குருவுக்கு ஏன் இந்த முதலிடம்? - தாய், தந்தையை விட குரு ஏன் மேலானவர்?

Teacher's day
ஆசிரியர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்
Published on
Kalki Strip
Kalki Strip

மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக, ஆனால் கடவுளுக்கும் முன்னதான இடம் குரு என்றழைக்கப்படும் ஆசிரியர்களுக்குத்தான் என்பது எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும்! அதனால்தான் இதிகாசங்கள் குருவானவர்களுக்குச் சிறப்பளித்து முதல் மரியாதையை வழங்கியுள்ளன.

அன்னையும், தந்தையும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக உழைப்பதில் சுயநலமும், கடமையும் இருக்கிறது. ஆனால் மூன்றாம் நபராகிய ஆசிரியர், சமுதாய மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது, சுய நலமில்லாத பொதுநலத் தொண்டு.

அக்காலத்தில், அரச குமாரர்கள்கூட குருகுலங்கள் சென்று, அரச போகங்களையெல்லாம் விட்டு விட்டு, எளிமையாக வாழ்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துக் கல்வி முறைகளையும் கற்று வந்தார்கள். தன்னலம் கருதாத குருமார்கள், ஆரோக்கியமான, மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசர்களை உருவாக்கி, நாடுகள் சுபிட்சம் பெற உழைத்தார்கள். குருவானவர்களே நமக்கும் தெய்வத்துக்கும் பாலமாக இருந்து, ஆன்மிகம் தழைத்தோங்கவும் அடிகோலுகிறார்கள்.

தற்காலத்தில், இரண்டரை மூன்று வயதில் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் குழந்தைகள் இருபது, இருபத்திரண்டு வயது வரை ஆசிரியர்களின் அரவணைப்பில்தான் வளர்கிறார்கள்.

’உப்பிட்ட வரை நாம் உள்ள அளவும் நினைக்க வேண்டும்.’ என்று போதித்தவர்கள்தான் ‘எழுத்தறித்தவர் இறைவன் ஆவார்!’ என்றும் போதித்துள்ளார்கள்.

ஆசிரியர்களை மதிக்கும் நாடும், மதிப்புமிக்க ஆசிரியர்களைக் கொண்ட மண்ணும் உலகத்தில் சிறந்தோங்கும்! ஆசிரியர்கள் தங்கள் அயராத உழைப்பால் இளம்பிள்ளைகள் மனதில் எழிலான உலகத்தைத் தோற்றுவிக்கிறார்கள். நம்பிக்கை வித்தை, சிறுவயதிலேயே அவர்கள் மனதில் விதைத்து, அது விருட்சமாக வளர வழிகளை ஏற்படுத்துகிறார்கள். ’சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியாது’ என்று சொன்னதும், ’எங்க வாத்தியாரால் கூடவா முடியாது?’ என்று கேட்டானாம் பால்மனம் மாறாச் சிறுவன்!

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்தை 'பூஸ்ட்' செய்யும் பூசணி விதையின் 10 பயன்கள்!
Teacher's day

ஆசிரியர்மீது அவ்வளவு நம்பிக்கை!

ஆசிரியர்களும், பேராசிரியர்களும் சமூகத்துக்கு ஆற்றும் மகத்தான தொண்டு காரணமாகவே, இச்சமூகத்தால் அவர்கள் மிக உயர்ந்த இடங்களில் வைத்துப் போற்றப்படுகிறார்கள்.

பேராசிரியராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தமிழ்க்கடவுள் முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் பிறந்து (05.09.1888) தன் கடின உழைப்பால் அந்த நிலைக்கு உயர்ந்தார். கோழைத் தனத்தை வெறுத்துத் தையரித்துடன், திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, உயர்ந்தார்.

அவரின் திறமையை மதித்து, நமது நாடு அவரை முதல் குடி மகனாக்கி (ஜனாதிபதி) அழகு பார்த்தது. அந்தப் பெருமகனாரின் பிறந்த நாளில் ஆசிரியர்களைக் கௌரவிப்பது மிகுந்த சிறப்புக்குரியதுதானே! நாடு முழுவதும் உள்ள நல்லாசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் கௌரவிக்கப்படுகிறார்கள். அது சாதாரண கௌரவமல்ல, நாட்டின் முதல் குடி மகளால், அதாவது மேன்மைமிகு நமது ராஷ்டிரபதியால் சிறப்பிக்கப்படுகிறார்கள்!

பட்டி தொட்டிகளில், மலைப் பிரதேசங்களில், காடுகளைக் கடந்து உள்ள மூலை, முடுக்குகளில் உள்ள ஊர்களில், ஆசிரியப் பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

ஆழ்கடலில் மூழ்கி, மூச்சடக்கி முத்தை எடுத்து வரும் நண்பர்களைப்போல், நாட்டின் மூலை முடுக்குகளில் பிறந்து கிடக்கும் நல் முத்துக்களை அடையாளம் கண்டு, பொறுக்கிச் சேர்த்து மாலையாக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள், நம் ஆசிரியர்களே!

ஆசிரியர்களை மதித்து, அவர்களின் அறிவுரைகளை ஏற்றவர்களே சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதைப் பல உதாரணங்களால் விளக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்க வண்டில புகை அதிகமா வருதா..? அப்போ தமிழக அரசின் டார்கெட் நீங்க தான்..! ஏன் தெரியுமா?
Teacher's day

அதிலும் ஆசிரியர்களை நன்றியுடன் வாழ்நாள் முழுதும் நினைத்துப் போற்றுபவர்களே உன்னத இடத்தைப் பெற்று, உலகோர் மனதிலும் இடம் பிடித்து உலா வருகிறார்கள்!

‘ஏறிடும் கூட்டத்தை ஏற்றுவித்தே

அந்த ஏணி இருக்குமம்மா!’

என்ற வரிகள் உண்மையில் பொருள் பொதிந்தவைதானே!

உயரத்தில் ஏற ஏணியாக; நீர்பரப்பைக் கடக்கத் தோணியாக; உயரத்தில் பறக்க விமானமாக; இப்படி எல்லாமுமாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான்!

அந்த நல்ல ஆசிரியர்களை மதிப்போம்!

அவர்கள் உழைப்பைக் கொண்டாடுவோம்!

அவர்கள் பணியைப் பாராட்டுவோம்!

அவர்கள் சிறந்து வாழ வாழ்த்துவோம்!

அவர்கள் பணி மேலும் சிறக்கட்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com