

பாரத ரிஷிகள் காட்டிய அற்புதமான வாழ்க்கை நெறிகளுள் முக்கியமானது அன்றாட தியானம் என்னும் ஒரு நெறி (Daily meditation practice). தியானத்தில் பல வகைகள் உண்டு. அனைத்தும் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மையையே தரும்.
மனதைத் தெளிவாக்கும் + மனநிலை தியானம்!
இந்த தியானத்தில் மனதை இன்றைய தினத்தில் இன்றைய கணத்தில் நீங்கள் எதை நினைக்கிறீர்கள், எதை உணர்கிறீர்கள், எதை அனுபவிக்கிறீர்கள் என்பதைப் பற்றி தியானம் செய்கிறோம். இதனால் உங்கள் எண்ணங்கள் மீது உங்களுக்கு ஒரு கட்டுப்பாடு ஏற்பட்டு சுவாசமானது மனதையும் உடலையும் நல்ல உயர்நிலைக்குக் கொண்டு செல்கிறது.
ஆழ்நிலை தியானம்:
மஹரிஷி மகேஷ் யோகி கற்பித்த இந்த தியானத்தில் ஒரு ஒலி அல்லது மந்திரத்தின் மீது கவனம் செலுத்தி மனமானது ஆழ்ந்த ஓய்வு நிலைக்குச் செல்கிறது. இதனால் ஏற்படும் பலன்கள் பல.
அன்பு தியானம்
இதில் உலகில் உள்ள அனைத்திலும் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறோம். உங்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று உலகளாவிய விதத்தில் இது விரிவுபடும். இதனால் உலகம் உங்களை நேசிக்க ஆரம்பிக்கிறது.
இன்னும் உடல் அங்கங்களை ஒவ்வொன்றாக தலையிலிருந்து பாதம் வரை அலசி ஆராய்வது ஒருவகை தியானம். இவை அனைத்துமே நல்ல பலன்களைத் தான் தரும்.
தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கவலையையும் மனச்சோர்வையும் நீக்குகிறது. க்ளினிகல் சைக்காலஜிஸ்ட் டாக்டர் ஜூலி ஸ்மித் (DR Julie Smith)- Clinical Psychologist) இது பற்றி நன்கு விளக்கி தியானத்தின் பலன்களைப் பற்றி வியந்து போற்றுகிறார்.
உணர்வு பூர்வமான ஆரோக்கியம் மற்றும் தெளிவான மனநிலையைத் தரும். தியானமானது ஆக்கபூர்வமான மனநிலையை ஏற்படுத்தும்.
டமரா லெவிட் (Tamara Lewitt) என்ற நிபுணர் தியானம் செய்வதால் அன்றாடம் மகிழ்ச்சியோடு வாழலாம் என்று ஆய்வுகளின் அடிப்படையில் உறுதியாகச் சொல்கிறார்.
கவனமும் ஒருமுனைப்பட்ட சிந்தனையும் தியானத்தினால் ஏற்படுகிறது. எப்படி? எப்படி? என்று கேட்டால் மூளையில் அமைப்பிலேயே தியானம் நல்ல மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பது ஜெஃப் வாரன் (Jeff Warren) என்ற ஆய்வாளரின் கண்டுபிடிப்பு.
தன்னைப் பற்றி அறிதலை தியானம் ஊக்குவிக்கிறது. உங்களது வெளி உலக வாழ்க்கை வேறு; உள் உலகம் எனப்படும் அந்தரங்க வாழ்க்கை வேறு. தியானம் உங்களை உள்முகமாகச் செல்ல வைத்து உங்களைப்பற்றி அறிய வைக்கிறது. அரிய ஆன்மீக அனுபவங்களை இதனால் பெறலாம். இதையும் டமரா லெவிட் உறுதிப்படுத்துகிறார்.
தியானம் உயரிய இரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உடல் நலம் ஓங்குகிறது. 2013ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் இதை அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் வலியுறுத்துகிறது. இது எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் இன்னும் கண்டுபிடித்தபாடில்லை. ஆனால் அன்றாட தியானத்தினால் இரத்த அழுத்தம் சீராக ஆவதை அவர்கள் வியப்புடன் ஒப்புக் கொள்கின்றனர்.
உலகியல் பற்றிய நமது அன்றாடப் பார்வையை தியானம் மாற்றுகிறது; வலியைக் குறைக்கிறது. தொடர்ந்து பல்வேறு வியாதிகளால், வலியால் அவதிப்படுவோர் தியானத்தின் மூலம் பயன் அடையலாம்.
தியானம் உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை நல்குகிறது. புத்துணர்ச்சியும், உற்சாகமும் நல்ல தூக்கத்தினால் அடைவதை அனைவரும் அன்றாட அனுபவத்தினால் அறிகிறோம். இந்த ஆழ்ந்த தூக்கத்தைத் தர வல்லது தியானமே.
தியானம் உடலின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. வியாதிகள் வராமல் இயல்பான எதிர்ப்பை அதிகரிக்கும் திசுக்கள் தியானத்தினால் வலுப்பெறுகின்றன.
தியானம் முதுமை அடைவதை மெதுவாக ஆக்குகிறது. தியானம் டயபடீஸைத் தடுக்கிறது. அல்ஜெமீர் வியாதி வராமல் பாதுகாக்கிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரைப் படிப்படியாக மீட்கிறது.
இந்த பலன்களை எல்லாம் மேலே கூறிய நிபுணர்கள் புத்தகங்கள் வாயிலாகவும் உரைகளாலும் (யூடியூபில்) விளக்குவதை இணையதளம் மூலமாக நன்றாக அறிய முடியும்.
ஆகவே அன்றாடம் தியானத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அமைதியான இடத்தில் செய்ய வேண்டும். நல்ல ஒரு குருவை நாடி இதை ஆரம்பிக்க வேண்டும். மூச்சைக் கட்டுப்படுத்தும் பிராணாயாமத்தை முறைப்படி குரு மூலமே கற்க வேண்டும். இல்லையேல் பக்க விளைவுகள் ஏற்படும்.
ஒரு டயரியில் தியான பலன்களையும் அனுபவங்களையும் குறிப்பது இதன் பலன்களைத் தானாகவே விளக்கும் என்பது தியானம் செய்வோரின் அறிவுரையாகும்.
தியானம் செய்வோம். உடல் நலத்தையும் மன நலத்தையும் மேம்படுத்துவோம்!