

விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது! அதற்குக் காரணம் மனிதத் தவறுகளாகவும் இருக்கலாம்; எந்திரங்களில் ஏற்படும் எதிர்பாராக் கோளாறுகளாகவும் இருக்கலாம்; பருவ நிலைக் காரணங்களாகவும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இழப்பு என்னவோ மனிதர்களுக்குத்தான்! நமது நாட்டைப் போன்ற பெரிய நாட்டில், அதிக மக்கட்தொகையும் கொண்ட பரந்த பிரதேசத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக என்றால் கூட அதிகக் கவலையின்றி இருக்கலாம். ஆனால், அன்றாடம் அடிக்கடி விபத்துகள் நிகழும்போது, அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது!
நம் நாட்டில் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து பல தவறுகள் நடந்து வருவதாகப் பல ஆண்டுகளாகவே குற்றச் சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன. அதிக லஞ்சமும், நிறைய இடைத் தரகர்களும் கோலோச்சும் துறையாகவே இது அறியப்பட்ட போதிலும், அதனைக் களைவதற்கான எந்தத் துரித நடவடிக்கைகளையும் அரசுகள் எடுப்பதாகத் தெரியவில்லை.
இந்தியன் தாத்தா போராடியதில் பத்தில் ஒரு பங்குப் போராட்டத்தையாவது அரசு நடைமுறைப்படுத்தி இருந்தால் விபத்துக்கள் குறைய ஆரம்பித்திருக்கும். சட்ட திட்டங்கள் அரசு தஸ்தாவேஜுகளிலும், அரசாங்க அலுவலகப் போர்டுகளில் மட்டும் இருந்தால் போதாது! அவை, உரியவர்களால் பின்பற்றப்பட வேண்டும். பின்பற்றாதவர்களை, அபராதம் மற்றும் தண்டனைகள் மூலம் பின்பற்றச் செய்ய வேண்டியது அரசின் கடமை!
‘திருடனாப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!’ என்பதெல்லாம் பழங்கதை! பட்டுக் கோட்டையார் பாட்டெழுதியபோது, விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்திருக்கவில்லை. இன்றைய நிலையோ, முற்றிலும் வேறு. மிகக் கொடிய கைதிகளை வெளியில் விடும்போது, அவர்கள் உடலில் சிப்பைப் பொருத்தி விட்டால், அவர்கள் நடமாட்டத்தை அங்குலம் அங்குலமாகக் கண்காணிக்கும் வசதி இன்றுண்டு.
பெயர் மாற்றங்களுக்கும், சிலைகள் நிறுவுவதற்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொட்டிச் செலவு செய்யும் அரசுகள், இவற்றைக் கருத்தில் கொள்ளாதது நமது துரதிருஷ்டமே!
சரி! விபத்துக்கள் நடைபெற பல காரணங்கள் இருந்தாலும், சில முக்கிய விதிகளில் அதிகக் கவனம் செலுத்தினால், அவற்றை நிச்சயமாகக் குறைக்க முடியும். ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
ஓட்டுனர் உரிமம்:
சாலையில் வாகனங்களை ஓட்ட அடிப்படைத் தேவை இதுதான்! நம்மூரில் 25-30% ஓட்டுனர்கள், ஓட்டிக் காட்டாமல் வீட்டில் இருந்த படியே இதனைப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மை அதுவாயின், ஆபத்து அதிகமே!
அத்தோடு ஓட்டிக் காட்ட சென்ற நண்பர் முதல் கியரில் வண்டியை நகர்த்தியதும், உடன் வந்த போக்குவரத்து அதிகாரி, போதுமென்று நிறுத்தச் சொல்லி உரிமம் வழங்கினாராம். நான் சுவிட்சர்லாந்தில் இருந்த போது உரிமம் வாங்க, ஓட்டிக்காட்ட சென்ற நண்பர் அரை நாள் காரை ஓட்டிக் காட்டிய பிறகே, அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஊர்ச் சாலை, நெடுஞ்சாலைகளில் ஓட்டிய பிறகு, சைடு பார்க்கிங், பேரளல் பார்க்கிங் என்று அனைத்தையும் செய்து காட்ட வேண்டும். சாலைகளில் ஓட்டுகையில், சாலை விதிகளை ஓட்டுனர் கவனித்துச் செயல்படுகிறாரா என்று பார்க்கிறார்கள். அவர்களுக்குச் சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும், நன்கு பயிற்சி பெற்று வருமாறு திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அங்கெல்லாம் 80 கி.மீ. வேகம் என்றால் அதில்தான் செல்கிறார்கள். 60 என்று அடுத்து வந்தால் வேகத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். யாம் கவனித்தவரை, நம்மூர் ஓட்டுனர்கள் யாருமே வேக அளவு போர்டுகளை மதிப்பதில்லை.
