நமது நாட்டில் ரயில்வேயின் பணி மகத்தானது! மிகுந்த பாராட்டுக்குரியது! நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து, குறைந்த செலவில், குறிப்பிட்ட நேரத்திற்குத் தங்கள் பணிக்குச் சென்று திரும்ப உதவுவதில் முதலிடம் ரயில்வேக்கே! அதுபோலவே பலரும் முக்கிய ஆன்மிக, சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களைக் கண்டுகளிக்க உதவுவதும் இந்தத் துறையே!
உதாரணமாக, ஊரப்பாக்கத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் சென்னை நகரின் முக்கியப்பகுதியான பீச் ஸ்டேஷனை அடைய உதவுபவை ரயில்களே!
வேறு எந்த வாகனத்தில் சென்றாலும் இவ்வளவு விரைவாக பாரீஸ் கார்னரைச் சென்றடையவே முடியாது என்பதே நிதர்சனம். இவ்வளவுக்கும் எவ்வளவு செலவில் என்றால்… பத்தே ரூபாயில்! வசதியுள்ளவர்கள் தற்பொழுது ஏசி ரயிலிலும் பயணிக்கலாம்-கூடுதல் கட்டணத்தில்!
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, தற்பொழுது பீச்-செங்கல்பட்டு வழித்தடம் முக்கியமானதாக அமைந்துவிட்டது. தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரையிலுமே தற்பொழுது வீடுகளும், நிறுவனங்களும், ஹோட்டல்களும், பெருங்களத்தூர் மற்றும் பரனூரில் ஐடி கம்பனிகளும், கல்லூரிகளும் நிறைய வந்து விட்டன, வந்து கொண்டும் இருக்கின்றன. கிளாம்பாக்கத்தில் புதிய பேரூந்து நிலையமும் வந்து, தாம்பரத்திற்கு அப்புறமும் ரயில் சேவையின் பங்கைக் கூட்டி விட்டன.
வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்திற்கும் இடையே, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனும் விரைந்து தயாராகி வருகிறது. இவையெல்லாம் எடுத்துக்காட்டுவது என்னவென்றால், தாம்பரத்தைத் தாண்டியும், தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையைப் போலவே, ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதுதான்.
சில நாட்களுக்கு முன்னர், தாம்பரம் சானடோரியத்திற்கு ஓர் அவசர வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது. சொந்தக் காரிலோ, கேபிலோ சென்றால் ட்ராபிக் ஜாம் காரணமாகத் தாமதமாகிவிடும் என்ற பயத்தில், ரயிலைத் தேர்ந்தெடுத்தேன்.
அட்டவணை நேரத்திற்கு வர வேண்டிய ரயில் ஊரப்பாக்கத்திற்கே 10 நிமிடங்கள் தாமதமாகத்தான் வந்தது. விசாரித்தபொழுது எல்லா ரயில்களுமே தாமதமாகத்தான் வந்து செல்வதாகத் தெரிவித்தார்கள். இப்படித் தாமதமாக வருவதாலேயே, அடுத்த ரயிலுக்குச் செல்ல வேண்டியவர்களுங்கூட வருகின்ற ரயிலில் ஏறி கூட்டத்தை அதிகப்படுத்தி விடுகின்றனர்.
சானடோரியத்தில் வேலையை முடித்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் வந்தேன். செங்கல்பட்டிற்கான ரயிலே இல்லை. வருகின்ற ஒவ்வொரு ரயிலின் போர்டைப் பார்த்து கண்கள் பூத்துப்போனதுதான் மிச்சம். ஏற்கெனவே ஒவ்வொரு நிலையத்திலும் கடற்கரை செல்லும் ரயில்கள் மற்றும் தாம்பரம் வரும் ரயில்களின் அட்டவணை தொங்க விடப்பட்டிருக்கும்.
