Interview: செய்தித்தாளில் உணவு உண்பது ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவரின் விளக்கம்!

Food in Newspaper | உணவுப் பாதுகாப்பு
Food in Newspaper | உணவுப் பாதுகாப்பு
Updated on
Kalki Strip
Kalki Strip

டீக்கடைகளில் போண்டா, வடை போன்றவற்றை செய்தித்தாளைக் கிழித்து அதில் வைத்துத் தருவார்கள். அதை சாப்பிட்டு விட்டு எண்ணெய் கையை அதில் துடைத்து கீழே எறிந்து விட்டு சென்று விடுவோம். இது அன்றாடம் நடக்கும் செயல்தானே என்று நினைத்தால் அது பெரும் தவறு. செய்தித்தாள்களில் உணவுகளைப் பொட்டலமாகக் கட்டுவதற்கும் பரிமாறுவதற்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மையில் உள்ள இரசாயனங்கள், நிறமிகள், பிணைப்பான்கள் மற்றும் வண்ணமூட்டிகள் ஆகியவை உணவு மூலம் உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதாகவும் 2018-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, உணவுகளைச் சேமிக்கவோ அல்லது பரிமாறவோ செய்தித்தாள்களைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும் தெருவோரக் கடைகள் முதல் பெரிய உணவகங்கள் மற்றும் ஆன்லைன் கிச்சன்கள் வரை அனைத்தும் தரமான பேக்கிங் மெட்டீரியல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உணவுப்பாதுகாப்புத் துறையால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் நிகழ்ந்து விடப் போகிறது எனும் அலட்சியத்துடன் இருப்பவர்கள் அறிந்து கொள்ள 30 வருடங்களுக்கு மேலாக அனுபவமிக்க சேலம் மருத்துவர் PM சுப்ரமணியம் (Prof Dr PM Subramaniam MD FCCP, FCIP , Retired Dean Consultant Pathologist) அவர்களிடம் கேட்டோம். இவர் நோய்களைக் கண்டறிந்து, அவற்றின் தன்மையை ஆய்வு செய்யும் (பேத்தாலஜிஸ்ட்) மருத்துவ நிபுணர் ஆவார். நமது கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக அவர் தந்த விழிப்புணர்வு விளக்கம் கீழே..

Dr. PM. Subramaniam
Dr. PM. Subramaniam
Food in Newspaper | உணவுப் பாதுகாப்பு
Food in Newspaper | உணவுப் பாதுகாப்புAI Image
Q

செய்தித்தாளில் உணவுகள் வைத்து தரும் அலட்சியங்கள் குறித்து..?

A

இது மிகவும் தவறான ஒன்று. டீக்கடை முதல் சிறிய உணவகங்கள் வரை போண்டா பஜ்ஜி வகையறாக்களை பேப்பரில் சுடச்சுட வைத்து தருவதும் அதை வாங்கி மீண்டும் ஒரு பேப்பர் வாங்கி அதன் இடையில் வைத்து நன்றாக அழுத்தி அதில் உள்ள எண்ணெயை உரிய வைத்து சாப்பிடுவதும் உடல் நலத்துக்கு எத்தனை தீங்கானது என்று அறியாமலேயே செய்து வருகிறோம் இது கடைகள் மட்டுமல்ல வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுதான்.

செய்தித்தாள்களில் உள்ள வண்ணங்கள் மற்றும் கருப்பு நிற மைகளில் உணவுப் பொருள்களை பாதிக்கும் நிறைய ரசாயன பொருள்கள் உள்ளது. உதாரணமாக புற்றுநோயை உருவாக்கும் காரணிகளான பென்சிடின் (Benzidine), பென்சீன் (Benzene), பாலிசைக்கிளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) போன்ற சில வேதிப்பொருள் காரணிகள் புற்றுநோய் அபாயத்தை உயர்த்தும் முக்கிய கார்சினோஜென்கள் (carcinogens) ஆகும்.

Q

வேதிப்பொருட்கள் தரும் தீமைகளின் விளக்கம்..?

A

பென்சிடின் எனும் செயற்கை வேதிப்பொருள் முன்பு துணி, காகிதம், தோல் போன்றவற்றின் நிறமிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தொழிலிடங்களில் இதைப் புழங்கும் நீண்டகால பணியாளர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் (bladder cancer) அபாயம் அதிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பென்சீன் பெட்ரோல், தொழிற்சாலை வேதிப்பொருட்கள், புகை போன்றவற்றில் காணப்படும் வேதிப்பொருள்.

அதிக அளவில் வெளிப்படும் போது இரத்த சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள், குறிப்பாக லுகேமியா (Leukemia) அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஹைட்ரோகார்பன்கள் குறிப்பாக PAHs நிலக்கரி, டீசல், பெட்ரோல், மரவிறகு, குப்பை போன்றவை முழுமையாக எரியாதபோது உருவாகும் வேதிப்பொருட்கள். புகை, கரிமாசு, டார் போன்ற கழிவுகள் சுவாசித்து உடலுக்குள் சென்ற பிறகு சில PAHs DNA-ஐ சேதப்படுத்தும் வகையில் செயல்பட்டு நுரையீரல், தோல், சிறுநீரகம், குடல் போன்றவற்றில் புற்றுநோய் அபாயம் உயரும்.

