியம் தீட்டவோ, விபரங்களை விளக்கவோ இயல்பாக அமைந்திருக்கும். மற்ற சிலருக்கு ஆர்வம் ஏற்பட்டு சிறிய முயற்சியின், பயிற்சியின் மூலம் திறம்பட துறைசார்ந்து இயங்கும் ஆற்றல் வெளிப்படலாம். இதனை இனம்கண்டு ஊக்குவித்து, பாதுகாத்து அல்லது பயிற்சி கொடுத்து பிரகாசிக்க செய்வது மாணவன், பெற்றோர் மற்றும் ஆசிரியர் என்ற முக்கோண கூட்டு முயற்சியால் சாத்தியமாகும். இது மாணவனுக்கும் தெரியவதில்லை, பெற்றோருக்கும் புரிவதில்லை, ஆசிரியருக்கும் அறிந்துகொள்ள நேரம்/ஆர்வம் இல்லை.
அவர்களது இத்தகைய ஒளிந்திருக்கும் திறனை கண்டறிய பலவித முறைகள் உள்ளன. உதரணமாக அவர்களது செயல்பாடுகள் கண்காணிப்பது, அவர்களது நடவடிக்கைகளில் எதில் வெகு நேரம் அல்லது தன் முனைப்புடன் ஈடுபடுகிறார்கள் என்று கண்டுபிடிப்பது, ஊக்குவித்தால் ஆர்வம்/ திறமை வெளிப்படுகிறதா என்று பரீட்சிப்பது.
மேலும் அவர்களை மனநலம் (PSYCHOLOGY) சார்ந்து மேல் படிப்பினை தேர்ந்தெடுக்க செய்வது. இதற்கு இத்துறையில் இயங்கும் ஆலோசகர்களிடம் சென்று சில பல எளிய தேர்வுகள் (PSYCHOMETRIC TESTS) சம்பாஷனைகளில் (COUNSELLING) மூலம் அந்த மறைபொருளை கண்டுணர்வது. இத்தகைய எந்த முயற்சியும் யாரும் ஈடுபடுவதாகவே தெரியவில்லை.
நாம் இன்னும் பதில்கள் நோக்கி செல்லவில்லை; நமக்கு இத்தகைய கேள்வியே எழவில்லை என்பதுதான் காவிய சோகம்.