நாம் வந்ததும் அடுத்த நமது ரயில் எப்போது வரும் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். இப்போது டிஜிடல் மயம் என்று சொல்லி, போர்டில் காண்பிக்கிறார்கள். பகலில் அது சரியாகத் தெரிவதுமில்லை; நாம் பார்க்கும்போது நம் மொழியில் ஒளிர்வதுமில்லை. ஒரு வழியாக எனது செல்லில் இருந்த அட்டவணை மூலம் பீச் ரயில் ஊரப்பாக்கம் வரும் நேரத்தைப் பார்த்தேன்.
எனக்கு ஒரே ஷாக். காலை 11.02 க்கு ஒரு ரயில் என்றும் அடுத்த ரயில் 12.02 க்கு என்றும் அது தெரிவித்தது. கிளாம்பாக்கத்தில் அந்த நேரத்தில் பஸ்ஸைப் பிடிக்க வேண்டியவர்கள் எப்படி வருவார்கள் என்று எண்ணியபோதே மலைப்பாக இருந்தது.
ரயில் அட்டவணை தயாரிப்பவர்கள் எப்படி இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு மணி நேர இடைவெளி விட்டார்கள் என்று புரியவில்லை.
சானடோரியத்தில் நான் தாமதித்த ஒரு மணி நேரத்தில், பீச்சிலிருந்து தாம்பரத்திற்கு ஆறு ட்ரெயின்கள் வந்தன. சிலவற்றில் கூட்டமே இல்லை. ஆனால் எல்லா வண்டிகளுமே 12 பெட்டிகளுடனே இயக்கப்பட்டன. வெளிநாடுகளில் பீக் அவர்சில் அதிகப் பெட்டிகளுடனும் மற்ற நேரங்களில் குறைவான பெட்டிகளுடனும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பவர் விரயம் தவிர்க்கப்படுகிறது. நாமும் அதனைப் பின்பற்றலாமே!
என்னைப்போலவே பலரும் செங்கல்பட்டு ரயிலுக்காகக் காத்திருந்ததை, ஒவ்வொரு ரயிலும் வரும்பொழுது அவர்கள் எழும்பி ஓடி வந்தது பார்த்ததையும், அது தாம்பரம் ரயில் என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் தங்கள் இருக்கைக்குத் திரும்பியதையும், ஓரிருவர் தங்கள் இருக்கையில் வேறு ஒருவர் அமர்ந்து விட்டதைக் கண்டு மேலும் ஏமாற்றமடைந்ததையும் காண முடிந்தது.
ஒரு சின்ன ‘மியூசிகல் சேர்’போட்டி நடப்பது போலிருந்தது. அதில் ஒருவர், சற்றே வயதானவர், என்னிடம் வந்து "செங்கல்பட்டு ட்ரைன் எப்போ சார் வரும்?" என்றார். "நானும் அதற்குத்தான் சார் வெயிட் பண்றேன்!" என்றதும் ஒவ்வொரு ரயில் வரும்போதும் அவர் என்னைப் பார்ப்பார்! இறுதியாக செங்கல்பட்டு வண்டி வந்தபோது, அலை மோதிய கூட்டத்தைப் பார்த்து அவரே ஓடிவந்து ஏறி விட்டார்.
குறைவான கட்டணத்தில் நிறைவான பணிகளைச் செய்வதையே சேவை என்றழைக்கலாம். அந்த விதத்தில் ரயில்வே துறை நிச்சயமாக மக்களுக்குச் சேவை செய்தே வருகிறது. ஆனாலும் அதனை இன்னும் செம்மையாகச் செய்தால் மக்கள் மனம் மகிழ்வர்; பாராட்டுவர்; திருப்தியான வாழ்க்கையை மேற்கொள்வர்.
உடனடியாக பீச் -செங்கல்பட்டு வழித்தடத்தில் 15 நிமிடங்களுக்கு ஒன்று என்ற நிலையில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ரயில்வே துறை உணர்ந்து செயல்படுமென்று நம்புவோம்.