Q

இவற்றிற்கும் செய்தித்தாளுக்கும் என்ன சம்பந்தம்..?

A

செய்தித்தாள் உருவாக்கத்தில் இங்கு குறிப்பிட்ட அனைத்து ரசாயனங்களும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக செய்தித்தாள்களை அச்சிடப் பயன்படும் மையில் ரசாயனங்களுடன் வண்ணத்திற்காக ஏற்றப்படும் சாயங்கள், மற்றும் Lead போன்ற ஹெவியான உலோகங்கள் ஆகியவை உள்ளதால் சூடான, எண்ணெய் நிறைந்த பஜ்ஜி, வடை, சமோசா போன்ற உணவுகளை செய்தித்தாள்களில் வைக்கும்போது இந்த நச்சுகள் எளிதாக உணவில் ஊடுருவும் என்பதுடன் அந்த உணவை நாம் சாப்பிடும் போது நச்சுகள் நமது உடலுக்குள் எளிதாக சென்று உறுப்புகளை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

Q

இந்த ரசாயனக் கிருமிகள் பாதிக்கும் உடல் உறுப்புகள் எவை..?

A

செய்தித்தாள்கள் மட்டுமல்ல பார்சலில் கட்டி வரும் உணவு கூட பல வித நோய் தொற்றுகளை உருவாக்கும். உணவுச் செல்லும் வாய், உணவு குழாய், குடல் , சிறு குடல் , இரைப்பை ஆகியவற்றில் புற்றுநோய் அபாயங்களைத் தரும். மேலும் ரசாயனக் கிருமிகள் சிறுநீரகங்கள், ரத்தக்குழாய்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களை பாதிக்கும். சமயத்தில் மாரடைப்புக்கும் காரணமாகலாம். இன்னும் சொல்லபோனால் ஆணின் இனவிருத்தி விந்துக்கள் மற்றும் முட்டைகள் உற்பத்தியைப் பாதிக்கும்.

இதையும் படியுங்கள்:
கண்கள் சோர்ந்து போகிறதா? கண் பாதுகாப்பு குறித்த நிபுணர் தரும் 'நச்சுனு 4' பதில்கள்!
Food in Newspaper | உணவுப் பாதுகாப்பு
Q

மேலும் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்..?

A

செய்தித்தாள் உருவாகும் விதம் பற்றி பார்த்தோம். அது எப்படி நமது கைகளில் வந்து சேர்கிறது என்று தெரியுமா? ஓரிடத்தில் தயாரிக்கப்பட்ட செய்தித்தாள் பல இடங்களில் பலரது கைமாறி வரும். அது மட்டுமின்றி சுகாதாரமற்ற சாக்கடை ஓரங்களின் மேற்பரப்பின் மீது வைத்து பிரிக்கப்பட்டு அடுக்கும் நடைமுறையில் தரை, தூசி, கிருமிகள் இருக்கலாம். குறிப்பாக சாக்கடை நீரில் உள்ள அமீபா , ஈக்கோலை, சால்மன் போன்ற கிருமிகளால் அதில் வைக்கும் உணவுகள் உள்ளே போனதும் வயிற்றுப்போக்கு டைபாய்டு போன்றவைகளால் பாதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
ENT பிரச்னை: நாம் செய்யும் தவறுகள் என்ன? ENT நிபுணர் தரும் 'நச்சுனு 4' பதில்கள்!
Food in Newspaper | உணவுப் பாதுகாப்பு
Q

இதை தடுக்கும் முறைகள் மற்றும் உங்கள் ஆலோசனை..?

A

செய்திதாளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து அதற்கு மாற்றாக வாழை இலை உணவுக்கான ஒயிட் பேப்பர் (food-grade wrapping paper) ஸ்டீல் அல்லது தரமான உணவு பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற பாதுகாப்பான முறைகளில் உணவுகளை வைத்து தரலாம். அதிக எண்ணெயைத் தவிர்க்கும் விதமாக சமைத்தால் நல்லது.

சில குழந்தைகள் காகிதக் கப்பல் போன்றவற்றை செய்து நீரில் விடுவதைப் பார்ப்போம். சிலர் வீட்டில் இருக்கும் பேப்பர் கழிவுகளை அருகிலுள்ள நீர்நிலைகளில் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தயவுசெய்து இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். நீரில் இந்த ரசாயனங்கள் கரைந்து குடிக்கும் நீர் வழியாக கூட பாதிப்பை ஏற்படுத்தும். பசுமையான உலகமும் ஆரோக்கியமான வாழ்க்கையும் நமது செயல்களிலேயே உள்ளது.

நல்லதொரு விழிப்புணர்வை தந்த மருத்துவருக்கு நமது நன்றிகள்.

இனி மறந்தும் உணவுகளை வைக்க செய்தித்தாள் பயன்படுத்தும் பழக்கததைத் தவிர்ப்போம்.

logo
Kalki Online
kalkionline.com