இவருக்கு பதில் இனி - சினிமா உலகின் மறக்க முடியாத மாற்றங்கள்!

சினிமா முதல் அரசியல் வரை 'இவருக்கு பதில் இனி' என்ற மாற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியமான உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
சினிமா | Acting
சினிமா | ActingImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

'இவருக்கு பதில் இனி...' - இந்த தலைப்பு சற்று வித்தியாசமானது. இது தொலைக்காட்சி மெகா சீரியல்கள் குடும்பங்களை ஆக்கிரமித்து பிறகு வழக்கில் வந்தது. தற்போது அனைவருக்கும் பரிச்சமாகிய ஒன்றாகிப் போனது. TRP-ல் போட்டிப் போடும் சீரியல்களில், திடீரென்று ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஒருவர் மாற்றப்பட்டு வேறு ஒரு நடிகர் வருவார். அப்போது 'இவருக்கு பதில் இனி..' என்று போடுவார்கள்.

இது சீரியலில் மட்டுமல்ல சினிமா, திரைத்துறையிலும் நடந்துள்ளது.

பத்மினி பிக்சர்ஸ் அதிபர் திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் மக்கள் திலகம் அவர்களை கதாநாயகனாக போட்டு பல படங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் அகிலன் அவர்கள் எழுதி கல்கியில் 1964 ஆம் ஆண்டில் வெளிவந்த 'கயல்விழி' என்கிற வரலாற்று நாவல். இந்த கதையை பந்துலு அவர்கள் மக்கள் திலகம் நடிப்பில் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தார். இந்த படம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே பந்துலு அவர்கள் மறைந்தார்.

அதன் பிறகு சோலீஸ்வரர் கம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க மக்கள் திலகம் அவர்கள் இயக்குனர் பொறுப்பை ஏற்றார்.

'பூவே உனக்காக' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு விக்ரமன் விஜய் கூட்டணி 'உன்னை நினைத்து' என்ற படத்தில் இணைந்தது.

விஜய் லைலா இணைந்து பாடும் 'என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா' என்ற பாடல் எடுக்கப்பட்டது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி விஜய் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். பின்னர் சூர்யா கதாநாயகனாக நடித்து வெளியாகி படம் வெற்றி பெற்றது. சுமூகமாக தான் அவர் விலகினார் என்று விக்ரமன் அவர்கள் பலமுறை பேட்டிகளில் சொல்லி உள்ளார். விஜய் லைலா நடித்த அந்த பாடல் காட்சியை சமீபத்தில் அவர் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:
"WAIT பண்ணுங்க Sir..." - இந்த வார்த்தைக்கு பின்னால் இவ்வளவு அர்த்தமா?
சினிமா | Acting

'தேவர் மகன்' படத்தில் பஞ்சவர்ணமாக வந்து 'இஞ்சி இடுப்பழகி' பாடலில் அசத்தலாக அவரே பாடுவது போல நடித்திருப்பார் ரேவதி. அவரைத் தவிர வேறு யாராலும் அப்படி ஒரு நடிப்பை தந்திருக்க இயலாது.

இதிலும் ஒரு மாற்றம் வந்தது. முதலில் அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் மீனா. சில காரணங்களால் அவருக்கு பதில் ரேவதி நடித்தார்.

தனுஷ் நடித்த 'படிக்காதவன்' படத்தில் முதலில் வடிவேல் நடித்தார். சில பிரச்சினைகள் காரணமாக அவர் விலக அந்த வேடத்தில் விவேக் நடித்தார்.

அதே போல விக்ரம் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படத்தில் விவேக்குக்கு பதிலாக வடிவேல் நடித்தார். இரண்டு பேரும் இவருக்கு பதில் இனி இவர் என்று மாறினார்கள். இரண்டு படங்களின் காமெடியும் ஹிட்டானது.

"லால...லால...லா லல்லா.." என்று மெல்லிசை மன்னர் ட்யூன் போட்டால் 'வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா...' என்று எழுத கவியரசரால் மட்டுமே முடியும். "மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்..." - என்று எழுத வாலிப கவிஞரால் மட்டுமே முடியும்.

இதையும் படியுங்கள்:
Interview: செய்தித்தாளில் உணவு உண்பது ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவரின் விளக்கம்!
சினிமா | Acting

அவர்கள் இருவரும் சினிமா உலகின் இரு கண்களாக இருந்தவர்கள். இவர்களுக்கு பதில் வேறு ஒருவர், பலர் வரலாம். அவர்கள் பார்வை வேறாக இருக்கும். அது 'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்' என்று பாடிய புலமைப்பித்தன் அவர்களாகவும் 'இதயம் போகுதே எனையே பிரிந்தே..' - பிரிவின் துயரை பாடிய முத்துலிங்கம் அவர்களாகவும் இருக்கலாம்.

இவருக்கு பதில் இனி இவர் ஒரு தற்காலிக ஏற்பாடு. குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே அது பொருந்தும்.

சினிமா | cinema
சினிமா | cinemaImage credit: AI Image

கணக்கு ஆசிரியர் விடுமுறை எடுத்தால் அவருக்கு பதில் அந்த வகுப்புக்கு சில சமயம் உடற்பயிற்சி ஆசிரியரை அனுப்பி வைப்பார் தலைமை ஆசிரியர். அந்த நேரத்தில் அந்த வகுப்பு மாணவர்களுக்கு வேறு ஏதாவது ஒன்றை நடத்துவார்.

அரசியலில் தவிர்க்க முடியாத நேரங்களில் தற்காலிக ஏற்பாடாக இடைக்கால பிரதமர் என்று ஒருவரை நியமிப்பது உண்டு. குல்சாரிலால் நந்தா அவர்கள் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் மறைவுக்கு பிறகு இடைக்கால பிரதமராக பதவி ஏற்றார்.

கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவர் வருவார். அவர் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார். இதுவும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான்.

இவருக்கு பதில் இனி... நாம் அடிக்கடி பார்க்கும் ஒன்று தான். இதில் என்ன பெரிதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி வரும். இது சாதாரணமானது என்று எதையும் கடந்து போக முடியாது.

ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் விஷயங்கள் இருக்கும். கீழடி அகழாய்வு போல ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும். அடுத்தடுத்த சாதாரண தலைப்புகளை தேடிச் செல்ல வழிவகுக்கும்.

logo
Kalki Online
kalkionline.com