அதோடு, நம் ஓட்டுனர்களுக்குப் பொறாமை உள்ள அளவுக்கு நிதானம் இருப்பதில்லை. வெளி நாடுகளில் பின்னால் ஒரு கார் அவசரமாக வந்தால், ஏதோ அவசரம் போலும் என்று வழி விடுகிறார்கள். நம்மூர் ஓட்டுனர்களோ வழி மறிக்கிறார்கள். தங்களை முந்தி அடுத்தவர்கள் போகக் கூடாது என்ற எண்ணம், பெரும்பாலான ஓட்டுனர்களின் மனநிலை! ரத்தத்தில் கலந்து விட்டது அது! அதனை மாற்ற அவர்களுக்கு கவுன்சலிங் தேவை!
சாலைக்கோடுகள்:
வெளி நாடுகளில் பெரும் பாலும் ட்ராக் மாற மாட்டார்கள். மாற வேண்டிய சூழலில் இன்டிகேடர்களை ஒளிர விட்டு, மிக நிதானமாகவே ட்ராக் மாறுகிறார்கள். நம்மூரில் அவ்வளவு நிதானமெல்லாம் கிடையாது. இங்கு,சரியான இன்டிகேஷன்களும் கிடையாது! உதாரணமாக, நெடுஞ்சாலைகளில் ரைட் டர்ன், லெப்ட் டர்ன் எடுக்க வேண்டுமென்றால் அதற்கான லேன்களில் அம்புக் குறியிட்டு, அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே அலர்ட் செய்து விடுகிறார்கள் அயல் நாடுகளில்.
நம்மூரில் நேராகச் செல்பவர் சாலையை மறித்துக் கொள்ள, ரைட்டில் செல்ல வேண்டியவர் சங்கடத்துடன் காத்திருக்க வேண்டியுள்ளது. நமது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் ஊரப்பாக்கம் ஓவர் பிரிட்ஜ்க்கு அருகில் திரும்புகையில் படும் கஷ்டத்தை, அனுபவித்தவர்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும். நேரம், எரிபொருள் ஆகியவை வீணாவதுடன் ஓட்டுனர்களின் மன நிலையும் பாதிப்படைவதை நாம் கணக்கில் கொள்வதே இல்லை!
சாலைகளின் தரம்:
திரு வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நாற்கர சாலைகள் திட்டமே, நாட்டில் புரட்சி ஏற்படுத்திய ஒன்று. அச்சாலைகள் சரியான பராமரிப்பின்றிப் பல இடங்களில் பல்லைக் காட்டுகின்றன. மேன் ஹோல்களில் மேடு பள்ளங்களை நமது நாட்டில்தான் அதிகமாகக் காண முடிகிறது. இவ்வளவுக்கும் நமது பொறியாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள்!
பராமரிப்பு:
நாம் அதிகம் கோட்டை விடும் ஏரியா இதுதான்! சமீபத்திய விபத்து ஒன்றுக்கு முக்கியக் காரணமாகப் பேருந்தின் டயர் வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தனை கிலோ மீட்டர் ஓடினால் டயர் மாற்றப்பட வேண்டுமென்ற விதிகள் இருந்தும், 50, 60 உயிர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் டயர் வெடித்ததற்கு பராமரிப்பின்மைதானே காரணம்? உரியவர்களை உடன் கைது செய்திருந்தால் மேலும் அது போல நடக்காமல் இருக்க வழி பிறக்குமே! செய்தார்களா?
சாலை விதிகள்:
இங்கு சாலை விதிகள் ஏட்டில் மட்டுமே உள்ளன. ஆட்டோக்களும், டூவீலர்களும் எவ்வித விதிகளுக்கும் அப்பாற்பட்டவைகளா என்ன?அப்படித்தான் தோன்றுகிறது. நமது தமிழ் நாட்டில் எந்த அரசாலும் ஆட்டோ கட்டணங்களைச் சரி வர நிர்ணயம் செய்ய இதுவரை முடியவில்லையே! விதியை மீறுபவர்கள் மற்றவர்களின் விதியையும் முடித்து வைத்து விடுகிறார்களே! இதையெல்லாம் எங்கு போய் முறையிடுவது?
இப்படி இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சரி! இவற்றுக்கெல்லாம் என்னதான் காரணம் என்று ஆழமாகச் சிந்தித்தால் ஒரு புள்ளியில் வந்து நிற்க வேண்டியுள்ளது. அந்தப் பவர் புள்ளி! பணம்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையாக ஓட்டத் தெரியாதவர்களுக்கும் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. பணத்திற்காக சாலைகளின் தரங்கள் காவு கொடுக்கப்படுகின்றன. பணத்திற்காகத் தவறு செய்பவர்களும் தண்டனைகளிலிருந்து தப்பிக்க விடப்படுகிறார்கள். பணத்தாசையால் பராமரிப்பு சீர் குலைக்கப்படுகிறது.
பணமிருந்தால் எந்தத் தவறிலிருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் ஓட்டுனர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
பாதிக்கப்படும் குடும்பத்தினரும் அரசுகள் இழப்பீட்டு நிவாரண 2, 3 லட்சப் பணத்தில் திருப்தி அடைந்து விடுகிறார்கள்!
பணப் பேய் ஆட்சி செய்யும் வரை விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுப்பது கடினமே!